குழந்தைகளைத் தவமிருந்தே பெறுகின்றனர். குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு
இரண்டிலும் பெற்றோரின் பங்கு முக்கியமானது. தாயின் பங்களிப்பு சற்று
கூடுதலானது. எனவே, குழந்தைகளின் மனம் அறிந்து அவர்களை வளர்ப்பது முக்கியம்.
குழந்தையின் முதல் வயதிலிருந்தே அதற்கு சுய மதிப்பு உருவாக
ஆரம்பிக்கிறது. தனக்குக் கிடைக்கும் அரவணைப்பு, பாராட்டு ஆகியவற்றின்
அடிப்படையில் தன்னைப் பற்றிய கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறது. நமது
பதிலும் செயலும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் எதைப் பேசினாலும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. தனியார்
அல்லது அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் மாலையில் வீடுவந்து சேர்ந்ததும்
அன்றைக்குப் பள்ளியில் தான் கண்டதையும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும்
குழந்தை ஆர்வமாகக்கூற முற்படும். அதைப் பொருள்படுத்தாமல், "இப்போது என்னை
தொந்தரவு செய்யக்கூடாது' என்று கண்டிப்பு காட்டுவது தவறான அணுகுமுறையாகும்.
குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களுடைய வார்த்தைகளுக்கு
செவிசாய்க்கவேண்டும். அந்த நேரம் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம்
சிறந்தவர்களாக உருவாக்க முடியும். குழந்தைகள் பேச்சை
உதாசீனப்படுத்தும்போது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும்.
குழந்தையை ஒருபோதும் மற்றவர்கள் முன்னிலையில் மட்டம்தட்டிப் பேசுவதோ,
திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதையே
விரும்புவர். தவறு செய்தால்கூட அன்பாகச் சொல்லித் திருத்தவேண்டும். அது
எந்த வகையில் தவறு என்று புரியவைக்க வேண்டும். அப்போதுதான் அறிவுரைகளை
ஏற்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
இதனால் தாங்கள் அடையும் வெற்றிகளைக் கொண்டாடவும் தோல்விகளை
எதிர்கொள்ளவும் குழந்தைகளால் முடியும். பெரும்பாலான பெற்றோர் செய்யும்
தவறு, குழந்தைகளுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாததை ஈடு செய்வதற்காக
அவர்கள் கேட்கும் பொருள்களை உடனே வாங்கிக் கொடுப்பதுதான். அதனால் எதையும்
எளிதில் பெற்றுவிடலாம் என்று மனதில் பதிந்துவிடுகிறது. பின்னாளில்
எதிர்பார்ப்பது கிடைக்காதபோது குற்றச் சம்பவங்களில் ஈடுபட இதுவே
காரணமாகிறது.
இன்னும் சிலர் எதிர்காலத்தில் வாழ்வில் ஏற்படும் சிறிய தோல்விகளைக்கூட
எதிர்கொள்ள முடியாமல் துவண்டுபோய்விடுகின்றனர். வாழ்வில் எல்லாமே
முடிவுக்கு வந்துவிட்டதாகக்கூட நினைத்துவிடுகின்றனர். வெற்றியும்
தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்.
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம் சிறிது நேரமாவது
மனம்விட்டுப் பேசிய பின்னர் வீட்டுப்பாடம் எழுத வைப்பதையும்
படிக்கவைப்பதையும் தொடங்க வேண்டும்.
காலை, மாலை வேளைகளில் ஏதாவதொரு பயிற்சி வகுப்புகளுக்குப் பிள்ளைகளை
அனுப்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெற்றோரிடம் இது அதிகம். இப்படிச்
செய்தால் தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர்.
பள்ளிக்கூடங்களில் நடைபெறும் பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்குக்
கூட செல்வதில்லை. இது அவர்களுடைய கடமையைச் செய்யாமல் தவறுவதாகும்.
குழந்தைகள் ஏதேனும் படிப்பில் பின் தங்கினால் குழந்தைகளையோ
ஆசிரியர்களையோ குறைகூறுவதை விட்டுவிட்டு குழந்தைக்கு என்ன பிரச்னை என்று
பொறுமையாக அறிய வேண்டும். பிற குழந்தைகளோடு தங்களுடைய குழந்தைகளை ஒப்பிட்டு
வசைபாடக்கூடாது. தங்கள் விருப்பத்தைக் குழந்தை மீது திணிக்கக்கூடாது.
படிப்பதால் என்ன நன்மை, படிக்காவிட்டால் என்ன தீமை என்று குழந்தைகள்
மனம் உணரும் வகையில் எடுத்துக் கூற வேண்டும். குழந்தைகளைக் குழந்தைகளாக
வளரவிடுவது முக்கியம். பிற குழந்தைகளுடன் குழந்தை பழகுவதையும்
விளையாடுவதையும் எந்தக் காரணத்துக்காகவும் தடுக்கக்கூடாது. சின்ன வயதிலேயே
குழந்தையைப் பெரியவர்களைப் போல நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது
Source dinamani.com
No comments:
Post a Comment