Blogger Widgets

Total Page visits

Thursday, March 21, 2013

டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெறுகிறாரா சச்சின்

 
டில்லி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெறுவார் என கூறப்படுகிறது.

 இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. இதுவரை, 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் (49 சதம், 96 அரைசதம்), 197 டெஸ்டில் 15,804 ரன்கள் (51 சதம், 67 அரைசதம்) எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் தேர்வு செய்யப்படாமல் போக, திடீரென ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். விரைவில் 40 வயதை பூர்த்தி செய்யவுள்ள சச்சின், சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறுகிறார்.

கடந்த 2011, ஜனவரியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பின், இதுவரை பங்கேற்ற 20 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் (8, 8, 76, 5, 2, 81, 13, 7, 37, 21) இரு முறை அரைசதம் கடந்தார்.

"ஒவ்வொரு தொடரில் பங்கேற்பது குறித்தும், யோசித்து தான் முடிவு செய்கிறேன். எனது உடல் ஒத்துழைக்கும் வரை கிரிக்கெட் போட்டியில் தொடர்வேன், ' என, சச்சின் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், மொகாலி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தவிர, முரளி விஜய், தவான், புஜாரா, விராத் கோஹ்லி, ஜடேஜா என, அடுத்த தலைமுறை தயாராகி விட்டதால், சச்சினுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி வரும் டிசம்பரில் தான் தென் ஆப்ரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அடுத்து, 2014 ல் நியூசிலாந்து (பிப்ரவரி-மார்ச்), இங்கிலாந்து (ஜூலை-ஆகஸ்ட்) செல்கிறது. மீண்டும் சொந்த மண்ணில் 2014, அக்டோபர் மாதம் தான் டெஸ்ட் தொடரில் (வெஸ்ட் இண்டீஸ்) பங்கேற்கும்.

இந்தச் சூழலில், நாளை துவங்கும் டில்லி போட்டி தான் சச்சின் சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடை பெறுவார் என்று நம்பப்படுகிறது.

அனுபவம் தேவை

கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வருகிறார் சச்சின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சரியாக விளையாடவில்லை எனில், இவருடன் பேச வேண்டும் என்ற முடிவில் தேர்வுக்குழுவினர் இருந்தனர். ஆனால், சென்னையில் 81 ரன்கள் எடுக்க, சச்சினை நெருங்க முடியவில்லை.

வரும் டிசம்பரில் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் சச்சின் மட்டும் தான் அனுபவ வீரர். அங்குள்ள ஆடுகளங்கள் குறித்து இவருக்கு நன்கு தெரியும். இந்த அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள சச்சின் தேவை. இல்லையெனில், இளம் வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் டெஸ்ட் அணி, சமீபத்தில் ஸ்டைன், மார்கல் போன்ற தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்களிடம் "உதை' வாங்கிய நிலை, நமக்கும் நேரலாம்.

No comments: