Blogger Widgets

Total Page visits

Sunday, February 22, 2015

மாணவர்களைப் பிடிக்கும் பணியில் தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள்

கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், தலா 2 மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
புதிதாகப் பணிக்குச் சேரும் அனுபவம் இல்லாத பேராசிரியர்கள் பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளுக்கும் அனுப்பப்பட்டு மாணவர்களிடம் கல்லூரியை விளம்பரப்படுத்த வலியுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறிகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பொறியியல் படிப்புகளில், குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக். தகவல் தொழில்நுட்பம், இசிஇ போன்ற படிப்புகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2014-15 பொறியியல் மாணவர் சேர்க்கையின்போது ஒற்றைச்சாளர கலந்தாய்வின் முடிவில் மொத்தம் உள்ள 2,04,078 பி.இ., பி.டெக். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 1,02,636 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. மீதமிருந்த 1,01,442 இடங்களில் மாணவர்கள் சேராததால் காலியாக இருந்தன.
இதில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 1,00,600 இடங்கள் காலியாக இருந்தன. அதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை இருந்தது.
மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்த காரணத்தால் பிரபல பொறியியல் கல்லூரிகள் கூட, பொறியியல் படிப்பு இடங்களை குறைத்ததோடு ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.
இதுபோல் வருகிற 2015-16 கல்வியாண்டிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால், 3 பொறியியல் கல்லூரிகள் கல்லூரியை இழுத்து மூட அண்ணா பல்கலைக்கழகத்திடம் இப்போது விண்ணப்பித்துள்ளன. மேலும் 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கணினி பொறியியல் படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கவும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
இந்த நிலையில், சில பொறியியல் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை இப்போதே தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர்களையே இந்தக் கல்லூரிகள் ஈடுபடுத்துவதும் தெரியவந்துள்ளது.
சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள சில பிரபல கல்லூரிகள் சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடக மாநில பள்ளிகளுக்கும் கல்லூரி பேராசிரியர்களை அனுப்பி மாணவர்களிடையே கல்லூரி குறித்து விளம்பரப்படுத்த அறிவுறுத்தியுள்ளன.
சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, பணிபுரியும் ஒவ்வொரு பேராசிரியர்களிடையேயும் வீட்டுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளிலும், பள்ளிகளிலும் கல்லூரி குறித்து விளம்பரப்படுத்த அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தலா இரண்டு மாணவர்களைச் சேர்த்தாக வேண்டியது கட்டாயம் என பணிபுரியும் பேராசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தொலைபேசி மூலம் அளித்த தகவல்:
இந்தக் கல்லூரி மட்டுமல்லாமல் ஈரோடு அருகே உள்ள மேலும் சில கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்களைச் சேர்க்குமாறு பேராசிரியர்களை நிர்பந்திக்கின்றன.
இந்தக் கல்லூரிகளின் நிர்வாகம், பணிபுரியும் அனைவரது அசல் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டிருப்பதால், வேறு வழியின்றி கல்லூரி நிர்வாகம் கூறும் பணிகள் அனைத்தையும் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதுபோன்ற கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகமும், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பிரவீண் குமார் கூறியது:
அசல் சான்றிதழ்களைத் தர மறுப்பது, கட்டாயம் இரண்டு மாணவர்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் பணிக்கு அப்பாற்பட்டு நிர்பந்திக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.
இதுபோன்ற கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி 22-02-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Saturday, February 21, 2015

தேர்வு சமயத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் - மாணவர்களே கவனம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் தொடங்கியுள்ளது. இதனால், மாணவர்களின் கவனம் பாதிக்கப்படுமே! என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலைப்படுகின்றனர்.
எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவலையைப் போக்க வேண்டியது மாணவர்களின் கடமையாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டு வேறாக இருந்தாலும், இது ஒரு கிரிக்கெட் நாடு என்பதால், விளையாட்டு என்றாலே, கிரிக்கெட்தான் என்பதாக இருக்கிறது. அதுவும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியான இதில், நடப்பு சாம்பியனாக இந்தியா களமிறங்குகிறது என்ற முக்கியத்துவமும் சேர்ந்திருக்கிறது.
எனவே, பள்ளி மாணவர்கள் (மாணவிகளைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கவலையில்லை) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அதிக கவனம் செலுத்தி, அதன்மூலம், தங்களது தேர்வின்மீது கவனம் சிதறி விடுவார்களோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.
இந்த விஷயத்தில் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய அம்சங்கள்
* உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிரிக்கெட் வாரியங்களின் வருமானத்திற்காகவும்(நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருமானத்தை திரட்டுவதற்காக அல்ல), பொழுதுபோக்கிற்காகவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி.
* கிரிக்கெட் வீரர்கள், தங்களின் வருமானத்திற்காகவும், புகழுக்காகவும் அதில் விளையாடுகிறார்கள்.
* கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதோ, ரசிப்பதோ அல்லது அதை விளையாடுவதோ எந்த விதத்திலும் தவறில்லை. ஆனால், உயர்கல்வியை நிர்ணயிக்கக்கூடிய அரசுத் தேர்வுகள் நடக்கும் சமயத்தில், அதில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தை தடுமாறச் செய்வது தேவையா?
* நமது நாட்டுப்பற்றை, உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி ஆடுவதைப் பார்த்துதான் நிரூபிக்க வேண்டியதில்லை. நாட்டுப் பற்றை நிரூபிக்க இது சிறந்த வழியுமில்லை மற்றும் இதனால் நாட்டிற்கு குறிப்பிடும்படியான நன்மை எதுவுமில்லை.
* நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமெனில், நேரடியாக நாட்டிற்கு நன்மை செய்யும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை நம்மால் இயன்ற அளவிற்கு பாதுகாத்தல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளே நாட்டுப் பற்றை நிரூபித்தலுக்கான சிறந்த உதாரணங்கள்.
* கிரிக்கெட் போட்டிகளை நாள் முழுவதும் உட்கார்ந்து ரசித்து, அதுசம்பந்தமாக தொடர்ச்சியான விவாதங்களை நடத்தி, நமது நேரத்தை வீணாக்குவதைவிட, படிப்பிற்கிடையிலான ஒரு relaxation முறையில், போட்டிகள் தொடர்பான செய்திகளை கேட்டுக் கொள்ளலாம். ஆனால், நமது அணி வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, அதை விளையாட்டாக மட்டுமே நாம் கருத வேண்டும். தோல்வியை நினைத்து கவலையடைந்து, அதன்மூலம் உங்களின் கவனத்தை படிப்பிலிருந்து விலகிச்செல்ல விட்டுவிடல் கூடாது.
* இது ஒன்றும் பிற நாடுகளுடன் நடக்கும் போர் அல்ல; தோற்றுவிட்டால் பெரிய இழப்பு என்று கவலைப்படுவதற்கு. கிரிக்கெட்டில் நமது அணி தோற்பதால், நாட்டிற்கோ, நமக்கோ எந்த இழப்பும் ஏற்படாது. மாறாக, அந்தக் கவலையில், நாம் படிப்பை கோட்டை விட்டால்தான், நமக்கு மாபெரும் இழப்பு ஏற்படுவதோடு, அதன்மூலம் மறைமுகமாக, இந்த நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது.
* சில மாணவர்களுக்கு, கிரிக்கெட்டின் மீது அலாதி ஆர்வம் இருக்கலாம். ஆனால், அதைவிட பொதுத்தேர்வு என்பது மிகமிக முக்கியமானது. கொஞ்ச நாட்களுக்கு, உங்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தியேதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
* அணி வீரர்கள், அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுகிறார்கள். எனவே, அதை வேடிக்கைப் பார்ப்பதைவிட, உங்களின் வெற்றிக்காக நீங்கள் பாடுபடுவதுதான் உங்களுக்கு முக்கியம்.
* இல்லையெனில், உலகக் கோப்பையை எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் சிரித்துக் கொண்டிருக்க, இங்கே நீங்களோ, உங்களின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்து அழுது கொண்டிருப்பீர்கள்!