Blogger Widgets

Total Page visits

Wednesday, March 20, 2013

பொறியியல் சேர்க்கை ஏற்பாடுகளில் கல்லூரிகள் மும்முரம்

பிளஸ் 2 தேர்வுகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில், கல்லூரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

வரவேற்பு: கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர்கள், முழுமையான ஆய்வக வசதிகள், இவற்றுடன், வேலைவாய்ப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தரமான கல்லூரிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய, மூன்று மாவட்டங்களில் மட்டும், 150 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் தான், அதிக மாணவ, மாணவியரை இழுப்பதாக இருக்கின்றன. ஒரே நிர்வாகத்தினர், பல கல்லூரிகளை நடத்துகின்றனர்.

 பொது கலந்தாய்வு துவங்கியதும், முதலில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், இரண்டு நாட்களில் மள மளவென நிரம்பிவிடுகின்றன. அதன்பின், முன்னணி கல்லூரிகள் மீது, மாணவர்கள் கண் திரும்புகிறது. அதிக தேர்ச்சி சதவீதம், நான்காம் ஆண்டு படிக்கும்போதே, வேலை வாய்ப்பு உத்தர வாதம் ஆகியவற்றை தருகின்ற கல்லூரிகளில் சேர, மாணவர்கள் போட்டி போடுகின்றனர். இதுபோன்ற கல்லூரிகளில், பணியாற்றும் ஆசிரியர்கள், யு.ஜி.சி., விதிப்படி தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளபடி, சம்பளம் வழங்கப்படுகின்றன.

கலந்தாய்வு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, 70 ஆயிரம் ரூபாயும், கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து, கலந்தாய்வு ஒதுக்கீட்டின் கீழ், தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், 1 லட்சம் ரூபாய் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரை, வசூலிக்கப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கைக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. 


கடந்த ஆண்டு, மெக்கானிக்கல், இ.சி.இ.,-கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை, அதிகமான மாணவர்கள், தேர்வு செய்தனர். இந்த ஆண்டும், மெக்கானிக்கல், இ.சி.இ., பாடப் பிரிவுகளுக்கே, மாணவர்கள் முன்னுரிமை தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளில், முக்கிய பாடப் பிரிவுகளுக்கான, "ரேட்'டை, கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிமாண்ட்: கடந்த ஆண்டு, மெக்கானிக்கல், "சீட்', 8 லட்சம் ரூபாய் வரை, விலை போனது. இ.சி.இ., 7 லட்சம் ரூபாய் வரையும், நன்கொடையாக பெறப்பட்டது. இந்த ஆண்டு, மெக்கானிக்கல் சீட், 10 லட்சம் ரூபாய் வரை, விலை போகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இ.சி.இ., சீட், 8 லட்சம் ரூபாய் வரை போகும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், ""கடந்த ஆண்டு, முன்னணி கல்லூரிகளில், 5 லட்சம் ரூபாய் முதல், 8 லட்சம் ரூபாய் வரை, சேர்க்கைக்கு பெற்றனர். இந்த ஆண்டு, இந்த தொகை மேலும் உயரலாம். குறிப்பாக, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், பெரிய நிறுவனங்களில், வேலை வாய்ப்பு வசதிகள் ஆகியவை கிடைக்கும் கல்லூரிகளில், "டிமாண்ட்' அதிகமாகவே இருக்கும்' என, தெரிவித்தன.

தர அடிப்படையில் முன்னணியில் உள்ள கல்லூரிகள்: கடந்த ஆண்டு, சென்னை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய பொறியியல் கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு அடிப்படையில், கல்லூரிகளின் தர பட்டியலை, பல்கலை வெளியிட்டது. அதில், எஸ்.எஸ்.என்., கல்லூரி, முதலிடத்தை பிடித்துள்ளது. மீனாட்சி சுந்தர ராஜன் கல்லூரி, இதயா பெண்கள் பொறியியல் கல்லூரி, ஆர்.எம்.கே., கல்லூரி, ஈஸ்வரி கல்லூரி, கிங்ஸ்டன், வேலம்மாள், பல்கலை பொறியியல் கல்லூரி-விழுப்புரம். சாய்ராம் கல்லூரி, ஆர்.எம்.கே., கல்லூரி, ஆர்.எம்.டி., கல்லூரி மற்றும் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், முதல், 20 இடங்களில் இடம்பெற்று உள்ளன.

Source dinamalar.com

No comments: