Blogger Widgets

Total Page visits

Showing posts with label News Paper. Show all posts
Showing posts with label News Paper. Show all posts

Wednesday, April 15, 2015

இணைய சமத்துவம் என்றால் என்ன?


இந்தியாவில் இணையதள சமத்துவப் பயன்பாடு வரும் நாட்களில் இருக்குமா என்ற கேள்வி இணையதள உலகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இணைய வழி தொடர்பில் இணைய தளங்கள் மற்றும் ஆப்ஸ்  ஆகியவற்றைப்  பயன்படுத்தி இதுவரை அறிவுசார் விஷயங்களையும், ஆன்லைன் வர்த்தகங்களையும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலைமையோடு நாம் அணுகி வருகிறோம். நமக்கு என்ன தேவையோ அதை வாடிக்கையாளர்களே  தேர்வு செய்து பயன்படுத்திவருகிறார்கள்.



அதாவது அனைத்து இணையதளங்களும், சரிசமமாக அணுகுவதாக இருக்கவேண்டும், சமச்சீரான வேகத்தை கொண்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு இணையதள தகவலுக்கான கட்டணம்(Data Cost) ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் (Per KB/Per MB). இதுதான்  இணைய சமத்துவம் என்றழைக்கப்படுகிறது.



இந்த நடுநிலைமையைத்  தகர்த்து, இணையத்தில் எதை வாடிக்கையாளர்கள்  தொடர்பு கொள்ளவேண்டும், எவ்வளவு வேகத்தில் தொடர்பு கொள்ளவேண்டும், எவ்வளவு கட்டணம் செலுத்தி தளங்களை  தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதுதான் `ஏர்டெல் ஜீரோ` என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது ஒரு இணையதளத்தை அணுகுவதற்கே கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தி பெறும் இணையதளமானது மிகுந்த வேகத்தில் கிடைக்கும். மற்ற இணைய தளங்கள் குறைவான வேகத்தில் கிடைக்கும். இது இணைய நடுநிலைமையை பாதிப்புக்குள்ளாக்குவதுடன், பல்வேறு இணைய வர்த்தக நிறுவனங்களுக்கும் பாதிப்பை உருவாக்கும் என்ற அச்சம் தற்போது இந்தியாவில் நிலவுகிறது.இது வாடிக்கையாளர்கள் மீது கூடுதல் செலவை சுமத்தும் உத்தி என்றும் கூறப்படுகிறது. இதனால் இணையதளம் பயன்படுத்துவோர் மத்தியில் கடுமையான அதிருப்தி உண்டாகியுள்ளது.



மேலும் செல்போன்களில் பயன்படுத்தும் சில ஆப்ஸ் வசதிகளுக்கு  முன்னுரிமை அளிப்பதும் `ஏர்டெல் ஜீரோ`வின் அங்கம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தின் விளைவாக இணையத்தைப்  பாதுகாப்போம் என்று விமர்சனங்கள்   தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில்   குவிந்து வரும் நிலையில், ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணைந்த பிளிப்கார்ட் நிறுவனம் அதிலிருந்து நேற்று விலகிக்கொண்டது. 



இந்நிலையில், இணைய சமத்துவத்துக்கு தாங்களும் எதிரானவர்கள் அல்ல என இணையவழி சேவை நிறுவனங்களும் தற்போது கூறியுள்ளன.  இந்திய சூழலுக்கு ஏற்றவாறு இணைய சமத்துவம் குறித்து நடுநிலையான தீர்வு காணவேண்டும் என்று இந்நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளதுடன், இணைய சமத்துவம் பற்றிய விவாதம் மிகவும் அவசியம் என்று கூறியுள்ளன. விவாதத்தின் முடிவில் இந்தியாவுக்கான இணைய நடுநிலை குறித்து அனைத்து தரப்பினரும் சரியான முடிவுக்கு வரமுடியும் என இந்திய செல்போன் சேவையாளர்கள் சங்கப்  பொது இயக்குனரான ராஜன் மேத்யூஸ் கூறியுள்ளார். 



இதைத்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் துல்லியமாக செய்து வருவதாகவும் ராஜன் தெரிவித்தார். அதே போல் கடந்த நான்கு மாதங்களில், இரு முறை பலத்த கண்டங்களுக்கு உள்ளான ஏர்டெல் நிறுவனமும் இணைய சமத்துவத்துக்கு நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளது. மேலும் ஏர்டெல் ஜீரோவின் கட்டணமில்லா சேவை (Toll Free) தவறாகப்  புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



ஆப்ஸ்  மற்றும் இணையம் வழியாகப்  பொருட்களைச்  சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், ஏர்டெல் நெட்வொர்க்கில் உள்ள தங்கள் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, தாங்கள் வழங்கும் சலுகைகள் குறித்த விவரங்களைத்  தெரியப்படுத்தலாம். இந்த ஆப்ஸ் பயன்பாட்டிற்கு அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா கட்டணத்தை ஆப்ஸ் க்கு  சொந்தமான நிறுவனங்கள் செலுத்தவேண்டும் என்பது `ஏர்டெல் ஜீரோ` திட்டமாகும் என அந்நிறுவனம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது. 



இந்த சேவையை பெற இதுவரை 150 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது. ஆனால் இந்தத்  திட்டமே மோசடி திட்டம் எனk கூறப்படுகிறது. தற்போது ஆப்ஸ்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டாலும், நாளடைவில் வலைத் தளங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். அப்போது எந்தெந்த வலைத்தள நிறுவனங்கள் பணம் தருகிறதோ அவற்றை மட்டுமே இணையவழி சேவை நிறுவனங்கள் அனுமதிக்கும். பணம் தராத நிறுவனங்களின் வலைத்தள பக்கங்கள் முடக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது என்பதுதான் அனைத்து தரப்பினரின் கருத்தாகும். எனவே ஏர்டெல் ஜீரோ திட்டம் இணைய சமத்துவத்துக்கு எதிரானதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை என்ற விமர்சனம் வலுத்துள்ளது.



இந்த ஆபத்தான திட்டத்தை முடக்கி இணைய சமத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  நிலை நாட்டவேண்டும், இணைய சமத்துவத்தை நீக்கி வாடிக்கையாளர்களின் பணத்தைப் பிடுங்கும் எந்தச் செயலையும் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்க கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Saturday, March 7, 2015

'ஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா?

ன அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்யும்? கோமாவில் கொண்டுபோய் சேர்க்கும்! கிஷோரை அப்படித்தான் கோமாவில் தள்ளியிருக்கிறது மன அழுத்தம்!
'பரதேசி’, 'ஆடுகளம்’, 'எங்கேயும் எப்போதும்’, 'பயணம்’ என தனித்துவமான படங்கள் மூலம் தன்னுடைய கலைப்பயணத்தைத் தொடர்பவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்த இளைஞர் கிஷோர். 'ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றார். தற்போது பாலாவின் 'தாரை தப்பட்டை’, வெற்றிமாறனின் 'விசாரணை’ போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர், கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. 'ஓவர் ஸ்ட்ரெஸ்ஸில் தன்னை வருத்திக்கொண்டு ஓயாமல் வேலை செய்தது மட்டும்தான் கிஷோரின் இந்த நிலைக்குக் காரணம்!’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிஷோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயா மருத்துவமனைக்குச் சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருக்கிறார் கிஷோர். உறவுகள், நண்பர்கள் என மருத்துவமனையில் சூழ்ந்திருந்தார்கள்.
'கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் வெற்றிமாறனின் 'விசாரணை’ படத்தை எடிட் பண்ணிட்டு இருந்தார். திடீர்னு உட்கார்ந்து இருந்ததுபோலவே அப்படியே சிலை மாதிரி ஆகிட்டார். வெற்றிமாறன் கூப்பிட்டுப் பார்த்தும் சுயநினைவுக்குத் திரும்பாதவர். அவர் அருகில் சென்று தொட்டு அழைத்ததும் மயங்கி கீழே சாய்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குள் சுயநினைவு திரும்பியவரை மருத்துவமனையில் சேர்த்தார் வெற்றிமாறன். அங்கு ஸ்கேன் செய்தபோது தலைக்குள் சின்ன கட்டி இருப்பது  தெரியவந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் அதை அகற்றலாம் என்று இருந்தபோது சனிக்கிழமை இரவு, மூளைக்குள் அந்தக் கட்டி வெடித்து ரத்தம் கசிந்து நினைவு இழந்து கோமாவுக்குச் சென்றுவிட்டார். 'நினைவு திரும்ப 95 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 'அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவராகவே சுவாசிக்க வேண்டும். அப்படிச் சுவாசித்தால் அவரைக் காப்பாற்றலாம்’ என்றார்கள். ஆனால், இதுவரை அவராகவே சுவாசிக்கவில்லை. வென்ட்டிலேட்டர் மூலம் ஆக்சிஜனை செலுத்தி வருகிறார்கள். கிஷோருக்கு 36 வயசு ஆகுது. இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்துட்டு இருந்துச்சு. ஆனால், அதற்குள் இப்படி ஆகிடுச்சு. இயக்குநர்கள் பொறுமையாகப் பல மாதங்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு... அது அத்தனையும் எடிட்டர் டேபிளுக்கு வரும்போது மட்டும் நாலு நாட்களில் அத்தனையையும் பார்த்து உடனே எடிட் பண்ணித்தாங்க. டீஸர் கட் பண்ணித்தாங்க, டிரெய்லர் ஒட்டித்தாங்கன்னு சொன்னால் எப்படி? நாலு மணி நேரம்கூட தொடர்ந்து கிஷோர் தூங்க மாட்டார். எப்பவும் வேலை வேலைன்னு பரபரன்னு இருப்பார். அதுவே அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துடுச்சுங்க. 'இனி கிஷோர் மீண்டு வந்தாலும் ஒரு குழந்தைபோலத்தான் இருப்பார். அவரை பொறுமையாகப் பராமரிக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்க.!'' என்று கலங்குகிறார்கள் அவரது நண்பர்கள்.
கிஷோரின் அக்கா பரணி பிரியாவுக்கு ஆறுதல் சொல்லி பேசினோம். 'அவனுக்கு இப்படி ஆனதை எங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலைங்க. காசு, பணம் இந்தப் பேரு, புகழ் எதுவும் எங்களுக்கு வேணாம். எங்க கிஷோர் மட்டும் திரும்பி வந்துட்டா போதும். அவனை நாங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் காலம் முழுக்க பக்கத்துல இருந்து பார்த்துக்குவோம்!'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி  நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, ''உடலுக்கும், மனசுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்துக்குள்தான் செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் 10 நிமிட பிரேக் தேவை. மூளைக்குள் இருக்கும் ரசாயனத்தின் அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்னைகள் வரும். அப்படி குறையவோ, கூடவோ காரணம், மூளையை கசக்கி ஓய்வு இல்லாமல் வேலை செய்வதுதான். உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது மூளை தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அந்த ஓய்வு என்பது நீங்கள் நினைப்பதுபோல சாதாரணமானது அல்ல... அதுதான் கோமா!'' என்று சொல்லி அதிரவைத்தார்.

சீக்கிரம் நலமுடன் திரும்பி வாங்க கிஷோர்!
நா.சிபிச்சக்கரவர்த்தி

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Sunday, February 22, 2015

மாணவர்களைப் பிடிக்கும் பணியில் தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள்

கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், தலா 2 மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
புதிதாகப் பணிக்குச் சேரும் அனுபவம் இல்லாத பேராசிரியர்கள் பள்ளிகளுக்கும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளுக்கும் அனுப்பப்பட்டு மாணவர்களிடம் கல்லூரியை விளம்பரப்படுத்த வலியுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறிகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பொறியியல் படிப்புகளில், குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக். தகவல் தொழில்நுட்பம், இசிஇ போன்ற படிப்புகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2014-15 பொறியியல் மாணவர் சேர்க்கையின்போது ஒற்றைச்சாளர கலந்தாய்வின் முடிவில் மொத்தம் உள்ள 2,04,078 பி.இ., பி.டெக். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 1,02,636 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. மீதமிருந்த 1,01,442 இடங்களில் மாணவர்கள் சேராததால் காலியாக இருந்தன.
இதில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 1,00,600 இடங்கள் காலியாக இருந்தன. அதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை இருந்தது.
மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்த காரணத்தால் பிரபல பொறியியல் கல்லூரிகள் கூட, பொறியியல் படிப்பு இடங்களை குறைத்ததோடு ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.
இதுபோல் வருகிற 2015-16 கல்வியாண்டிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால், 3 பொறியியல் கல்லூரிகள் கல்லூரியை இழுத்து மூட அண்ணா பல்கலைக்கழகத்திடம் இப்போது விண்ணப்பித்துள்ளன. மேலும் 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கணினி பொறியியல் படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கவும் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
இந்த நிலையில், சில பொறியியல் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை இப்போதே தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர்களையே இந்தக் கல்லூரிகள் ஈடுபடுத்துவதும் தெரியவந்துள்ளது.
சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள சில பிரபல கல்லூரிகள் சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடக மாநில பள்ளிகளுக்கும் கல்லூரி பேராசிரியர்களை அனுப்பி மாணவர்களிடையே கல்லூரி குறித்து விளம்பரப்படுத்த அறிவுறுத்தியுள்ளன.
சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, பணிபுரியும் ஒவ்வொரு பேராசிரியர்களிடையேயும் வீட்டுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளிலும், பள்ளிகளிலும் கல்லூரி குறித்து விளம்பரப்படுத்த அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தலா இரண்டு மாணவர்களைச் சேர்த்தாக வேண்டியது கட்டாயம் என பணிபுரியும் பேராசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தொலைபேசி மூலம் அளித்த தகவல்:
இந்தக் கல்லூரி மட்டுமல்லாமல் ஈரோடு அருகே உள்ள மேலும் சில கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்களைச் சேர்க்குமாறு பேராசிரியர்களை நிர்பந்திக்கின்றன.
இந்தக் கல்லூரிகளின் நிர்வாகம், பணிபுரியும் அனைவரது அசல் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டிருப்பதால், வேறு வழியின்றி கல்லூரி நிர்வாகம் கூறும் பணிகள் அனைத்தையும் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதுபோன்ற கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகமும், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பிரவீண் குமார் கூறியது:
அசல் சான்றிதழ்களைத் தர மறுப்பது, கட்டாயம் இரண்டு மாணவர்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் பணிக்கு அப்பாற்பட்டு நிர்பந்திக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.
இதுபோன்ற கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி 22-02-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Saturday, February 21, 2015

தேர்வு சமயத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் - மாணவர்களே கவனம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் தொடங்கியுள்ளது. இதனால், மாணவர்களின் கவனம் பாதிக்கப்படுமே! என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலைப்படுகின்றனர்.
எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவலையைப் போக்க வேண்டியது மாணவர்களின் கடமையாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டு வேறாக இருந்தாலும், இது ஒரு கிரிக்கெட் நாடு என்பதால், விளையாட்டு என்றாலே, கிரிக்கெட்தான் என்பதாக இருக்கிறது. அதுவும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியான இதில், நடப்பு சாம்பியனாக இந்தியா களமிறங்குகிறது என்ற முக்கியத்துவமும் சேர்ந்திருக்கிறது.
எனவே, பள்ளி மாணவர்கள் (மாணவிகளைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கவலையில்லை) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அதிக கவனம் செலுத்தி, அதன்மூலம், தங்களது தேர்வின்மீது கவனம் சிதறி விடுவார்களோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.
இந்த விஷயத்தில் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய அம்சங்கள்
* உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிரிக்கெட் வாரியங்களின் வருமானத்திற்காகவும்(நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருமானத்தை திரட்டுவதற்காக அல்ல), பொழுதுபோக்கிற்காகவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி.
* கிரிக்கெட் வீரர்கள், தங்களின் வருமானத்திற்காகவும், புகழுக்காகவும் அதில் விளையாடுகிறார்கள்.
* கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதோ, ரசிப்பதோ அல்லது அதை விளையாடுவதோ எந்த விதத்திலும் தவறில்லை. ஆனால், உயர்கல்வியை நிர்ணயிக்கக்கூடிய அரசுத் தேர்வுகள் நடக்கும் சமயத்தில், அதில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தை தடுமாறச் செய்வது தேவையா?
* நமது நாட்டுப்பற்றை, உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி ஆடுவதைப் பார்த்துதான் நிரூபிக்க வேண்டியதில்லை. நாட்டுப் பற்றை நிரூபிக்க இது சிறந்த வழியுமில்லை மற்றும் இதனால் நாட்டிற்கு குறிப்பிடும்படியான நன்மை எதுவுமில்லை.
* நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமெனில், நேரடியாக நாட்டிற்கு நன்மை செய்யும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை நம்மால் இயன்ற அளவிற்கு பாதுகாத்தல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளே நாட்டுப் பற்றை நிரூபித்தலுக்கான சிறந்த உதாரணங்கள்.
* கிரிக்கெட் போட்டிகளை நாள் முழுவதும் உட்கார்ந்து ரசித்து, அதுசம்பந்தமாக தொடர்ச்சியான விவாதங்களை நடத்தி, நமது நேரத்தை வீணாக்குவதைவிட, படிப்பிற்கிடையிலான ஒரு relaxation முறையில், போட்டிகள் தொடர்பான செய்திகளை கேட்டுக் கொள்ளலாம். ஆனால், நமது அணி வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, அதை விளையாட்டாக மட்டுமே நாம் கருத வேண்டும். தோல்வியை நினைத்து கவலையடைந்து, அதன்மூலம் உங்களின் கவனத்தை படிப்பிலிருந்து விலகிச்செல்ல விட்டுவிடல் கூடாது.
* இது ஒன்றும் பிற நாடுகளுடன் நடக்கும் போர் அல்ல; தோற்றுவிட்டால் பெரிய இழப்பு என்று கவலைப்படுவதற்கு. கிரிக்கெட்டில் நமது அணி தோற்பதால், நாட்டிற்கோ, நமக்கோ எந்த இழப்பும் ஏற்படாது. மாறாக, அந்தக் கவலையில், நாம் படிப்பை கோட்டை விட்டால்தான், நமக்கு மாபெரும் இழப்பு ஏற்படுவதோடு, அதன்மூலம் மறைமுகமாக, இந்த நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது.
* சில மாணவர்களுக்கு, கிரிக்கெட்டின் மீது அலாதி ஆர்வம் இருக்கலாம். ஆனால், அதைவிட பொதுத்தேர்வு என்பது மிகமிக முக்கியமானது. கொஞ்ச நாட்களுக்கு, உங்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தியேதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
* அணி வீரர்கள், அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுகிறார்கள். எனவே, அதை வேடிக்கைப் பார்ப்பதைவிட, உங்களின் வெற்றிக்காக நீங்கள் பாடுபடுவதுதான் உங்களுக்கு முக்கியம்.
* இல்லையெனில், உலகக் கோப்பையை எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் சிரித்துக் கொண்டிருக்க, இங்கே நீங்களோ, உங்களின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்து அழுது கொண்டிருப்பீர்கள்!

Sunday, January 25, 2015

'எதிர்காலத்தில் இண்டர்நெட் காணாமல் போகும்!'

ணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார்.

ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம்' எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்கிமிட்டிடம் , எதிர்காலத்தில் இணையம் எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

இணையம் மறைந்து போய்விடும் என்று சொல்வேன் என்று இதற்கு பதில் சொன்ன ஸ்கிமிட், மேலும் கூறுகையில், "எண்ணற்ற ஐபி முகவரிகள் உருவாகி இருக்கும். எண்ணற்ற சாதனங்கள், சென்சார்க்ள், நீங்கள் அணிந்திருக்கும் சாதனங்கள் என எல்லாமே அவற்றை நீங்கள் உணராத அளவுக்கு இருக்கும்.

இந்த சாதனங்கள் எல்லாம் உங்களுடனேயே எல்லா நேரங்களிலும் இருக்கும்.

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள் ஒரு அறைக்குள் நுழைகிறீர்கள். அந்த அறை உங்களை உணர்ந்து கொள்கிறது. உங்கள் அனுமதியுடன் அறையில் உள்ள பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள்கிறீர்கள். இது போன்ற சூழல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். மிகவும் பிரத்யேகமான, தனிப்பட்ட தன்மை கொண்ட சுவாரஸ்யமான உலகம் உருவாகலாம்.

இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் புதிய அலை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற கவலையே வேண்டாம்"  என்றார். 

இதே விவாதத்தில் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்கும் கலந்து கொண்டு பேசினார். அவரும் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புக்ளை உருவாக்கும் அழிக்காது என்று கூறினார்.

இணையம் மக்களின் குரலாக இருப்பதாக கூறிய அவர்,  வரும் காலத்தில் இணையத்தால் ,மேலும் மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

யாஹூ நிறுவன தலைமை அதிகாரி மரிசா மெயர் பேசும்போது,  தனிப்பட்ட இணையம் மேம்பட்டதாக இருக்கும் என்றும், பயனாளிகள் தங்கள் தகவல்களை தாங்களே கட்டுப்படுத்தும் நிலை வரும் என்றும்   கூறினார்.

Sunday, December 21, 2014

நீங்கள் தள்ளுவண்டியா? இல்லை தானியங்கியா?

நேரத்திற்கு முடிக்க இயலாத வேலை கவலை தருவதாகவே அமைகிறது. சிறப்பாக வேலை பார்த்தால் சிறந்த வருமானத்தை, பாராட்டை வெகுமதியை அடையலாம். செயல்திறன் இன்மையோ, செயல்திறன் குறைபாடோ கெட்ட பெயரை மட்டுமே வெகுமதியாகப் பெற்றுத்தரும்.
முதலாளி இருக்கும்போது சிறப்பாகவும், முதலாளி இல்லாதபோது மோசமாகவும் செயல்படுவது அல்ல வேலை என்பது. ஒரே ஆள் இருவேறு நிறங்களைக் காட்டுவது சிறப்பாகாது.
சிக்கல் சிங்காரத்தை சமாளிப்பது எப்படி?
அடுத்த சிக்கல், பெரும்பாலான நிறுவனங்களில் புதிய ஊழியர்களை செயல்படவிடாமல் தடுப்பது நடக்கிறது. அவர்களிடம் நம்பிக்கையைக் குலைத்தல், ஒத்துழையாமை, குழப்பிவிடுதல், தவறாக வழிநடத்துதல் மற்றும் பொறாமையோடு நடந்து கொள்ளுதல் இவை எல்லாமே பணி ஒழுக்கத்தை தடுக்கிறது.
உங்கள் உடன் பணியாற்றுபவர்கள் இப்படி ‘சிக்கல்’ சிங்காரமா? அவர்களை எப்படி சமாளிப்பது? அது ஒரு கலை. பறவைகள் பலவிதம் என்பது போல மனிதர்களும் பலவிதம். நகர்ந்துகொண்டே இருப்பதுதான் நதிக்கு அழகு. பறந்துகொண்டே இருப்பதுதான் பறவைக்கு அழகு. விரிந்துகொண்டே இருப்பதுதான் அறிவுக்கு அழகு. அதுபோல வளர்ந்துகொண்டே இருப்பதுதான் வியாபாரத்திற்கு அழகு என்பதனை உணர்ந்து ஒவ்வொரு ஊழியரும் செயல்படும் போது அந்த நிறுவனம் மிகப்பெரிய உயரத்தை எட்டுகிறது.
விஷயம் கொடு, விஷம் மற்றும் விஷமம் தவிர் என்பது தாரக மந்திரமாக இருக்கட்டும். உழைப்பை அளித்தால் உயர்வைப்பெறலாம். களைப்பை அளித்தால் கஷ்டமே பெறலாம். குறிப்பாக தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும். தள்ளிப் போடுவதால் தள்ளாமையே வரும். எது முக்கியமோ அதனை முதலில் செய்தல் வேண்டும். இலைபோட்ட பின் தானே சோறு...!
செய்யும் வேலையே வாழ்க்கை
நூறு சதவீதம் தமது செயல்திறனை வெளிக்காட்டாமல் இருப்பது தனிமனிதன், நிறுவனம் இரண்டையும் வீழ்த்துகிறது. நாம் செய்வது வேலையோ அல்லது ஊழியமோ அல்ல, நமது வாழ்க்கை என்ற எண்ணத்தோடு செயல்பட்டால் எவருமே வெற்றி பெறலாம்.
பணி வாழ்வில் சிறந்த உயரத்தைத்தொடுவதற்கு, தற்போது செய்யும் முறையைவிட வேறு ஏதாவது நல்லவழி இருக்கிறதா என்று ஆராய வேண்டும். நற்செயலுக்கு வெகுமதி நிச்சயம் என்பதில் என்ன சந்தேகம்? என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
வெற்றியின் இருப்பிடம்
மகிழ்ச்சியாக செய்யும் வேலை சிறப்பாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான பணியிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும்.
கடந்த காலம் என்பது சில சமயம் நினைத்துப்பார்த்து கற்றுக்கொள்ள உதவும். அது நிலைத்து நிற்கும் இடம் அல்ல. எதிர்காலம் என்பது நினைத்துப்பார்க்க முடியும் என்றாலும் ஏற்கனவே நடந்து விட்டது போன்ற அனுபவத்தை தந்துவிடாது. ஆனால் நிகழ்காலம் என்பது முயற்சியின் உறைவிடம் மட்டுமல்ல வெற்றியின் இருப்பிடம் கூடத்தான் என்பதை நினைவில்கொண்டு செயல்பட்டால் என்றுமே வெற்றிதான்.
இப்போது சொல்லுங்கள் பணி வாழ்வில் நீங்கள் தள்ளு வண்டியா? அல்லது தானியங்கியா?
-டாக்டர். பாலசாண்டில்யன்

Tuesday, December 2, 2014

ரிஸ்க் எடு, கொண்டாடு!

ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி… என்று நிஜ வாழ்க்கையில் துணிந்து செயல்படுபவர்கள்தான் ஜெயிக் கிறார்கள். இன்று தொழிலதிபராக உள்ள அனைவரும் இந்த ரகத்தினர்தான். இந்தப் பட்டியலில் நீங்களும் சேர விரும்புகிறீர்களா? அப்படியெனில் இந்தத் தொடர் உங்களை மெருகேற்றும்.



வேலை செய்ய பிடிக்கல, நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் இதன் மூலம் சமுதாயத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே போதும். தொடர்ந்து படியுங்கள்… தொழிலதிபராகுங்கள்.

இந்தியாவின் எழுச்சியை இரு கட்டங்களாக அதாவது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன் (ஐ.டி.மு), வளர்ச்சிக்குப் பின் (ஐ.டி.பி) என பிரிக்கலாம். தொழில் தொடங்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் முதலீடு தேவை என்பது அந்தக்காலம். புதிய உத்தியோடு தொழில் தொடங்க வேண்டும் என்ற தீவிர உத்வேகம் இருந்தாலே போதும்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக தொழில் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் இளைஞர்களிடையே இப்போது அதிகரித்துள்ளது டாட் காம் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் கூட மேக்மைடிரிப்.காம் நிறுவனத்தின் தீப் கல்ரா, நௌக்ரி.காம் நிறுவனத்தின் சஞ்சீவ் பிக்சந்தானி ஆகியோர் பொதுப் பங்கு வெளியிட்டு வெற்றிகரமாக வலம் வந்தது இளைஞர்களின் ஆசைத் தீயில் நெய் வார்த்தது.

மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே பலரால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அல்ல. ஒரு நபரின் தீவிரமான முயற்சியின் வெளிப்பாட்டில் விருட்சமாக வளர்ந்தவை இவை. அதற்காக நீங்கள் மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் சிந்தனையை எவ்வளவு விரைவாக செயல்படுத்துகிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது முன் னேற்றம்.

புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம், முறையான படிப்பு, கடின உழைப்பு அல்லது அனுபவம் இவற்றில் எது தொழிலதிபராக்க உதவும் என்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பாளி, எம்பிஏ படிப்பு முடித்தவர், புத்திசாலி ஆகியோர் உருவாக்கிய நிறுவனங்கள் நொடித்துப் போயுள்ளன.

அதேசமயம் மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி, அருண் ஐஸ் கிரீமால் தமிழக மக்களை குளிர்வித்த என்.ஜி. சந்திரமோகன், பிரியாணி சுவையில் பலரைக் கட்டிப்போட்டுள்ள தலப்பாகட்டு பிரியாணி உணவகத்தைத் தொடங்கிய நாகசாமி நாயுடு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே முறையாகப் படிக்காதவர்கள்தான். எனவே தொழி லதிபராவதற்கு முறையான படிப்பு அவசியம் இல்லை என்பதை இவர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே சிறந்த தொழிலதிபராக உருவாக கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற திறந்த சிந்தனையோடு இருக்கவேண்டும். மாற்று யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட வேண்டும். தொழில் முனைவோராக வேண்டும் என்ற உத்வேகமே உங்களை கோடீஸ்வர தொழிலபதிபராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொழில் முனைவோராக என்ன தேவை?

1. நீங்கள் அளிக்கும் சேவை (Service) அல்லது தயாரிக்கும் பொருள் (Product) எந்த பிரிவினருக்கானது என்பதை அடையாளம் காண வேண்டும்.

2. நீங்கள் அளிக்க உள்ள சேவை அல்லது பொருள் சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதா என்று சிந்திக்க வேண்டும்.

3. பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் பணம் செலவிடத் தயாராக இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.

மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில் கிடைத்தால் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள் என்று அர்த்தம். சரி அடுத்தகட்டமாக நீங்கள் தயாரித்த பொருள் அல்லது சேவை எந்தப் பிரிவினருக்கானது என்று அடையாளம் கண்டீர்களோ அவர்களிடம் சென்று அந்த சேவை அல்லது பொருளின் தேவை குறித்து விசாரிக்க வேண்டும்.

உங்களது தயாரிப்பு, சேவைக்கு அவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் போதும் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறலாம். சமீபத்தில் 83 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் தொழில் முனைவு சிந்தனைக்கான இறுதி போட்டியில் வெற்றி பெற்றது தமிழக இளைஞர்களின் சிந்தனைதான்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் போன்ற புதிய சேவையை இவர்கள் உருவாக்கியதுதான். வழக்கமான தொழில்களிலிருந்து மாற்றி யோசித்தாலே தொழிலின் முதல் படியில் நீங்கள் ஏறுகிறீர்கள் என்று அர்த்தம். விரைவிலேயே தொழில் உங்கள் வசமாகும்.

- கே.சுவாமிநாதன் 

aspireswaminathan@gmail.com


Friday, November 28, 2014

பெண் மனமே நலமா? என் பார்வை

பெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 



மிக மோசமான மனநோய்கள் ஆண்களை பாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.

மாதவிடாய் சார்ந்த பிரச்னை:

மாதவிடாய்க்கு முன் பல பெண்களுக்கு மனநிலையில் ஓர் மாற்றம் தென்படலாம். இதை 'PREMENSTRUAL SYNDROME (PMS)' என்பர். இந்த நேரங்களில் எரிச்சல், கோபம், மனவருத்தம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் வெறித்தனமும், தற்கொலை எண்ணமும்கூட தலை தூக்கலாம். இதுபோன்ற மனநிலை வேறுபாடுகள் மாதம் மாதம் வரும்போது கவனம் தேவை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றியமைப்பு மற்றும் மருந்துகளால் தீர்வு காணலாம். அதுபோன்று மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில்(45 அல்லது 50 வயது) மனநல பாதிப்புகள் வரவாய்ப்புண்டு. நாளமில்லா சுரப்பிகளின் மந்தநிலை காரணமாகவும், பெண்மை போய்விட்டதோ என்ற உணர்வு காரணமாகவும், பிள்ளைகளின் படிப்பு, வேலைநிமித்தம், அவர்களை பிரிந்து வாழ்தல் ஆகிய நாட்களில் மனவருத்த நோய் அதிகளவில் வர வாய்ப்புண்டு. தவிர மனப்பதட்டம், காரணமற்ற சந்தேகங்கள், எங்கே கணவர் தன்னை கைவிட்டு விடுவாரோ என்ற நம்பிக்கையின்மை இக்கால கட்டத்தில் காணப்படும்.



பிரசவ கால மனநல பிரச்னை:

பெண்கள் கர்ப்பமாய் இருக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டு மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம். பிரசவத்திற்குபின் உடனடியாக சில நாட்களில் மனநிலையில் மாற்றம் வருவதை அடிக்கடி காணமுடியும். முக்கியமாக மனவருத்தம். மனவருத்த நோயாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையை எப்படி வளர்ப்பது போன்ற பயம், தன்னம்பிக்கையின்மை ஏற்படலாம். குழந்தையின் மேல் பாசமின்மை, எதிலும் நாட்டாமில்லா உணர்வு போன்றவையும் ஏற்படலாம். சிலருக்கு 'ஸைகோஸிஸ்' எனும் மனநோய் வரலாம். தூக்கமின்மை, இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் தவறான கற்பனை, ஆக்ரோஷம், பயம், சந்தேகம் போன்றவை தோன்றும். நோய் தீவிரமாகி தாயின் தன் உணர்வற்ற நிலையினால் கருவில் உள்ள சிசு உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கருச்சிதைவுக்கு பின்பும் இவ்வகை மனநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.



மண வாழ்க்கையை பாதிக்கும்:

பெண்களுக்கே உரித்தான கருக்கலைப்பு, கர்ப்பப்பை அகற்றல், கற்பழிப்பு போன்றவற்றாலும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படலாம். குறிப்பாக சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளில் சில பேர் பிற்கால மணவாழ்க்கையில் சிரமப்படும் அபாயம் உண்டு. பெண்களின் தனிப்பட்ட உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி காரணமாக வெவ்வேறு காலக்கட்டங்களில், இயற்கையாகவே சில சமயம் கடுமையாகவே பாதிக்கப்படும். இம்மாதிரியான நேரங்களில் மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு மனநல சிகிச்சை பெறுவது அவசியம். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் முற்போக்கு சிந்தனை வேண்டும். அவர்களின் பழக்கவழக்கம், படிப்பு போன்றவற்றில் அவர்களுக்கு கண்காணிப்புடன்கூடிய கருத்து சுதந்திரம் வேண்டும். சிறந்த கல்வியறிவும் வேலை பார்க்கும் சூழ்நிலையும் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு என்பது இயற்கையாகவே அமைந்துவிடும். அதேசமயம் அது அவர்களுக்கு ஒரு மனப்பாதுகாப்பு கவசமாக மாறி நிற்கும். பெண் என்பவர் தன் உடல் என்ற எண்ணெய்யில் மனம் என்ற திரியாக நின்று மகிழ்ச்சி எனும் ஒளி தரும் ஒரு குடும்ப விளக்கு என்பதை நினைவில் கொள்வோம். பெண்ணின் மனநலமே அவள் குடும்பத்தின் மனநலம்.


- டாக்டர் ஆர். பாஹேஸ்ரீதேவி, மனநல நிபுணர், மதுரை. 93444 60432 

ஜெயித்துக் காட்டுவோம் - கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

இன்றைய சமூகத்தில், ஒவ்வொருவர் மனதையும், நான்கு விதமான பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அந்த பூச்சிகள், உங்கள் மனதையும் அரித்தபடி தான் இருக்கின்றன.சுயநலம், நன்றி கெட்டத்தனம், உணர்ச்சியற்ற தன்மை, எடை போடுதல் ஆகியவையே அவை.



சுயநலம்:நீங்கள் எல்லாம் வறுமையில் இருந்து வந்திருப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியாது என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நானும், உங்களைப் போல, மாநகராட்சி பள்ளியில் படித்து தான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன். வறுமையில் முன்னேறுவது பெரிய விஷயம் இல்லை. சுயநலத்தால் தான் முன்னேற முடியாது.ஒரு கதை... வறுமையில் உள்ள, அப்பா இல்லாத ஒரு குடும்பத்தில், அம்மா தன் நிலத்தை விற்ற பணத்தில், மகளுக்குப் பிடித்த தங்க கம்மலை வாங்கிக் கொடுக்கிறார். அதன் பின்னும், அம்மாவிடம் பணம் இருப்பதை அறிந்து, மற்றொரு கம்மல் கேட்கிறாள் மகள்.இப்படித்தான், இன்றைய மாணவர்கள் சுயநலத்துடன் இருக்கின்றனர். ஆனால், அந்த தாய்க்கும் ஆசைகள் இருக்கும்.அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட உங்களுக்கு தோன்றாது. அப்படி இருந்தால், கண்டிப்பாக, உங்களால் முன்னேற முடியாது.

நன்றி கெட்டத்தனம்:பெரும்பாலான அப்பாக்கள் குடிப்பதாகவும், அவர்களை வெறுப்பதாகவும், மாணவர்கள் கூறுகின்றனர். குடிப்பது தவறு தான். ஆனால், அந்த அப்பாக்கள் குடிப்பதற்கு பின்னால், பல பிரச்னைகள் இருக்கலாம்.அதைப் பற்றி ஆராய, யாருக்கும் மனம் வராது. பலர், உடல் உழைப்பின் களைப்பு தீரவும், பலர் ஏமாற்றங்களை மறக்கவும் என, பல்வேறு காரணங்களுக்காகவும் குடிக்கலாம். ஆனால், அந்த அப்பாக்கள் உங்களுக்கு செய்யும்

செயல்களை எண்ணிப் பார்த்தது உண்டா?இன்னொரு கதை... ஒரு அப்பா, ஒரு துணிக் கடைக்குச் செல்கிறார். அவருக்குப் பிடித்த சட்டையைப் பார்க்கிறார். அதை வாங்கப் போகும்போது, மகன் காலில் இருக்கும், பிய்ந்த செருப்பு ஞாபகம் வருகிறது. அவர், உடனே, செருப்பு வாங்கி வருகிறார். இப்படி, உள்ள அப்பாக்களை தான், நீங்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; படிக்க மறுக்கிறீர்கள்.

உணர்ச்சியற்ற தன்மை:உங்களுக்காக, இரண்டு ஜீவன்கள் உருகியபடி இருப்பதை, நீங்கள் உணர வேண்டும். இளமையில் வறுமையை விட, முதுமையில் வறுமையே கொடுமையானது. அந்த வறுமையை விரட்ட, நீங்கள் படிக்க வேண்டும்.இல்லையேல், உங்கள் தாயைப் போல, எங்கேனும் வீட்டு வேலை செய்து கொண்டோ, தந்தையை போல குடித்துக் கொண்டோ தான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள். உணராமல் இருப்பது தான், உணர்ச்சியற்ற தன்மை.

எடை போடுதல்

மாணவர்களே... இப்போது, நீங்கள் இருக்கும் சூழலையும், பின் இருக்கப்போகும் சூழலையும் எடை போடுங்கள். தியான நிலையில், கண்களை மூடிக்கொண்டு, மனதால், நான் சொல்லும்

இடங்களுக்கு வாருங்கள்.

இப்போது, உங்கள் வீட்டுக்கு போகிறீர்கள். அங்கு, வறுமையின் பிடியில் உங்கள் பெற்றோர், ஏதோ ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள், அவர்களை கவனிக்காமல், கிரிக்கெட் விளையாடவோ, திரைப்படம் பார்க்கவோ செல்கிறீர்கள். திரும்பி வந்து, உணவை குறை சொல்கிறீர்கள்.உங்களுக்கு 3 வயதாக இருக்கும் போது, உங்களுக்கு உடல் நலமில்லை. உங்களை துாக்கிக் கொண்டு, ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடுகின்றனர். அவர்களைத் தான், இப்போது நீங்கள் திட்டுகிறீர்கள்.

உங்கள் தவறுகளை உணராவிட்டால், உங்களால், எதையும் செய்ய முடியாது. இப்போது, காலங்கள் ஓடி விட்டன. நீங்கள், வசதியான வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள், பெற்றோரின் கால்களை, உங்கள் மடியில் வைத்துக் கொண்டு, நீங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர்களும் மன்னித்து விடுகின்றனர்.

அதே போல், அவர்கள் சூழ்நிலையால் செய்த தவறுகளையும் நீங்களும் மன்னித்து விடுங்கள். இப்போது, ஆண்டவனிடம் வேண்டுங்கள். 'இறைவா, என் குடும்பத்தை காப்பாற்றி நல்ல நிலைக்கு வர, நான் தினமும், மூன்று மணி நேரம் படிக்க வேண்டும். அதை புரிந்து படிக்கும் மன நிலையை எனக்கு அருள வேண்டும். நான், பிளஸ் 2வில் ஜெயிப்பேன். அதற்கான, மன உறுதியை கொடு' என, வேண்டிக் கொள்ளுங்கள்.இப்போது, ஜெயித்து விட்டீர்கள். மெதுவாக, கண்களைத் திறந்து அருகில் இருப்பவர்களைப் பார்த்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி அணைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

Wednesday, November 26, 2014

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அனைத்துக்கும் இனி சிறப்புக் கட்டணம்: விரைவில் அறிவிக்கிறது ரிசர்வ் வங்கி

இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதியளிக்க உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. தொடக்கத்தில், அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களில் அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அதன்பிறகு, எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்-களை மாதத்தில் 5 தவணைகளுக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதத்தில் 5 தவணைகள் மட்டுமே ஏ.டி.எம்.களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலதிக தவணைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தன. இனி அடுத்த கட்டமாக, ஆன்லைன் மூலம் நடைபெறும் அனைத்து விதமான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து ’தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் கமிஷன் பிடித்தம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.

சினிமா டிக்கெட்டிலிருந்து டெலி ஷாப்பிங் வரை அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதில் செய்ய முடிகிறது. ஆனால், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக பெரும்பாலான வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

இந்தியா முழுவதும் தினமும் சுமார் 10 லட்சம் கோடிக்கு ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதில் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு ஆன்லைனில் பணம் மாற்றப்படுவதற்கு தற்போது மிகக் குறைந்த அளவிலான கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. ஒருசில பரிவர்த்தனைகள் கட்டணம் ஏதும் இல்லாமலும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். மேலும், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கக் கூடாது என அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் குறைந்தபட்ச பண இருப்பு கட்டுப்பாட்டை அமலில் வைத்திருப்பதால் சாமானியர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கத் தயங்குகிறார்கள். இதனால் இவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடி கொடுக்கல் வாங்கல் மூலமே நடைபெறுகிறது. இந்த நிலைமையை தவிர்த்து அனைவரது பண பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச பண இருப்பு முறையை ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஆனால், இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத கணக்கு களையும் அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளையும் கையாள வேண்டிய பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டு விதிவிலக்கு ஏதுமின்றி அனைத்து விதமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டு வங்கிகள் தரப்பிலிருந்து அண்மையில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் இதை பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறது. எனவே விரைவில் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரலாம் என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, November 22, 2014

பாதுகாப்புக்கு முன்னுரிமை!

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் கார்களுக்கு சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயம் ஆக்குவது என்று அரசு தீர்மானித்திருக்கிறது. எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு, என்றைக்கோ நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய நடவடிக்கை இது!
புதிய கார்களின் சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கைதான் இந்த முடிவு எடுக்க அரசை தூண்டியிருக்கிறது. உலகில் தயாரிக்கப்படும் கார்களை அதிவேகத்தில் ஏதாவது ஒன்றின் மீது மோதவிட்டு, அதன் தாக்குப் பிடிக்கும் சக்தி பரிசோதிக்கப்படுகிறது. அந்த முறையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்திய, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க நிறுவனங்களின் மோட்டார் கார்களும் மோதல் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. ஆனால், ஒரு கார்கூட அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பது புதிய கார்களின் தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.
நமது இந்திய கார்களை மனிதர்கள் ஓட்டிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவர்கள் பலத்த காயம் அடைந்திருப்பார்கள் அல்லது மடிந்திருப்பார்கள் என்கிறது அறிக்கை. அந்தச் சோதனைகளின் ஒளிப்படம் வெளியிடப்பட்டு அதைப் பார்க்கிறவர்கள், இந்தியாவில் தயாரித்த கார்களில் ஏறுவதற்கேகூட பயப்படுவார்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய கார்களின் சந்தையாக மாறிவிட்டிருக்கிறது. உலகிலுள்ள குறிப்பிடத்தக்க எல்லா மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இப்போது இந்தியாவில் கார்களைத் தயாரிக்கின்றன. ஆனால், அவர்கள் வெளிநாடுகளிலும், தங்களது தாய்நாட்டிலும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும், தரக் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் இந்தியாவில் தயாரிக்கும் கார்களில் கடைப்பிடிப்பதில்லை. எரிபொருள் சிக்கனத்திலும்கூட இந்தியக் கார்கள் தரம் தாழ்ந்தவையாகவே இருக்கின்றன.
இதற்கு கார் தயாரிப்பாளர்கள் கூறும் காரணம் விசித்திரமானது. இந்தியர்கள் விதியில் நம்பிக்கை உடையவர்கள் என்பதால், அவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை என்பது முதல் காரணம். இரண்டாவதாக, இந்தியர்கள் விலை பற்றிய சபலத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குறைந்த விலைக்குக் கார்கள் கிடைக்குமானால் அதைத்தான் விரும்புவார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 55 லட்சம் பேர் பலத்த காயம் அடைந்து ஊனமுற்றவர்களாகவும், செயலிழந்த நிலையிலும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், கார்கள் தரமானவையாக இல்லாமல் இருப்பதும், பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படாமல் இருப்பதும்தான்.
இந்தியாவில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருக்கும் ஐந்தில் மூன்று பிரபலமான கார்கள், சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தில் நேரடி மோதல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நொறுங்கி விட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அந்தக் கார்களின் தயாரிப்புத் தரம்தான் என்று கூறப்படுகிறது. இதே தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாடு
களில் விற்பனை செய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கும் கார்கள், தர நிர்ணய சோதனையில் சிறப்பானதாகத் தேர்ச்சி பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் இப்போதைய சட்டதிட்டப்படி ஐரோப்பா, அமெரிக்காவில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகளின் அடிப்படை மோதல் சோதனைகூட இந்தியாவில் கார் தயாரிப்பாளர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தனியார் மோதல் சோதனைத் திட்டத்தின் அடிப்படையில் மோட்டார் கார்களின் பாதுகாப்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே, நுகர்வோர் கார்களின் தரத்தை எடை போட முடியும்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், நடுத்தர மக்கள் கார்களை வாங்க முடியாத அளவுக்கு விலையை அதிகரிக்க வைத்து விடும் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களின் விற்பனையையும், லாபத்தையும் உறுதிப்படுத்துவதைவிட, பொதுமக்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முன்னுரிமையாக இருந்தாக வேண்டும்.
அரசு கொண்டு வர இருக்கும் "சாலை வாகனம், பாதுகாப்பு மசோதா - 2014' என்பது பழைய 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு மாற்றாக இருக்கும். இது நடைமுறைக்கு வரும்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்திலான அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களை அவர்களது கார் தயாரிப்பில் உறுதிப்படுத்தியாக வேண்டும். இப்போதாவது விழித்துக் கொள்கிறோமே, அந்த வரைக்கும் மகிழ்ச்சி!

Thursday, November 20, 2014

செல்பேசியில் பேசிப்பேசி...

முன்பெல்லாம் செல்வர்களின் வீட்டில் மட்டுமே போன் இருந்தது. அது தரைவழித்  தொடர்புத் தொலைபேசி. இப்போது நிலைமை மாறிவிட்டது.
காய்கறி விற்பவர்கள், கால் டாக்சி ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஸ்திரிகள், வீட்டுக்கு வீடு பால் விநியோகம் செய்பவர்கள், பேப்பர் போடுபவர்கள் என்று எல்லோருடைய கையையும் செல்போன் அலங்கரிக்கிறது.
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அறுபதாம் வயது வரை என்னிடம் செல்போன் இல்லை. அதற்குப் பின் நான்காண்டுகள் கழித்தே, நான் வேண்டாமென மறுத்தும் என் மகள் தன் செலவில் ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்து விட்டாள்.
நான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பரபரப்பாக இருந்தபோது என்னிடம் செல் இல்லை. பணி ஓய்வு பெற்ற பிறகு, உறவினர்கள் நடுவே "வேலை வெட்டி இல்லாத மனுஷன்' என்ற விருதினைப் பெற்ற பிறகே, செல்போன் என்னைத் தேடி வந்தது.
என்னோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ளும்போது பேசுகிறேன். எனக்குத் தேவைப்படும் போது நானே தொடர்பு கொள்கிறேன். மிக அவசியமானால் சிலருக்கு அபூர்வமாகவே குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.
என் போனில் படம் எடுக்கும் வசதியுண்டு. இருப்பினும் எடுப்பதில்லை. ஸ்மார்ட் போன், ஆண்டிராய்டு என்றெல்லாம் சொல்கிறார்களே - அந்த அதி நவீன போன்களை எனக்கு இயக்கத் தெரியாது.
ஒரே வீட்டில் வாழ்கிற கணவன், மனைவி, கல்லூரிக்குப் போகும் பெண், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பாட்டி என எல்லாருமே ஆளுக்கொரு போன் வைத்திருக்கிறார்கள்.
வர்த்தக முதலைகள், பங்குச் சந்தைத் தரகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், வங்கி அதிகாரிகள், காவல் துறையினர், பத்திரிகை நிருபர்கள் - இவர்களெல்லாம் பிறரோடு அடிக்கடி பேச வேண்டிய நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு அது தேவை.
நகரப் பேருந்தில் நான் நின்றவாறு பயணிக்கும் போதெல்லாம், பலர் செல்லில் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் யாரோடு பேசுவார்கள்? என்னதான் பேசுவார்கள்? சிலர் செல்லில் சத்தமாகப் பேசுவார்கள். குடும்பப் பூசல் உலகத்துக்கே தெரிய வேண்டுமா?'
நீண்டநேரம் பேசும்போது போனிலிருந்து புறப்படும் கதிரியக்க வீச்சு நம் செவிமடலைச் சுடும். அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாவது பேச்சை முடிக்கலாமே! போன் என்பது தகவல் பரிமாற்றத்திற்கே. இதுவே அதன் அடிப்படைத் தத்துவம். அது இப்போது அடிபட்டுப் போய்விட்டது. வீண் வம்பு பேசவும், வெட்டியரட்டை அடிக்கவுமே இப்போது செல்போன் பயன்படுகிறது.
சிலர் தூங்கும் போதும் செல்போனை தலையணையருகே வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.
வெளியூரிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்ளோடு மணிக்கணக்காக பேசும் சிலர் சொந்த மனைவி மக்களோடு முகம்கொடுத்துப்பேசார். மூத்து முதிர்ந்த பெற்றோர்களோடு மௌனத்தால் உரையாடுவர்.
அண்மையில் உள்ளோரை அன்னியப்படுத்திவிட்டு, அயலாரை அண்மையராக ஆக்கும் இக்கலாசார மாற்றம் மனிதனை எங்கே கொண்டு போய் விடும்?
போதைகளில் பல வகை உண்டு. மக்கள், இப்போது செல்போன் போதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சிலர் உணவு உண்ணும் போதுகூட, தம் பார்வை படுகிறாற்போல் செல்போனை வைத்துக் கொள்கிறார்கள். அது சிணுங்க ஆரம்பித்தாலே இவர்கள் உணவை மறந்துவிட்டு எழுந்து நிற்கிறார்கள். தம் உணவு நாட்டத்தைத் துறந்து ஓடுகிறார்கள்; உரக்கப் பேசுகிறார்கள். நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு செல்போன் பேச்சும், அதனால் ஏற்படும் கவனச் சிதறலுந்தான் காரணம்.
சாலை விபத்து பற்றிய செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளிவந்தாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களை மிகப்பெரிய சர்க்கஸ் வீரர்களாகவும் அஷ்டாவதானிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.
செல்போனுக்கு எதிரியல்ல நான். காரை ஓட்டிச் செல்லும்போது, அது நடுவழியில் இடக்கு செய்தால் பழுது பார்ப்போரை உடனே அழைக்க வேண்டும். வீட்டிலுள்ள முதியோர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். கல்லூரிக்கோ பள்ளிக்கோ சென்ற குழந்தைகள் சரியான நேரத்துக்குத் திரும்பி வரவில்லை என்றால், அக்கல்வி நிலையத்துக்கு போன் செய்து விசாரிக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் செல்போன் மட்டுமே உதவும்.
ஆனால், எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் நம் அன்றாட வசதிக்காகவே இருத்தல் வேண்டும். அதையே மிகையாகப் பயன்படுத்தினால் வேண்டாத சிக்கலில் சிக்கிக் கொள்வோம்.

By எழில்முதல்வன்

Friday, October 31, 2014

ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்: நாளை முதல் அமல்!


சென்னை: ஏ.டி.எம். கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை (1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.


வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவிதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்.கார்டை இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, பணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் நாளை (டிச.1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

விகடன்

Tuesday, October 28, 2014

நரைக்கு போடாதீங்க திரை!


இது போன்ற சாயத்தைத் தலையில் போட்டவுடன் சிலருக்குப் பிரச்னை வரலாம். சிலருக்குச் சில நாட்கள் கழித்து பாதிப்பு தென்படலாம். இந்தப் பாதிப்பு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுத்தி, தலையில் எரிச்சல், தலைமுடி உதிர்தல், முடியில் பிளவு ஏற்படுதல், தலையில் செதில் செதிலாகத் தோல் உதிர்தல் நேரிடலாம்.   கொப்புளங்கள் போன்றவையும் உருவாகக்கூடும். இதுவே, அனஃபைலசிஸ்(Anaphylaxis) என்ற கடுமையான அலர்ஜியை உண்டு பண்ணும்.  


தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு, அவர் தலைக்குப் பயன்படுத்திய சாயமும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றன மீடியாக்கள். 'தலைக்கு அடித்த சாயமே தலைவரை சாச்சிடுச்சே!’ என்று தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். தலைக்கு அடிக்கும் 'டை’ அந்த அளவுக்கு ஆபத்தானதா? தோல் சிகிச்சை நிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமான டாக்டர் மாயா வேதமூர்த்தியும், ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனும் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள்.   
''அழகு நிலையங்களுக்கு சரும அழகுக்காக செல்பவர்களைவிட, தலைக்குச் சாயம் பூசச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.  தலைக்குப் பூசும் சாயத்தில் தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைகள் உண்டு.  தற்காலிகம் மற்றும் ஓரளவு நிரந்தரச் சாயம் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நிலைக்கும். ஆனால், நிரந்தரச் சாயம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும்.  இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது நிரந்தர சாயத்தைதான்'' என்கிற மாயா, சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொன்னார்.  

''இயற்கையான மருதாணி இலைகளை அறைத்துப் பூசுவதால் எந்த பாதிப்பும் நேராது. அதேபோல அம்மோனியா கலவை இல்லாத - பிபிடி 2.5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள - தலைச்சாயத்தையும் பயன்படுத்தலாம். பேட்ச் டெஸ்ட் என்ற பெயரில் கை, கால், காதுக்கு பின்புறம் ஒரு துளி டையைப் போட்டு, அரிப்பு, தடிப்பு போன்ற எந்தப் பிரச்னைகளும் இல்லை என்றால், டை போட்டுக் கொள்ளலாம். இப்படிப் பரிசோதித்து டை அடிப்பதன் மூலம் ஓரளவு பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
தலைக்கு அடிக்கும் டை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். காரணம், சாயங்களில் ஆக்சிடைசிங் ஏஜென்ட் (Oxidizing agent), பிபிடி என்ற பாராபினைலின் டை அமின் (Para-Phenylenediamine), ரெசார்சினால் (Resorcinol), அம்மோனியா (Ammonia), ஹைட்ரஜன் பராக்சைடு (Hydrogen peroxide)போன்ற மிகத் தீவிர ரசாயனப் பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனப் பொருட்கள் அனைத்துமே உடலுக்குத் தீங்கு செய்பவை.
இதனால் மூச்சுத் திணறல் அதிகமாகி, நுரையீரல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய அளவுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாராபினைலின்டைஅமின் வாசமே சிலருக்கு ஆஸ்துமா, தீவிர சளி போன்றவைகளை உருவாக்கும்.
மேலும் தொடர்ந்து தலைச் சாயம் பயன்படுத்தும்போது, தலைமுடியின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், சாயத்தில் உள்ள ரசாயனம் உடலில் சென்று ரத்தத்துடன் கலந்து, சிறுநீரகம் வழியாக வெளியேறும்.      
ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப, ஒவ்வொருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து, ரத்தப் புற்றுநோய், நீர்ப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பல பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். கண்ணில் பட்டால், இளம் வயதிலேயே கண்புரை வருவதுடன், கண்பார்வை இழப்புகூட நேரலாம். ஆகையால் நிச்சயம் தேவை எச்சரிக்கை'' என்று உஷார்படுத்தினார் டாக்டர் மாயா வேதமூர்த்தி.  
''இயற்கையோடு இணைந்தாலே... இல்லை வியாதி'' என்று சொல்லும் ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் தலைக்குச் சாயம் பூசுவதைப் பற்றி தெளிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
''இன்று சமூகத்தில் எல்லா விஷயங்களுமே கலப்படம் தலைவிரித்தாடுகிறது. தலைச்சாயமும் இதற்கு விலக்கல்ல. தலைமுடிக்குச் சாயம் போடுவதினால் வெளித்தோற்றத்திற்கு அழகாகத் தெரிந்தாலும் உடலுக்குப் பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  
நரை முடி வயதின், அனுபவத்தின் வெளிப்பாடு.  இது வெட்கப்படவேண்டிய விஷயம் இல்லை.  வயதுக்குரிய மரியாதையை, மதிப்பைப் பெற்றுத் தரக்கூடிய விஷயம்.    
பெண்களுக்கு, 45 வயதில் மெனோபாஸ் வருகிறது எதனால் என்றால், இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்... கஷ்டம் என்று இயற்கையே நிறுத்துவதாகத்தான் அர்த்தம்.  இயற்கையை மீறிக் குழந்தை பெற்றுக் கொண்டால், அது தாய்க்கு மட்டும் அல்ல, பிறக்கும் குழந்தைக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கும் வெங்கட்ராமன் ''கறை படியாத நரையே அழகு'' என்கிறார் நெற்றியடியாக.
''தலை எழுதும் சுயசரிதை... அதில் அன்பே ஆனந்தம்!'' என நரையைப் பார்த்துச் சிலிர்த்தார் வைரமுத்து.
நாமும் நரையைப் பார்த்து அப்படியே சிலிர்க்கச் செய்யலாம்... இல்லையேல் பாதுகாப்பான டை எது என்பதைச் சரியாகக் கண்டறிந்து நரை போக்குவதே நலம்!