ஐ.பி.எல். எல்லாம் ஆரம்பிக்காத நேரமது. நவ
நாகரிக இளைஞராக கைகளில் டாட்டூ குத்திக் கொண்டு, லேசாக முறுக்கிவிட்ட
மீசையுடன் சிங்கம் போல உறுமிச் செல்லக்கூடிய 1000 சிசி Suzuki Hayabusa
பைக்கில் பயிற்சிக்கு வந்தார் தில்லி அணி வீரரான ஷிகர்தவன். முன்னாள்
கிரிக்கெட் வீரர் ஒருவர், பைக்கைப் பார்த்து வாயைப் பிளந்து, தவனிடம்
விசாரிக்கிறார். பைக் என்ன விலை?" 25 லட்சம் சார்." இதற்கு ஏன் பைக்
வாங்கினா? மெர்சிடஸ் காரே வாங்கியிருக்கலாமே?" அடுத்ததா அதையும்
வாங்குவேன் சார்!"
இதுதான்
ஷிகர் தவன். முதல் டெஸ்ட் ஆடுகிற ஒரு வீரரின் வயிற்றுக்குள் எத்தனை
பட்டாம் பூச்சிகள் பறக்கும்! மொஹலியில் ஷிகர் தவன் அடித்த செஞ்சுரியைப்
பார்த்த யாருக்குமே இது அவருடைய முதல் டெஸ்ட் என்கிற எண்ணம்
தோன்றியிருக்காது. செஞ்சுரி அடிக்கும்வரை எந்தப் பந்தையும் உயர அடிக்காமல்
அதேசமயம் கடகடவென ரன்களைக் குவித்த ஸ்டைலைக் கண்டு கிரிக்கெட்
நிபுணர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள் எல்லோரும் மிரண்டு போனார்கள். இது
நம்பவே முடியாத ஆட்டம் என்று வர்ணித்தார் ராகுல் டிராவிட். ‘இளம் சூறாவளி
ஒன்று ஆஸ் திரேலியாவை துவம்சம் செyதுவிட்டது’ என்று தவனின் ஆட்டத்தை
வர்ணித்தன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். ஷேவாக்குக்கு மாற்று வேறு யாருமில்லை,
நான்தான் என்று அந்த ஒரு ஆட்டத்திலேயே நிரூபித்துவிட்டார் தவன். 20, 25
வயதுக்குள் சச்சின், தோனியின் தோளை உரசியபடி சர்வதேச கிரிக்கெட்டில்
இளைஞர்கள் அறிமுகமாகிற காலமிது. தவனின் கெட்ட நேரம், அவரால் 27 வயதில்தான்
இந்திய டெஸ்ட் பிளேயராக முடிந்தது.
2004ல் நடந்த U19 உலகக்கோப்பையில்,
தவன்தான் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தவனுக்கு
அடுத்ததாக அதிக ரன்கள் குவித்த அலிஸ்டர் குக், இன்றுவரை 88 டெஸ்டுகள் ஆடி,
24 செஞ்சுரிகள் அடித்து சச்சினின் சாதனைகளை விரட்டும் மகா சாதனையாளராகி
விட்டார். அதே U19 உலகக்கோப்பையில், இந்திய அணியில் இடம்பெற்ற சுரேஷ்
ரைனா, ராபின் உத்தப்பா, ஆர்.பி. சிங், திணேஷ் கார்த்திக் ஆகியோரும் ஏராளமான
சர்வதேச மேட்சுகள் ஆடிவிட்டார்கள். உலகக்கோப்பை முடிந்த கையோடு அந்த வருட
ரஞ்சிப் போட்டியிலும் ஷிகர் தவன் அதிக ரன்கள் அடித்திருந்தார்.
துரதிருஷ்டம், அந்த இளம் வயதில் தவனின் திறமையை யாராலும் உணரமுடியவில்லை.
2010ல் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. ஆனால், ஆடிய 5
ஆட்டங்களில் தோல்வியையே சந்தித்தார் தவன்.
9
வருடங்கள் ரஞ்சியில் தொடர்ந்து ரன்கள் குவித்த போதும் டெஸ்ட் அணியில்
இடம் கிடைக்கவில்லை. இவரை விடவும் இளையவர்களான கோலி, புஜாரா ஆகியோர் இந்திய
டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்களானார்கள். ஆனால், ஐ.பி.எல்.-லில் ஆடிய
பிறகுதான் கிரிக்கெட் ரசிகர்களிடம் தவனுக்கு முறையான அறிமுகம் கிடைத்தது.
‘தொடர்ந்து சிறப்பாக ஆடியும் வாய்ப்புகள் கிடைக்காததால் மிகவும் துவண்டு
போனார் தவன். முயற்சிக்குப் பலனே இல்லாமல் போனால் என்னதான் செய்வது என்று
வருந்திய காலங்களும் உண்டு.
ஒரே ஒரு தங்கமான வாய்ப்புக்குக்
காத்திருந்தார். கிடைத்தவுடன் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்’
என்று மகிழ்கிறார் தவனின் பயிற்சியாளரான தரக் சின்ஹா. இப்போது, தவன் ஒரே
நாளில் நட்சத்திரமாகி விட்டார். விஜயும் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்து
வருகிறார். இந்திய அணிக்கு அடுத்த ஷேவாக் - கம்பீர் கிடைத்து விட்டார்கள்
என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தவனின் பதில் என்ன? ‘ஷேவாக்கும்
கம்பீரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். நானும் முரளி
விஜயும் அவர்களுடைய சாதனையை ஒரே நாளில் தொட்டுவிட முடியாது,’ என்கிறார்.
டிராவிட், லஷ்மண், ஷேவாக், கங்குலி, ஹர்பஜன் சிங், கும்பிளே போன்ற
ஜாம்பவான்கள் இல்லாத இந்திய டெஸ்ட் அணியை இரண்டு மூன்று வருடங்களுக்கு
முன்னால் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று கோலி,
புஜாரா, தவன், விஜய், அஸ்வின், ஓஜா என ஒரு புதிய இளைஞர் பட்டாளம்
துணிச்சலுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னுக்குக் கொண்டு
செல்கிறது. அடுத்ததாக மிக முக்கியமான தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,
இங்கிலாந்து டூர்கள் இருக்கின்றன. அந்த அமிலச் சோதனையைத் தாண்டுவதில்தான்
இவர்களுடைய எதிர்காலம் அடங்கி இருக்கிறது.
இந்த பதிவு மழைக்காகிதம் எனும் வலை பக்கத்தில் இருந்து அனைவரும் படித்து அறிய வேண்டி பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment