Blogger Widgets

Total Page visits

Monday, August 19, 2013

சிறுக சிறுக சேமிப்போம்...

வருமானத்தில் முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது அனைவருக்குமே பொருந்தும். சேமிப்பு என்பது நமது செலவுக்கு மிஞ்சிய ஒரு தொகையாக இல்லாமல், அதுவும் ஒரு அவசியமான தொகையாக ஒதுக்கப்பட வேண்டும்.

100 ரூபாய் முதல் உங்களால் முடிந்த ஒரு தொகையை மாதந்தோறும் சேமித்து வையுங்கள். 100 ரூபாயை சேமிப்பதால் என்ன ஆகப் போகிறது என்று நினைக்கலாம். ஆனால், அது உங்கள் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும். எதிர்பாராத சமயங்களில் கிடைக்கும் கூடுதல் தொகையை அதில் போட்டு வைக்கும் ஆர்வம் பிறக்கும்.

இது குழந்தைகள் முதலே கடைபிடிக்கப்பட வேண்டிய ஒரு பழக்கமாகும். குழந்தைகளுக்கு ஒரு சிறிய உண்டியை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும் சிறிய தொகையை அவர்கள் அதில் போட்டு வைக்க பழக்கப்படுத்த வேண்டும். இந்த பழக்கம் நாளடைவில் அஞ்சலகத்தில், வங்கியில், காப்பீட்டு நிறுவனத்தில், பங்கு வர்த்தகத்தில் என்று வளர்ந்து கொண்டே போகும்.

சேமிப்பது என்பது எந்த வகையிலாவது இருக்கலாம். இவ்வளவு ஏன், பெண்கள் துணிக் கடையிலும், தங்க நகைக் கடையிலும் போடும் சீட்டுக்கள் கூட ஒரு வகையில் சிறந்த சேமிப்புத் திட்டம்தான். என்ன அதனை தேவைப்படும் போது பணமாக மாற்றிக் கொள்ள இயலாது என்றாலும், சிறுக சிறுக சேமித்து உயர்ந்த மதிப்புள்ள பொருட்களை வாங்குவது ஒரு நல்ல பொருளாதார உக்தியாகவே கருதப்படுகிறது.

அஞ்சலகத்தில் கணக்கைத் துவக்கி அதில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு வைப்பது, எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்விக்கோ, சுய தொழில் துவங்கவோ உதவலாம்.

மேலும், சிலர் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் பணத்தை சேமித்து வைப்பார்கள். இதுபோன்ற ஒரு லட்சியத்துக்காக பணத்தை சேமித்து வைக்க முயலுவதும் நல்ல பலனைத் தரும். வீட்டிலேயே சிறிய தொகையை சேமித்து வைக்கும் போது அதற்கு வட்டி கிடைக்காமல் போகலாம். அதற்காகத்தான் அஞ்சலகம் அல்லது வங்கிகளின் பணத்தை சேமிக்க ஊக்கப்படுத்தப்படுகிறது.

எனினும், மிகச் சிறிய தொகையை வீட்டில் சேமிக்கும் போது வட்டி கிடைக்காமல் போனாலும், அவசர காலத்துக்கு நிச்சயம் உதவும். எனவே, சேமிக்க பழகுவோம்.

No comments: