Blogger Widgets

Total Page visits

Wednesday, January 23, 2013

விவாதம் செய்ய கற்றுக்கொள்வோமா?



விவாதம் என்பது ஆண்டாண்டு காலமாக மனிதர்களுக்குள் நடந்து வரும் ஒரு நிகழ்வு. இங்கே விவாதம் என்பது மனிதன் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள மொழியை கண்டுபிடித்த பிறகு நடப்பவைகளையே குறிக்கும். சரி பண்டைய கால, விவாதங்களைப்பற்றி, அதன் வரலாற்றைபற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டாம். சம காலத்தில் விவாதம் செய்வது எப்படி?, உண்மையில் அது எப்படி நடக்கிறது?, நம்மோடு விவாதம் செய்பவரை எப்படி எதிர்கொள்வது?, அவர்களை எப்படி வெற்றி கொள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

விவாதம் மற்றும் விதண்டாவாதம்

மாற்றுக்கருத்து உடையவர்கள், அல்லது எதிரிகள் மட்டுமே விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்பதல்ல. தனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது, தெரியாத கருத்துக்கள் வந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு வைக்கப்படும் சான்றுகளைப் பொறுத்து, ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது, ஆகியவையே விவாதத்தின் பலன்கள் ஆகும். ஒரு புத்தகத்தில் நாம் படித்த அல்லது புரிந்து கொண்ட (நம் பாயிண்ட் ஆப் வியூவில்) விஷயங்களை பிறருடன் விவாதிப்பதன் மூலம், நம் புரிதலில் உள்ள குறைபாடுகளை களையவும், அல்லது புதிய விழிப்புணர்வுகளை பெறவும் முடியும்.
விதண்டாவாதம் என்பது, எதிராளி என்ன கருத்து சொன்னாலும், அதில் உள்ள பொருளை எடுத்துக்கொள்ளாமல், நாம் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது, அல்லது அவரை எப்படியாவது வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பது. இத்தகைய விதண்டாவாதத்தின் மூலம் நன்மை எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.

விவாதம் செய்வது எப்படி?

இதில் அடிப்படையான விஷயம் நீங்கள் யாருடன் விவாதம் செய்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் விவாதம் செய்பவர்களின் தராதரத்தை பொறுத்து உங்களின் வார்த்தை பிறையோகங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக இளைஞர்கள் அல்லது மாணவ சமூகத்தோடு பேசுகையில், சமகால, மிகவும் எளிய பதங்களை பயன்படுத்துவது நல்லது. மாறாக, மிக கடினமான, தத்துவார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தினால் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டாகும். அதே போல கல்வி அறிவு இல்லாத மக்களிடம் பேசுகையில், ஹிக்ஸ் போசான், ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் என்று அடுக்கினீர்கள் என்றால், உங்கள் விவாதம் தோல்வியில் முடிந்து விடும். "நல்ல கருத்து செறிவுள்ள பதிவுகளை இங்கே யாரும் படிப்பதில்லை". இதுதான் பெரும்பாலான நல்ல பதிவர்களின் மன வருத்தமாக உள்ளது. இங்கே பதிவுகளை படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொழுது போக்கிற்காக படிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நம் கருத்து போய் சென்றடைய வேண்டுமானால், நாம் வளைந்து போய்த்தான் ஆகவேண்டும். அதற்காக தரம் தாழ்ந்து எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை.
நம் பதிவுகள் அல்லது விவாதங்களின் உண்மைத்தன்மை மிகவும் முக்கியம். அதிக தகவல்கள் மற்றும் சான்றுகள் உள்ள விவாதங்களை எதிர்கொள்வது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம்தான். ஆகவே ஒரு செய்தி பற்றி விவாதிப்பதற்கு முன் அதற்கான அடிப்படைத்தகவல்கள், அல்லது சான்றுகளோடு களத்தில் இறங்குவது சிறந்தது. சான்றுகளின் நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.

ஆனால் நடப்பது என்ன?

சத்தியமாக சொல்கிறேன் நீயா? நானா? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடப்பது விவாதமே அல்ல. அது ஒரு நாகரிகமான சண்டை அவ்வளவுதான். சில நேரங்களின் அந்த நாகரிகமும் மீறப்பட்டு விடுகிறது. இதே நிலைமைதான் எல்லா இடங்களிலுமே. முன்கூட்டியே ஒரு முடிவோடுதான் விவாத களத்திலேயே இறங்குகிறோம். விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஈகோ இருக்க கூடாது என்பது என் கருத்து. ஈகோ இருந்தால் அடுத்தவர்களின் பேச்சு நம் மண்டையில் ஏறாது.  ஆனால் இங்கே விவாதத்தில் ஈடுபடுவதே நம் ஈகோவிற்கு தீனி போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். 
விவாதத்தில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது, கருத்து மோதல்களில் தனிமனித அடையாளங்கள் இருக்க கூடாது. அதாவது கருத்தோடு மோத வேண்டுமே தவிர தன்னுடைய அடையாளத்தை அதற்கு பயன்படுத்த கூடாது. "நான் யார் தெரியுமா?", "என்னிடமே இப்படி பேசுகிறாயா?"  போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர் விவாதம் செய்ய வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல தனிமனித தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். பதிவுலகில் பெரும்பாலும் விவாதங்கள் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களே நடக்கின்றன.  சில பதிவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன். காரணம் என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே நம் கருத்தை எதிர்க்காமல், நம்மை தாக்க தொடங்கி விடுவார்கள். உதாரணமாக, தீவிர கமல் பக்தரான பதிவர் ஒருவர், தன்னுடைய பதிவிற்கு யாராவது எதிர் கருத்து தெரிவித்து விட்டால், உடனே பயன் படுத்தும் வார்த்தை, "டேய் மெண்டல் நடிகரின் ரசிகனே!!". இதற்குமேல் அவரிடம் என்ன பேசினாலும், அது எடுபடாது.
ஆத்திக, நாத்திக, இடது, வலது, நட்ட நடு, என்று வித்தியாசமே இல்லாமல், நேரிடையாக தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் பதிவர்களை தவிர்ப்பதே நல்லது. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், சத்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்துவிட்டு வாருங்கள். இல்லை கொஞ்சம் தூண்டி விட்டு அவர்கள் ஆடுவதை வேடிக்கை பாருங்கள். சில நேரங்களில் டாக்டர் ரசிகர்களை நான் இப்படி செய்ததுண்டு. இது நல்லதல்ல. 

விவாதங்களை எதிர்கொள்ளுவது எப்படி?

தன்னுடைய கருத்து பிறருக்கு போய் சேரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு பொறுமை மிக அவசியம். நம் மீதான விவாதங்களை எதிர்கொள்வதற்கு முதலில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அவசியம். எதிராளியை பேச விடுங்கள். அவர் பேசி தீர்க்கட்டும். இடையில் குறுக்கிடாதீர்கள். அறிவாளிகளின் அடையாளம், அமைதி அல்லது மவுனம். முட்டாள்களைக்கூட அறிவாளிகளைப்போல காட்டிவிடும் திறமை மவுனத்துக்கு உண்டு. அந்தோ பரிதாபம்! முட்டாள்கள் அமைதியாக இருப்பதில்லை. முதலில், வாதிடுபவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். 
நான் முன்பே சொன்னது போல நம்மை தூண்டி விட்டு நாம் ஆடுவதை வேடிக்கை பார்க்க சிலர் ஆசைப்படுவார்கள். இல்லை, நம்மை தவறு செய்ய தூண்டுவதற்காக விதண்டாவாதம் செய்வார்கள். இந்த மாதிரியான நேரங்களில் அமைதி  ஒரு சிறந்த ஆயுதம். எந்த நேரத்திலும் நம் நிதானத்தை இழந்து விடாமல், அமைதியாக அதே நேரம் அவர்களுக்கு உறைக்கும் விதமாக பதில் கூறவேண்டும். இந்த விஷயத்தில் சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் பொறுமை அசாத்தியமானது. அவரது கருத்துக்களோடு பல விதங்களில் நான் மாறுபட்டாலும், இந்த விஷயத்தில் அவரைபாராட்டியே ஆகவேண்டும். 
அதே போல ஒரு சிலரிடம் விவாதிக்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அது விதண்டாவாதம் என்று தெரிந்துவிடும். அப்படிபட்ட நேரங்களில் நாகரிகமாக அதை தெரிவித்து விட்டு, மேலும் விவாதத்தை வளர்க்காமல் விட்டுவிடலாம். குறைந்த பட்சம் கால விரையமாவது தவிர்க்கப்படும். இதை அப்படியே தலை கீழாகவும் புரட்டி பார்க்கலாம். நமக்கு தெரியாத தகவல்கள் அல்லது சான்றுகளை வைத்து ஒருவர் நம்மிடம் வாதம் செய்ய வருகிறார் என்றால், அதைப்பற்றி மூச்சு விடக்கூடாது. வாதத்தை வேறுபக்கம் திசை திருப்பி, இந்தப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்கு தெரிந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி அடிக்கவேண்டும், தெரியாத ஏரியாவில் அண்டர் பிளே செய்வதே சிறந்தது. 

விவாதத்தில் வெற்றி பெறுவது எப்படி?

நாம் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும். "Argument never Ends". விவாதங்கள் எந்த காலத்திலுமே முடிந்ததில்லை. அந்த விவாதத்தில் ஈடுபட்டதன் நோக்கம் எதுவோ அதைப்பொருத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். மற்றபடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதோடு விவாதங்கள் முடிந்து விடுகின்றன. உங்களின் கருத்துக்களை நீங்கள் ஆணித்தரமாக நிறுவி விட்டதால் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டாதாகாது. அங்கே நடந்த விவாதம் இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதமாக இருந்தால் அது இருதரப்புக்கும் வெற்றி. இல்லை இருவருக்குமே தோல்வி அவ்வளவுதான். சரி கருத்துப்பரிமாற்றம் உங்கள் நோக்கம் இல்லையெனில்,
எதிராளிகளின் ரியாக்சன்களை  வைத்து உங்கள் வெற்றி தோல்விகளை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். உதாரணமாக, "மதங்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன்", என்று சொல்லிக்கொண்டு, மதங்களை, கடவுள்களை தரக்குறைவாக திட்டுபவர்களின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை புண்படுத்துவதே. சம்பந்தப்பட்டவர்கள் கொதித்தெழுந்து பதிலுக்கு வண்டை  வண்டையாக திட்ட தொடங்கினால் அது கட்டுரையாளரின் வெற்றி. "சாதிக்கெதிரான முழக்கம்", என்ற பெயரில் ஒரு சாதியை உயர்த்தி ஒரு சாதியை தாழ்த்தி எழுதிய கட்டுரையில், விவாதம் என்ற பெயரில், பல சாதிக்காரர்கள் அடித்துக் கொண்டால், அங்கே வெற்றி பெறுவது ஏதாவது ஒரு சாதி அல்ல. கட்டுரையாளரே. 

ஒரு முக்கிய விஷயம். நீங்கள் விவாதத்தில் ஈடுபடுவது, உங்கள் கருத்துக்களை பிறருக்கு எடுத்துரைப்பதற்காக அல்ல, பொழுது போகவேண்டும் அல்லது யாரையாவது காமெடி பீஸ் ஆக்கவேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு தேவை அசாத்திய பொறுமை மற்றும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வு. பதிவுலகுக்கு வந்த புதிதில் பல நேரங்களில் பலரிடம் வெட்டியாக தூண்டி விட்டு, சண்டை போட்டு, பொழுது போக்கியதுண்டு. இப்போதும் சில நேரங்களில் அப்படி செய்வதுண்டு. இப்படிப்பட்ட விவாதங்களால் துளியளவும் பயனில்லை என்பதை புரிந்துகொண்டால் போதும். மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று மத உணர்வுகளை புண்படுத்துவதை விடவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பிரபலங்களை வாய்க்கு வந்தபடி வசை பாடுவதை விடவும், என் கடவுளின் பெருமையை சொல்ல, அடுத்தவர் கடவுளை தூற்றுவதை விடவும், புரட்சி என்ற பெயரில் சாதிவெறியை, தீவிரவாதத்தை தூண்டுவதை விடவும்,  இப்படி வெட்டி அரட்டை அடிப்பதில் தவறே இல்லை. ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டால் போதுமானது.

நாம் ஒருவரின் கருத்துக்கு மட்டுமே எதிரியே ஒழிய, அவருக்கெ எதிரி அல்ல.

Source http://balapakkangal.blogspot.com

No comments: