Blogger Widgets

Total Page visits

Sunday, March 31, 2013

தமிழகம் முழுவதும் கல்லூரிகளை எப்போது திறப்பது?

சென்னை: தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என, தெரிகிறது.

இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இம்மாத ஆரம்பத்தில் இருந்து, கல்லூரி மாணவர்கள், தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற விடுமுறை:
படிப்படியாக, அனைத்து மாவட்டங்களிலும், போராட்டம் பரவியதால், கடந்த 15ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லூரி களுக்கு, கால வரையற்ற விடுமுறையை, உயர்கல்வித் துறை அறிவித்தது. இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால், அவர்களுக்கும், 18ம் தேதி முதல், கால வரையற்ற விடுமுறையை, அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் ஆங்காங்கே, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ""மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்,'' என, சட்டசபையில், முதல்வர் கேட்டுக்கொண்டார். இதனால், நாளை (ஏப்ரல் 1) முதல், கல்லூரிகள் திறக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக, அரசுத் தரப்பில் இருந்து, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் வரவில்லை. இதனால், நாளை, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என,கூறப்படுகிறது.

"செமஸ்டர்' தேர்வு: அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் 1ம் தேதி, கல்லூரி திறப்பது தொடர்பாக, சனிக்கிழமை மாலை வரை, அரசிடம் இருந்து, எந்த உத்தரவும் வரவில்லை. 1ம் தேதி, கல்லூரிகள் திறக்க வேண்டும் எனில், இரண்டு நாள் முன்கூட்டியே, அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான், சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் மாணவ, மாணவியர், கல்லூரிகளுக்கு திரும்ப வசதியாக இருக்கும். முதல் தேதி இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில நாட்களில், கல்லூரியை திறந்து விட்டால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் ஒரு வாரம் தள்ளிப் போனால், அடுத்த, "செமஸ்டர்' தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டியது வரும். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் மாணவர்களுக்கு, மே மாதம், அடுத்த செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான பாடங்களை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். இரு வாரங்களாக விடுமுறை இருப்பதால், குறித்த காலத்திற்குள், பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு:
இதனால், கல்லூரி திறக்கப்பட்டதும், அனைத்து சனிக்கிழமைகளிலும், வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் அக மதிப்பீடு தேர்வும், தள்ளிப் போகலாம். மாநிலம் முழுவதும், 550 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 65க்கும் மேற்பட்ட, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், அங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பு தேதியை அறிவிக்காததால், உயர்கல்வித் துறை, கையை பிசைந்து வருகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு, விரைவில், கல்லூரி திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என, உயர்கல்வி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Thanks Dinamalar

No comments: