கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பார்கள். ஆனால், இன்று கூடிவாழ்வதற்கே
வழியில்லாமல் பெருநகரங்கள் சுருங்கிவிட்டன. ஒரு குடும்பத்தில் அண்ணன்,
தம்பி அனைவரும் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் இன்ப,
துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், பொருளாதார ரீதியாகவும் நன்மை
கிடைக்கும்.
இது ஒருபுறம் இருந்தாலும், நீண்ட தெருக்களில் சீரான வரிசையில் இருந்த
தனித்தனி வீடுகள், திண்ணை, முற்றம் என பழைமையைப் பறைசாற்றிய வீடுகளில்
வசிக்கும் பெண்கள் மாலை நேரங்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம்
அமர்ந்து அளவளாவியதும் தெருவின் கடைக்கோடியில் உள்ள கோயில் வாசலில் ஆண்கள்
கூடி வீட்டு விஷயங்களை அசைபோட்டதும் அந்தக்காலம். தற்போது எங்கு
பார்த்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக நிரம்பிவருகின்றன.
தனித்தனி வீடுகளாக இருந்தபோது அக்கம்பக்கத்தில் நடைபெறும்
நிகழ்ச்சியில் அந்த தெருவைச் சேர்ந்தவர்கள்தான் முன்நிற்பார்கள்.
அதனால்தான் திருமண அழைப்பிதழ்களில்கூட "சுற்றமும் நட்பும் சூழ
வாழ்த்துங்கள்' என்று அச்சடிக்கப்பட்டது. ஆனால், இன்று வேலை நிமித்தமாக
பெரும்பாலானோர் பெருநகரங்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாக்கப்பட்டுள்ளதால், நகரங்களில் இடப் பற்றாக்குறையினால் போதிய காற்று,
வெளிச்சம் இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்க வேண்டியுள்ளது.
இதுபோன்று குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகளை
ஓய்வு நேரத்தில் விளையாடக்கூட அனுமதிக்காமல் அறையில் போட்டு
அடைத்துவிடுகின்றனர். இதனால் அந்தக் குழந்தைகள் உடல் ரீதியான நோய்களுக்கு
உள்ளாகின்றனர். மேலும், அங்கு வசிப்போர் அக்கம்பக்கத்து வீடுகளில் என்ன
நடக்கிறது என்றுகூட தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
காய்கறி வாங்குவதற்குக்கூட கீழே இறங்கி வருவது கிடையாது.
மாடியிலிருந்து கயிற்றில் கூடையை கட்டி இறக்கிவிட்டு, அதில் பணத்தை போட்டு
அனுப்புவார்கள். பின்னர் காய்கறியை மேலே இழுத்துக் கொள்வார்கள்.
இதைவிட ஒரு கொடுமை, அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் உள்ள ஒரு
வீட்டில் துக்க நிகழ்வு நடைபெற்றால், அந்த வீட்டின் உறவினர்கள் அருகில்
இருப்பவர்களுக்கு இடையூறாக துக்கத்தை (அழுகையை) வெளிப்படுத்தக் கூடாது.
விசேஷ நாள்களில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவிட வேண்டும் என்பதுபோன்ற
பல்வேறு கட்டுப்பாடுகளும் ஒருசில குடியிருப்புகளில் உண்டு.
தங்களின் நாகரிக வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்றாற்போல் அடுக்குமாடிக்
குடியிருப்புகளில் வீடுகளை வாடகைக்கோ அல்லது அடிமனை விலையில்லாமல் பல
லட்சங்களை கொடுத்து வாங்கும் வீடுகளில் வசதிகள் குறைவாகதான் இருக்கும்.
பெயரளவுக்கு வேண்டுமானால் "டூ பெட்ரூம்' "த்ரீ பெட்ரூம்' என்று
கூறிக்கொண்டாலும், உயிருக்கு ஆபத்து என்று வரும்போது உயிரைக் காப்பாற்றிக்
கொள்வது என்பது சிரமம்தான். இதற்கு உதாரணமாக, பல்வேறு சம்பவங்களை
பட்டியலிட்டுச் சொல்லலாம். அங்கு வசிப்பவர்களைப் பார்க்கும்போது இரும்புக்
கம்பிக்குள் தங்களை அடைத்துக் கொண்டு, தண்டனையை அனுபவிக்கும் சிறைச்சாலை
போன்றுதான் காட்சியளிக்கிறது.
அண்மையில், நண்பர் ஒருவரின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்து, அவரது
வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டேன். அவர் வசித்ததோ நகரின் முக்கியப்
பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அடங்கிய பிரம்மாண்டமான
நகர். அங்கே சென்றதும் நம்மைச் சுற்றி, எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த
நிலையில் அடுக்குமாடி வீடுகள், தனித்தனியாக பங்களாக்களும் இருந்தன.
அங்கிருந்த சிலரிடம் (காவலாளி உள்பட) நண்பரின் பெயரை கூறி வீடு
எங்கிருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்திருக்கவும்
வாய்ப்பில்லை. ஏனெனில், அவரவர் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே
தெரியாத இயந்திர வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பிறகு அங்கு பணிபுரியும் (துப்புரவுத் தொழிலாளி) பெண்ணிடம்
கேட்டவுடன், அவர், வீட்டின் முகவரியைத் தெரிவித்தார். நான் சென்று,
நண்பரின் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபொழுதுதான்
தெரிந்தது, இறந்தவரின் உறவினர்களில் யாரும் துக்கத்தை வெளிப்படுத்த
முடியாமல் மனம் இறுகிக் காணப்பட்டதற்கு காரணம், அந்தக் குடியிருப்பின்
கட்டுப்பாடு என்பது. மேலும், 3வது மாடியில் உள்ள 8 வீடுகளில் நண்பர்
வீட்டைத் தவிர, மற்ற 7 பேரின் வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பரின் தந்தை
இறந்த செய்தி வெகுநேரம் தெரியவில்லை, ஏன், மூன்றடி தொலைவில் உள்ள
எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியவில்லை என்பதுதான் வேதனை. நண்பருடன்
அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள்தான் வந்து முன்னின்று தேவையான
பணிகளைச் செய்தனர்.
இதுபோன்ற நேரத்தில் அருகில் வசிப்பவர்கள் மனிதநேயத்துடன் துக்கங்களைப்
பகிர்ந்து கொள்வதுடன், அவர்களுக்கு உதவியாக இருந்தால்தான் புதிய உறவுகள்
தோன்றுவதுடன் நட்பும் பலப்படும்.
No comments:
Post a Comment