Blogger Widgets

Total Page visits

Tuesday, March 19, 2013

சரித்திர சாதனை: மொகாலி டெஸ்டில் இந்தியா வெற்றி


M Vijay drives to the off side

மொகாலி டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. தவிர,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதன் முறையாக 3-0 என தொடரை வென்று, புதிய வரலாறு படைத்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 408, இந்தியா 499 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து, 16 ரன்கள் பின்தங்கியிருந்தது.
ஆமை வேகம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் இரு புறமும் சுழல் தாக்குதல் தொடுத்தார் தோனி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 

ஓஜாவின் சுழலில் "நைட் வாட்ச்மேன்' லியான் (18) முதலில் கிளம்பினார். "டிரா' செய்யும் நோக்கத்தில் ஹியுஸ், கிளார்க் ஜோடி ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.5 ஓவரில் 30 ரன்கள் மட்டும் சேர்த்த போது, கிளார்க்கிற்கு மீண்டும் வில்லனாக உருவெடுத்தார் ஜடேஜா. இத்தொடரில் ஏற்கனவே நான்கு முறை இவரது சுழலில் சிக்கிய கிளார்க், இம்முறை 18 வெளியேற்றினார்.
வால் ஆடியது: நீண்ட நேரம் களத்தில் நின்று தொல்லை கொடுத்த ஹியுசை (69), அஷ்வின் "கவனித்து' அனுப்பினார். ஹென்ரிக்ஸ் (2) நிலைக்கவில்லை. தலா, ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட சிடில் (13), ஓஜா வலையில் சிக்கினார். ஹாடின் 30 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த தோகர்டி, தொல்லை தரத்துவங்கினார். அவ்வப்போது அடித்த பவுண்டரிகளால், ஆஸ்திரேலியா 200 ரன்களை தாண்டியது. ஒருவழியாக ஸ்டார்க்கை (35), ஜடேஜா அவுட்டாக்க, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இம்முறை முரளி விஜய்யுடன், புஜாரா துவக்கம் கொடுத்தார். 

ஸ்டார்க் பந்துகளில் முரளி விஜய் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, புஜாரா வழக்கம் போல நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நேரத்தில் விஜய் (26), புஜாரா (28) சிறிது நேர இடைவெளியில் "பெவிலியன்' திரும்பினர்.
பின் வந்த சச்சின், கோஹ்லியுடன் இணைந்தார். லியான், ஸ்டார்க் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி, 34 ரன்னில் அவுட்டானார். 

ஆரம்பத்தில் சற்று மந்தமாக ஆடியதால், கடைசி கட்டத்தில் "டுவென்டி-20' போன்ற "டென்ஷன்' வீணாக ஏற்பட்டது. 24 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், "சீனியர்' சச்சின் (21) ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா 2 பவுண்டரி அடித்து அசத்தினார். மறுமுனையில் தோனி "ஹாட்ரிக்' பவுண்டரி விளாச, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (18), ஜடேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியை அடுத்து, 81 ஆண்டு கால வரலாற்றில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதன் முறையாக இந்திய அணி 3-0 என்ற முன்னிலையுடன், வென்று அசத்தியது. 

இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி, டில்லியில் துவங்குகிறது.

தவான் விளையாடுவாரா

Shikhar Dhawan savours his century on debut

மொகாலி டெஸ்டின் நான்காவது நாளில் பீல்டிங் செய்த போது ஷிகர் தவானின் இடது கை விரலில் அடிபட்டது. முன்னெச்சரிக்கையாக "எக்ஸ்-ரே' எடுத்ததில், எலும்பு முறிவு எதுவும் இல்லை எனத் தெரிந்தது. கை விரலில் கட்டுப் போட்டிருந்த இவர், டாக்டரின் ஆலோசனைப் படி, நேற்று இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இவரது சொந்த ஊரான டில்லியில் நடக்க உள்ள நான்காவது டெஸ்டில்(மார்ச் 22-26) விளையாட மாட்டார். இது குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,""டில்லி டெஸ்டில் தவான் விளையாட வாய்ப்பு இல்லை. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்,''என்றார். 

பழி வாங்கும் படலமா

"ஹாட்ரிக்' வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறுகையில்,"" விளையாட்டில் பழிவாங்குவது என்ற பேச்சுக்கு இடமில்லை. அதுகுறித்து நினைக்கவும் இல்லை. சூழ்நிலைகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டோம், அவ்வளவு தான். ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருந்த நிலையிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் சாதித்தனர். ஜடேஜாவை அணியில் சேர்த்ததால், 5 பவுலர்களாக பலம் உயர்ந்தது. டில்லி டெஸ்டில் சில புதிய முயற்சிகள் செய்யவுள்ளோம். இருப்பினும், அனைத்து டெஸ்டிலும் வெற்றி பெறுவதே முக்கியம்,'' என்றார்.

வாட்சன் வருகை

மனைவியின் பிரசவத்திற்காக தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் ஷேன் வாட்சன், டில்லியில் நடக்கவுள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்டில் பங்கேற்க இந்தியா வருகிறார். இவர், இன்று ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து கொள்வார். முன்னதாக இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மொகாலி டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

No comments: