இந்திய அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில், முதுகு வலியால் அவதிப்பட்டு
வரும் ஆஸி. அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு பதிலாக துணை கேப்டன் ஷேன்
வாட்சன் தலைமை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ,
ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து
வருகிறது. சென்னை மற்றும் ஐதராபாத் போட்டிகளில் ஆஸி. அணி படுதோல்வி
அடைந்தது. இந்த நிலையில், பயிற்சியாளரின் கட்டளைக்கு பணிய மறுத்ததாக துணை
கேப்டன் வாட்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்டின்சன், ஜான்சன், அதிரடி
பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா ஆகிய 4 வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
இவர்கள் நால்வரும் மொகாலி டெஸ்டுக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என ஆஸி.
அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த வாட்சன் உடனடியாக நாடு
திரும்பினார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவும் அவர் முடிவு
செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. மொகாலி டெஸ்டிலும் தோல்வியடைந்த ஆஸி. அணி
0,3 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.
இந்த நிலையில், வாட்சன் மீண்டும் இந்தியா வந்து அணியுடன் இணைந்துள்ளார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால்,
டெல்லியில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் அவர் விளையாடுவது
கேள்விக்குறியாகி உள்ளது. நேற்றைய பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து டெல்லி டெஸ்டில் வாட்சன் கேப்டன் பொறுப்பேற்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து உறுதி செய்ய ஆஸி. அணி
நிர்வாகம் மறுத்துவிட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இதில் இறுதி
முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment