Blogger Widgets

Total Page visits

Friday, March 8, 2013

பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

காலத்தின் போக்கில் மனிதர்கள் மாறும் விதம் எப்போதுமே சுவாரசியமானதுதான். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்று சற்று திரும்பி நம் சென்ற தலைமுறைகளைப் பார்த்தால் புரியும்.

என் தாத்தா பாட்டியை பெயர் சொல்லி அழைத்தது இல்லை என்று சொல்லுவார்கள். இன்னும் எனக்குத் தெரிந்த பழைய தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பெயர் சொல்லி அழைத்தது இல்லை. மனைவியை அழைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் - "ஏய்", "இந்தா", "இங்கே வா", "அடியே", "டீ....." மனுஷி, "அவ", "ம்".... இன்னும் சில. அந்த கடைசியில் சொன்ன "ம்" க்கு கூட எத்தனை சக்தி தெரியுமோ? ஒரு கனைப்பு, ஒரு உறுமல், என்று மனைவியை அழைக்கும் "வார்த்தைகள்" பல உண்டு. சின்ன தாத்தா ஒருவர் தன் மனைவியை "இந்தா" என்று அழைக்கும் தொனியிலேயெ அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று பாட்டிக்கு புரிந்து போய்விடுமாம். 
 
கடுப்பாக, சாந்தமாக, கோபமாக, எரிச்சலாக, அன்பாக என்று. அந்த "இந்தா" வில் ஆயிரம் உணர்வு வெளிப்பாடு இருக்குமாம். எப்போதும் மனைவியிடம் ஒரு கடு கடு முகத்துடன்தான் பேசுவாராம். ஏன்? ஆங்....அதெப்படி? கணவன் மனவி தங்கள் அன்பை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது மகா குற்றமாயிற்றே? முகத்தில் கொஞ்சூண்டு சிரிப்புடன் பேசினாலே பெண்டாட்டிதாசன் என்று சொல்லிவிடுவார்களே....? 
 
அப்புறம் ஆண் என்கிற இமேஜ் என்ன ஆவது? தவிர இப்படி உருட்டி, மடக்கி கொஞ்சம் முறுக்காக இருந்தால்தான் "அவர்கள்" ஒரு "நிலையில்" இருப்பார்கள். "கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு. இவர்களுக்கு அதிகாரம் தலைக்கு ஏறிடும்." இது பரவலாக அந்த தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பற்றி சொல்லும் கமெண்ட். விதி விலக்குகள் உண்டு.. எங்கள் குடும்பத்திலேயே கூட. ஆனால் விதிவிலக்கு என்றுதான் சொல்கிறேன். பரவலாக மனைவி என்பவள் தன் உடமை, தனக்கு அடிபணிந்தவள், அடிபணிய கடமைப் பட்டவள் என்ற மனப்பான்மை ஓங்கியிருந்த காலம் அது. 
 
வேறொரு தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கருப்பு/ வெள்ளை புகைப்படம் ஒன்றை அந்த தாத்தாவின் சந்ததியினரின் வீட்டில் பார்த்தபோது தோன்றிற்று. போட்டோவில் பாட்டியின் முகத்திலும் தாத்தாவின் முகத்திலும் " Cheese" சொல்லும் அளவு புன்னகை ! எப்போதும் மனைவியிடம் கடுகடுக்கும் அவருக்கு எப்படி அன்று முகத்தில் புன்னகை வந்தது என்று எனக்கு ஒரு எக்குத் தப்பாய் ஒரு கேள்வி தோன்றும். சரிதான், அதுவும் போட்டோ என்கிற "சாஸ்திர" கட்டுபாட்டிற்கு உடன் பட்டிருப்பார் என்று நானே பதிலும் சொல்லிக் கொள்வேன்.

இன்னொரு நண்பர் வீட்டில் பெரியப்பா ஒருவர். வீட்டில் எல்லோரும் அரட்டை, ஆட்டம் என்று கொட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பெரியப்பாவின் வண்டி சத்தம் வாசலில் கேட்டதுமே அவரவர் சிட்டாய் மூலைகளுக்கு பறந்துபோய் ரொம்ப மும்முரமாய் "வேலை" பார்ப்பார்கள். இவருக்கு மெள்ளவே பேசத்தெரியாது. எப்பவும் மிரட்டலும் அதிகாரமும்தாம். ஆனால் இவ்ருடைய மனைவி நேர் எதிர். நகைச்சுவையொழுக பேசுவார். சிரிக்க சிரிக்க வீட்டு சமாசாரங்கள் பேசுவார் என்று சொல்வார்கள். நன்றாக பாடவும் பாடுவார். ஆனால் தனக்குள்ளேயேதான். தாத்தா காதில் விழாமல். ஊக்கம் கொடுத்திருந்தால் பெரிய பாடகியாகவே வந்திருப்பார். இன்னொரு பழைய தலைமுறை உறவினர், மருமகளுடன் கூட நேருக்கு நேர் பேச மாட்டார். மருமகள் என்பவள் வீட்டில் ஏவலுக்கு இன்னொரு ஆள். இதை இங்கே வை; அதை கொண்டுவா... தோட்டக்காரன் வந்தானா? என்று கேள்விகள், கட்டளைகள் பொதுவாக இருக்கும். யாரைச் சொல்கிறார் என்று மருமகள் புரிந்து கொள்ள வேண்டும். 
 
இதெல்லாம் தவிர, பெண்களின் பிரத்தியேக இயற்கை உபாதை நாட்களில் இந்த மாதிரி பழைய தலைமுறை சம்பிரதாயம் இருக்கும் வீடுகளில் பெண்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மாட்டுத் தொழுவம்தான் இருப்பிடம். ஊர்வன, நெளிவன எப்போ வந்து தாக்குமோ என்று பயந்த வண்ணம் பகல் பொழுது கழியும். சில வீடுகளில் பெரிய மனது பண்ணி இரவு வேளைகளில் மட்டும் பின் பக்க தாழ்வாரத்தில் இடம் கிடைக்கும். வீட்டு ஆண்கள் இந்த சமயத்தில் தீட்டு பெண்களைப் பார்க்ககூட மாட்டார்கள். மாமியார் அல்லது வீட்டில் மற்ற பெண்கள் நாலடி தூரத்தில் வைக்கும் சாப்பாடு பெரும்பாலும் பரிதாப நிலையில் இருக்கும். முறுக்கு போன்ற திண்பண்டங்கள் கிரிகெட் பால் கணக்கில் விட்டெறியப்படும்போது சாமர்த்தியம் இருந்தால் கேட்ச் பிடித்துக் கொள்ளலாம்.

சரி, மேடையில் திரை மாறுகிறது. வருடம் 2000 சொச்சம். மேலே சொன்ன உறவினர்களின் அடுத்த தலைமுறை குடும்பங்களைப் பார்க்கிறேன். அவர்களுடைய மகன்கள், மகள்கள் என்று குடும்பம் விரிந்துள்ளது. ஆனால் பார்வையில்தாம் எவ்வளவு வித்தியாசம்? அறுபது வயதாகும் குடும்பத் தலைவர் தன் மனைவியுடனும், மருமகளுடனும் தோழமையுடன் பேசுகிறார். சினிமா, அரசியல் என்று வீட்டுப் பெண்களும் ஆண்களும் ஒன்று சேரும்போது கலகலவென்று சபை கூடுகிறது. மன வித்தியாசங்கள் இல்லாமல் இல்லை. அவையும் நேருக்கு நேர் பேசப்பட்டு சரிபடுத்தப் படுகிறது.

வெளியில் ரயில் பயணம் செய்யும்போது அடிக்கடி கன்ணில் படும் ஒரு காட்சி. மனைவிக்கு அனுசரனையாக கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் இளம் கணவர்கள். இரவு குழந்தை அழும்போது தன்னிச்சையாக நீ படுத்துக்கோ, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் கணவர்கள். முகம் சுளிக்காமல் குழந்தை ஈரம் செய்தால் துணி மாற்றி பால் கரைத்து.... வெளியில் ஓடிப்போய் பழம் பிஸ்கெட் வாங்கி... மனைவிக்கு பிடிக்கும் என்று தேடிப் போய் பெண்கள் பத்திரிகை வாங்கி.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்... சில சமயம் மனசு நெகிழ்ந்துதான் போகிறது.

ஆண்கள்தாம் எவ்வளவு மாறிவிட்டனர் ?? !!

மகளிர் தினத்தில் மாறி வரும் ஆண்களுக்கு ஒரு "ஓ" போட வேண்டாமா? :-)

No comments: