என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இது மாதிரியொரு சினிமாவை இயக்கித் தர பாலாவால் மட்டுமே முடியும்..! மனித
மனங்களின் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, குரோதம், காமம் என்று
அனைத்தையும் கலந்து கட்டியடிப்பதில் பாலாவுக்கு நிகர் பாலாதான்..! அவருடைய
ஏழாவது படைப்பான இதுவே, அவர் பெற்றெடுத்த பிள்ளைகளில் மிகச் சிறப்பானது
என்பதில் ஐயமில்லை..!
1939-களில் நடந்த கதையை இத்தனையாண்டுகள் கழித்து செய்வதற்கே ஒரு தைரியம்
வேண்டும்.. அதன் நேர்த்தியை, களத்தை, கதையை சிறிதும் கெடாமல்,
முடிந்தவரையிலும் ருசிக்க வைக்கும் பண்டத்தை போல சுவைபட கொடுப்பதும் ஒரு
படைப்பாளியின் திறமை.. பாலா மட்டுமே தனிப்பட்ட குணத்தில் சினிமாவுலகத்தில்
பெரும் சர்ச்சையான மனிதராக இருந்தாலும், பத்திரிகையாளர்களால்கூட பெரிதும்
மதிக்கத்தக்க இயக்குநராகவே இருக்கிறார்.. இப்போது இன்னும் ஒரு படி மேலே
போய்விட்டார்..!
ஆங்கிலத்தில் ‘ரெட் டீ’ என்ற பெயரில் வெளிவந்து, தமிழில் ‘எரியும்
பனிக்காடு’ என்ற பெயரில் ஹெச்.சி. டேனியலால் மொழி பெயர்க்கப்பட்ட இக்கதை
இத்தனை நேர்த்தியாக நெய்யப்பட்டு வெளிவரும் என்று நூலாசிரியர்களே
நினைத்திருக்க மாட்டார்கள்.. இன்று காலையில் இருந்தே இந்த ‘எரியும்
பனிக்காடு’ நூல் இணைய உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது..! அதன்
ஆசிரியருக்கு வாழ்த்துகள்..!
1939-களில் தென்தமிழ்நாட்டில் நெல்லை சீமையோரமாக இருக்கும் சாலூர்
கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக் கதை..! நிஜமாகவே ரத்தமும்,
சதையுமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..! முதல் பகுதியில் எத்தனை சந்தோஷமாக
வாழ்ந்த அந்த மக்கள், இரண்டாம் பகுதியில் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில்
சிக்கி எப்படி தங்களது வாழ்க்கையை தொலைத்தார்கள் என்பதை உருக்கத்துடன்
உருக்கியிருக்கிறார் பாலா..!
கிடைக்கின்ற கூலியையும், தானியங்களையும் வைத்து வாழ்ந்து வரும்
மக்களிடையே அதிகப் பணம் என்ற ஆசை காட்டி இழுக்கிறார் கங்காணி.. தங்களது
சொந்த மண்ணைவிட்டு போக வேண்டிய வருத்தம் இருந்தாலும், பஞ்சம் பொழைக்க
போய்த்தானே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சொர்க்க பூமிக்கு பயணமாகிறார்கள்
மக்கள்..!
48 நாட்கள் நடை பயணத்திற்குப் பின்பு கேரள எல்லையில் இருக்கும் அந்த
எஸ்டேட்டுக்குள் போன பின்புதான் தெரிகிறது அது அவர்களுக்கு நரகம் என்று..!
அடியாட்களின் மிரட்டல்கள், அடி, உதை.. எஸ்டேட் ஓனரின் பாலியல் வேட்கைக்கு
பெண்கள் பலியாவது..! தப்பித்துப் போக பார்த்தால் கெண்டைக்கால் நரம்பை கட்
செய்வது..! கூலிப் பணத்தில் காந்தி கணக்கு எழுதி பணத்தைக் குறைவாகக்
கொடுப்பது.. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் கடுமையான வேலை என்று
தாங்கள் கொண்டு வந்த சந்தோஷத்தை அங்கே ஒரே நாளில் இழக்கிறார்கள் அந்த
அப்பாவி மக்கள்..!
நமது ஹீரோ ராசா என்னும் ஒட்டு பொறுக்கியாக கிண்டலுடன் அழைக்கப்படும்
ரெண்டுங்கெட்டான் மனதுடன் இருக்கும் கேரக்டர் அதர்வா..! ஊரில்
இருக்கும்போதே வேதிகா என்னும் அங்கம்மாவுடன் காதல்.. அது ஒரு எல்லை
மீறியதாகவும் இருக்க… அதர்வா எஸ்டேட்டுக்கு கிளம்பி வந்தவுடன் அங்கே
அங்கம்மாவின் வயிற்றில் பிள்ளை..! 4 ஆண்டுகள் கழித்தும் ஊருக்குச் செல்ல
வழியில்லாமல் மீண்டும் அடிமைத்தனம்..! இன்னும் 2 ஆண்டுகள் கழித்தும் போக
முடியாமல் தவிக்கும்போது அந்த கிளைமாக்ஸ்..! அடிவயிற்றில் ‘ஐயோ’ என்னும்
ஒரு உணர்வை ஒரு நொடியில் கொண்டு வந்து காண்பித்துவிட்டார் பாலா..!
முதல் பாதியில் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! இறந்து
கொண்டிருப்பவரின் கை உயரத் தொடங்கியபோதுதான் ‘ஓ இடைவேளையா’ என்ற எண்ணமே
வந்தது.. இத்தனையாண்டுகள் கழித்து இப்படியொரு சிச்சுவேஷன்.. இடைவேளைக்கு
பின்பும் சற்றும் செல்பேசியைத் துழாவ விடாமல் வைத்த கண் பார்க்காமல் திரையை
பார்க்க வைக்கிறார் இயக்குநர் பாலா..! வெறித்தனமான இயக்குநர் என்றே
பெயரெடுத்திருக்கும் பாலா, இதில் தனது பெயரை இன்னமும் அழுத்தமாகவே பதிவு
செய்திருக்கிறார்.. டைட்டிலில் ஆரம்பிக்கும் அவரது தனித்துவம்,
இறுதிவரையிலும் தொடர்கிறது.. இந்தக் காட்சியை முன்னமேயே இந்தப் படத்தில்
பார்த்தோமே என்கிற எண்ணம் ஒரு காட்சியில்கூட மனதில் தோன்றவில்லை..!
தனது வாழ்க்கை கேலிக்குரியதாக இருக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத
ஒரு கேரக்டர் அதர்வாவுக்கு.. இனிமேல் அவரிடம் இருக்கும் மிச்ச
சொச்சத்தைத்தான் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்..! ‘ஒட்டுப்
பொறுக்கி’ என்றவுடன் வரும் கோபம்.. தனக்கு சோறு கிடைக்கவில்லை என்ற
கோபத்தில் ‘ராசா கெளம்பிட்டாரு’ என்று ஆற்றாமையுடன் கிளம்புவது.. ‘எதுக்கு
ராசா அடிக்குறீக?’ என்று அப்பாவியாய் கேட்டு உதை வாங்கத் துவங்கும்
அதர்வாதான் பிற்பாதியில் படத்தினை தன் தோளில் சுமக்கிறார்..! இறுதியில்
“நியாயமாரே..” என்ற உச்சியில் அமர்ந்து கூக்குரலிடும் காட்சியில் நமக்கே
கண் கலங்குகிறது.. இங்கேதான் ஒரு இயக்குநரை நடிகன் ஜெயித்திருக்கிறான்.
நிச்சயம் அதர்வா மிகச் சிறந்த நடிகராக மேலும் வருவார்..!
வேதிகாவைவிடவும், தன்ஷிகா எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்..!
அந்தச் சிடுசிடுப்பு.. கோபம்.. எரிச்சல்.. கருத்தக்கன்னி மீதான பரிவு..
ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைத் தானே திட்டுக் கொள்வது..
அங்கம்மாளின் நிலைமைக்கு அதர்வாவை திட்டுவது..! தன்னை இந்த நிலைமைக்கு
ஆளாக்கியவனை.. ‘இருடி வர்றேன்.. உன்னைத் தேடி வந்து வைச்சுக்குறேன்’ என்ற
ஆத்திரம் தீர கிளம்பும் அந்த பெண்மையே ரொம்பவே ரசிக்க முடிகிறது..! அவருடைய
முடிவு, படத்திலேயே மிகப் பெரிய இழப்பு..!
வேதிகா, கண்களை மட்டுமே நம்பி முற்பாதியில் நடித்திருக்கிறார். இறுதிக்
காட்சியில்.. அதுதான் நடிப்பு..! அதர்வாவை அவர் கிண்டல் செய்கிறாரா..
அல்லது சீரியஸாக காதலிக்கிறாரா என்பதையே கொஞ்சம் நாமளே சிந்தித்துத்
தெரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் இருக்கும் திரைக்கதையால் அதர்வாவின்
மேல் அச்சச்சோ உணர்வு பார்வையாளர்களுக்கு அதிகரிக்கத்தான் செய்கிறது..!
கொஞ்ச நேரமே வந்தாலும் ஐஸலக்கா பாடவும், ஆடவும் வைக்கிறார் கவிஞர்
விக்கிரமாதித்யன்..! இவர்களையும் தாண்டி நடிப்பில் ஜெயித்திருப்பவர்
அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மாள்.. மனுஷி பின்னி
எடுத்திருக்கிறார்..! வெகு இயல்பான நடிப்பு.. இந்த வயதில்.. இவரிடம் போய்
எப்படி கதையையையும், திரைக்கதையையும், வசனத்தையும் சொல்லி நடிக்க
வைத்தார்கள் என்பதே புரியவில்லை.. கிழவியின் பெர்பார்மென்ஸை பார்த்தால் 100
படங்களில் நடித்தவர் போல இருக்கிறார்..!
அண்ணன் ராதாரவி அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.. தமிழ்த்
திரைப்படங்களில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பர்களை மட்டுமே
பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வரப் போவதாக ரொம்ப நாளாகவே
சொல்லி வருகிறார்.. அது மாதிரியான ஒரு விதிமுறை சுத்த ஹம்பக் என்று இந்தப்
படமே அடித்துச் சொல்கிறது.. இதில் நடித்தவர்களில் 10 பேரை தவிர மீதி அத்தனை
பேருமே அந்தப் பகுதி மக்கள்தான்.. புதிய நடிகர், நடிகைகள்.. ஆனால்
கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. நடித்திருக்கிறார்கள்.. அத்தனையும்
தத்ரூபம்..! இது போன்ற விதிமுறையெல்லாம் இப்போதைய காலக்கட்டத்தில் வேலைக்கு
உதவாது என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்..!
எத்தனை கடின உழைப்பு உழைத்திருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்த்தாலே
புரிகிறது..! சாலூர் கிராமத்தை செட் போட்டு அழகாக
உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சமேனும் சூரிய ஒளி படும்படியும்,
அதிகப்படியாக காடுகள் சூழவே இருப்பது போலவும் அமைத்திருப்பது மிகப்
பொருத்தம்.. கலை இயக்குநருக்குத்தான் இந்தப் படத்தில் அதிக வேலை..!
அற்புதமாக செய்திருக்கிறார் புதுமுக கலை இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர்..!
எந்த இடத்திலும் கலைத்துறையில் தவறுகள் நடந்துவிடாமல் இருக்க மிகவும்
கவனத்துடனேயே செய்திருக்கிறார்..! மஞ்சள் கலர் போஸ்ட் கார்டு மேட்டர்
மட்டுமே தவறாக படுவதாக பரவலான குற்றச்சாட்டு.. சரி.. போகட்டும்..
விட்டுவிடுவோம்.. இது போன்ற பீரியட் பிலிம் என்றாலே அப்போதைய
கலாச்சாரத்தையும் காண்பித்தாக வேண்டும்..! அதுவும் உண்மையானதாகவும் இருக்க
வேண்டும்.. இல்லாவிடில் அதுவே படத்தில் காமெடியாகிவிடும்..!
ஆண்டான்-அடிமை கலாச்சாரம் அப்போதே நமது சமூகத்தில் புரையோடியிருப்பதை
இதிலும் தொட்டுக் காண்பித்திருக்கிறார் பாலா..! கங்காணி கூலியாட்களை
மிரட்டுகிறான்.. கங்காணியை ஆங்கிலேயே துரை சவட்டி சவட்டி அடிக்கிறான்..
ஆங்கிலேயனின் அடிமைப்படும் தமிழனே இன்னொரு தமிழனை துன்புறுத்துகிறான்.. ஏன்
கொலையே செய்கிறான்.. இங்கே உணர்வற்ற ஜனங்களையும், கல்வியறிவற்ற நிலையில்
இருந்த மக்களையும்தான் குறிப்பிட்டிருக்கிறார்..!
தேயிலைத் தோட்டத்தில் மர்ம நோயால் கொத்து, கொத்தாக சாவுகள் நடக்கும்போது
ஆங்கிலேய துரைமார்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பேச்சுக்களும், அதில்
ஒருவரின் ஆங்கிலேய மனைவி, காந்தியை உயர்வாகப் பேசுவதும் அவர்களை
நியாயவாதிகளாக காட்டுவதற்குப் பயன்பட்டாலும், அந்த ஆங்கிலேயே துரை செய்யும்
செயல்களெல்லாம் மனிதத்தன்மையில்லாதது என்பதால் அதுவே
அர்த்தமற்றதாகிவிட்டது..!
தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்டம்.. அட்டைகள் காலில் ஒட்டிக் கொண்டு
உறிஞ்சியெடுக்கும் பயங்கரம்.. சின்னப் பிள்ளைகள்கூட இந்த அடிமைத்தனத்தில்
மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படுவது என்று நம் மனதை ஆய்ந்து வைக்கும்
காட்சிகள் நிறையவே இருக்கின்றன..
கங்காணியாக இயக்குநர் ஜெர்ரி நடித்திருக்கிறார்..! கொள்ளை நோய்க்கு
மருத்துவம் செய்ய வரும் டாக்டர் பரிசுத்தமாக நடன இயக்குநர் சிவசங்கர்..!
வெள்ளையாக இருந்தவரை கருப்பாக்கி நடிப்பை மட்டும் கச்சிதமாக
வாங்கியிருக்கிறார் பாலா..! அத்தோடு அவர் ஆடும் அந்த நடனமும், பாடல்
காட்சிகளும் அருமை..!
மதுரை வீரனையும், குல தெய்வத்தையும் வணங்கிக் கொண்டிருந்த தமிழர்களை
எப்படி மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக ஆக்கினார்கள் என்பதை பாலா
எடுத்துக் காட்டியிருக்கும் இந்த விஷயம் அடுத்து தமிழகத்தின் சர்ச்சையான
விஷயமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! சிவசங்கரும், அவருடைய மனைவியும்
சேர்ந்து நோயாளிகளுக்கு முதலில் சிலுவை போட சொல்லிக் கொடுத்து பின்பே
சிகிச்சையளிப்பது, மதம் எந்த அளவுக்கு அப்போதே நம்மிடம் திணிக்கப்பட்டது
என்பதை இந்த ஒரு படத்தின் மூலம் மட்டுமே பதிவாகியுள்ளது..!
ஜி.வி.பிரகாஷ்குமார் என்னும் இசையமைப்பாளர் இந்த படத்தில்தான்
அறிமுகமாகியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.. டைட்டில் காட்சிகளில் தொடங்கி
படத்தின் இறுதிவரையிலும் தேவையான இடங்களில் ஆர்ப்பரித்தும், அடங்கியும்,
அட்டகாசம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார். உண்மையாகவே
ரீரெக்கார்டிங்கில் பின்னியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!
பாத யாத்திரையின்போது ஒலிக்கும் பாடல் உருக வைக்க.. சிவசங்கர் பாடும்
பாடல் கொஞ்சம் காமெடியையும், சீரியஸையும் ஒன்றாகவே சேர்த்து தருகிறது..!
கங்காணியை முதன்முதலாக அறிமுகம் செய்யும் காட்சியையும், தேயிலைத்
தோட்டத்தின் பரப்பை ஏரியல் வியூவில் காட்டும் காட்சியிலும், அதர்வா தப்பிப்
போகும் காட்சியிலும் ஜி.வி.பிரகாஷின் இசைதான் படபடக்க வைக்கிறது..!
ஆனாலும் சிற்சில இடங்களில் பின்னணி இசையைக் குறைத்திருந்தால் சில நல்ல
வசனங்கள் நன்றாகவே நமது காதுகளுக்குக் கேட்டிருக்கும்..!
மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டு காட்சிகளை போட்டுக்
காண்பித்துவிட்டு அதன் பின்புதான் பாடல்களை எழுதி இசையமைத்தார்களாம்..
என்னவொரு மேஜிக்..? காட்சிகளுக்கேற்ற பாடல்களை உணர்ச்சிகரமான
வார்த்தைகளுடன் வழங்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து..! அவருடைய ஒரு
பாடலிலேயே அவர்களது வாழ்க்கைக் கதையைச் சொல்லிவிட்டார்..!
அங்கம்மாள்-அதர்வா மாண்டேஜ் ஷாட்டுகளை வைத்தே காதல் பாடல் காட்சியை எழுதி
வாங்கியிருக்கும் பாலா நிச்சயம் ஒரு டெர்ரரிஸ்ட்டுதான்..!
முதல்தரமான இலக்கியவாதிகளின் லிஸ்ட்டில் இருக்கும் நாஞ்சில் நாடனின்
வசனம்..! நெல்லை சீமை வசனங்கள் அதிகம் புரியும்படியாகவே இருந்தது..!
கங்காணியின் பேச்சை பார்த்து பெண்கள் அதிசயிப்பது..! காசு பணம் வந்தால்
பெண்களைகூட சேர்த்துக்குங்க என்ற கங்காணியின் பேச்சு.. “நியாயமாரே..” என்ற
அதர்வாவின் கெஞ்சல்..! கச்சம்மாள் பாட்டியின் அத்தனை பேச்சுக்களும் என்று..
அனைத்தும் ரசனையானது..!
செழியனின் ஒளிப்பதிவில் குறையில்லை.. சாலூர் கிராம கெட்டப்பும்,
தேயிலைத் தோட்ட கெட்டப்பும் ஆக இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமளவுக்கு
முதல் தர ஒளிப்பதிவை தந்திருக்கிறார் செழியன்..! மக்கள் பாத யாத்திரையாக
தேயிலைத் தோட்டம் நோக்கி நடப்பதை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதமே
பாவத்தை வரவழைக்கிறது..! கேமிராவும் ஒரு நடிகர் என்பதை இந்தப் படமும்
உணர்த்தியிருக்கிறது..!
முதல் பாதியின் அசுர வேகத்திற்கும், இரண்டாம் பாதியின் சோகத்திற்கும்
கிஷோரின் எடிட்டிங் பணி மிக முக்கியமானது..! எந்த இடத்திலும் ஜெர்க்
ஆகாமலும், திசை திரும்பாமலும் படத்தினை இறுதிவரையில் அதன் டெம்போ குறையாமல்
கொண்டு சென்றிருக்கிறார் கிஷோர்..! பாராட்டுக்கள்..!
ஊர்க் கல்யாணத்தை டமாரம் அடித்து தெரியப்படுத்தும்போது அதர்வாவையே
கிண்டலடிக்கும் மக்கள்.. அரிசியை போட்டுவிட்டு அலுத்துக் கொள்ளும்
பெண்கள்.. பெரியப்பா எங்கே என்று அதர்வா தேடித் தேடிக் களைத்துப் போவது..
பெரியப்பாவின் மனைவி கல்யாணம் நிக்கக் கூடாது என்பதற்காக புருஷன் செத்த
விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தடுப்பது..! ஆனாலும் விஷயம்
தெரிந்து பெரியவர்கள் அழுது கொண்டே வாழ்த்துவது.. தாலி கட்டிய கல்யாணம்
முடிந்த உடனேயே குல தெய்வத்திடம் வழிபாடு நடத்துவது.. பந்திக்கு முந்தும்
காட்சிகளில் கூட ஆண்களுக்கு பின்பே பெண்கள் சாப்பிட அமர்வது..
பெரியவர்களுக்கு ஆண்களும், மற்றவர்களுக்கு பெண்களும் பரிமாறுவது..! விறகை
வெட்டச் சொல்லிவிட்டு பின்பு கூலி மறுக்கும் கடைக்காரன்.. தன்னை பெயர்
சொல்லி அழைத்தான் என்பதற்காக அதர்வாவை போட்டு புரட்டி எடுப்பது.. “ஊர்ல
பிச்சையெடுக்கிறவனுக்கு என் பொண்ணு கேக்குதா..?” என்று அப்போதே நம்மிடையே
இருந்த பிரிவினையையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருந்த கவுரவத் தன்மையை
குறை சொல்லாமல் சொல்லியிருப்பது.. என்று இயக்கத்திலும், திரைக்கதையிலும்
அக்காலக் கட்ட வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தியிருக்கிறார் இயக்குநர்
பாலா..!
“கூலி கொடுங்க ஐயா..” என்று அதர்வா கெஞ்சிக் கொண்டிருக்கும்போதுதான்
கங்காணி அதர்வாவை முதன்முதலாக அடையாளம் காண்கிறார்..! தன் முன்னால் அடிமை
போல் உட்கார்ந்திருப்பவனிடம் ஊர்ப் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு
கங்காணி சிரிக்கும் சிரிப்புதான் லேட்டஸ்ட் வீடியோவில் பாலா சிரித்த
சிரிப்பு என்று நினைக்கிறேன்..! இதுதான் படத்தின் முக்கிய திருப்பமே..!
இவன் ஒருவனே அந்த ஊரின் நிலைக்கு எடுத்துக்காட்டு என்று நினைத்துவிட்டார்
என்பதை ஒரு நொடியில் காட்டிவிட்டார் இயக்குநர்..!
கங்காணி என்பவர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த மேனேஜர்கள்..
அவ்வப்போது பல்வேறு ஊர்களுக்கும் வந்து இந்த புள்ளை பிடிக்கும் வேலையைச்
செய்கிறார்கள். இவர்களை மக்களுக்கு அப்போதே நன்கு அறிமுகமாகி தெரிந்துதான்
இருக்கிறது என்பதை பல இடங்களில் வசனத்தின் மூலமாகக் குறிப்பிட்டிருக்கிறார்
இயக்குநர்..! இல்லாவிடில் கடைக்காரர், “போ.. கங்காணி கூப்பிடுறார்..”
என்று அறிமுகம் காட்டாமலேயே சொல்ல முடியுமா..?
சமீபத்தில் வெளியான வீடியோவை பார்த்துவிட்டு பாலாவை டெர்ரரிஸ்ட்
என்றவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..! காட்சிகளை இயக்குநர் சொல்லித்
தரும்போது இதைத்தான் செய்வார்கள்..! அது டம்மி குச்சி என்பது அனைவருக்குமே
தெரியும்.. அனைத்து படங்களிலும், அனைத்து இயக்குநர்களும் செய்யும்
செயல்தான் இது.. இதுவே இப்படியென்றால் பருத்தி வீரனில் பொன்வண்ணன்,
பிரியாமணி குடையால் சாத்துகின்ற காட்சியை என்னவென்று சொல்வீர்கள்.. அது 15
டேக்குகள் எடுக்கப்பட்டதாம்..! நம்ப முடிகிறதா..?
இப்போது இந்த டீஸரை வெளிடாமல் இருந்திருந்தால் வெறுமனே படத்தில் அந்தக்
காட்சியை பார்த்துவிட்டு நாம் மெளனமாக போயிருப்போம்.. இயக்குநர் சொல்லிக்
கொடுப்பதை பார்த்தவுடன்தான் அனைவருக்கும் இது கொடூரமாகத் தெரிகிறது..!
சினிமாவாக வெண் திரையில் பார்த்தால்..? ரசிகர்கள்தான் யோசிக்க வேண்டும்..!
பாலா படம் என்றாலே சோகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்பது நாம்
அறிந்ததே..! ஆனால் இதில் அவர் காட்டியிருக்கும் உச்சக்கட்ட சோகம் ஒவ்வொரு
சினிமா ரசிகனையும் கண் கலங்க வைத்துவிட்டது.. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’,
‘நான் கடவுள்’ படங்களில் இருந்த அதே சோகத்துடன் கூடுதலாக ஏதோவொரு மன
அழுத்தமும் இந்தப் படத்தின் மூலமாக கிடைக்கிறது. இதனாலேயே சொல்கிறேன்
இதுவரை வந்த பாலாவின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று..!!!
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வரலாறு இத்தனை கொடூரமாக இருந்தது என்பதை
தமிழ்ச் சமூகம் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறியும் என்று நினைக்கிறேன்.
அந்த முன்னோர்களுக்கு எனது நன்றிகள்..! நான் அருந்தும் ஒவ்வொரு துளி
தேநீரிலும் எனது முன்னோர்களின் ரத்தமும் கலந்திருக்கிறது என்பதை நான்
இந்தப் படத்தின் மூலமாக அறிகிறேன்.. அறிய வைத்த பாலாவுக்கு எனது
இதயங்கனிந்த நன்றி..!
sharing this post from www.truetamilans.blogspot.com, to read more click here
No comments:
Post a Comment