ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு மாணவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருக்கும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்த சிம்பு, அவர்களுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். மாணவர்களிடையே அவர் பேசும்போது, நான் உண்ணாவிரதம் இருந்தா அது பப்ளிசிட்டியாகிவிடும். ஆனால் நீங்கள் பண்ணினால்தான் அது போராட்டம் என பேசினார்.
சினிமாவைச் சேர்ந்த எந்த சங்கத்தினரும் இதுவரை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் சிம்பு தனி ஒரு ஆளாக நின்று ஆதரவளித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவளித்து சிம்பு பேசியதாவது:-
நானும் ஒரு தமிழ் பையன்தான். எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். மற்றவர்கள் முன்னாடி பேர் வாங்கணும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பேரை நான் நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறேன்.
மாணவர்கள் என்றால் படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நல்லா சுத்துவோம் என்கிற கருத்துதான் சமுதாயத்தில் இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்துக்கு மாணவர்களாலும் குரல் கொடுக்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளது சந்தோஷமாக உள்ளது. எனவே, நானும் ஒரு தமிழனா இருந்து உங்கள் எல்லோருக்கும் ஆதரவா இருக்கணும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்.
ஆகவே, மனதை தளரவிடாதீர்கள். கண்டிப்பா ஒரு நல்ல விஷயம் நடக்கும்னு நினைக்கிறேன். சின்னதா நடக்குற ஒரு விஷயம்தான் நாளைக்கு பெரிசா மாறும். என்னுடைய ஆதரவு உங்களுக்கு என்றைக்குமே உண்டு. தைரியமாக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment