காவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூட். அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை
தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில்
புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார்.
அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய
தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.
அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து
விட்டார் என தெரிய வந்தது.
No comments:
Post a Comment