Blogger Widgets

Total Page visits

Sunday, August 25, 2013

வாழ்வின் சுவையறிவோம்

சமீபத்தில் எனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நான்கு நாள் நடைபெற்றது. எப்போதுமே கிராமத்தில் நடைபெறும் விழாவுக்கு மும்பை, சென்னை என பல ஊர்களுக்கும் பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் அனைவரும் பறவைகள் போல வந்து கூடி விடுவார்கள். வாழ்க்கையில் தினசரி பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, மனிதர்களுக்குச் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வு சொந்த ஊரில் என்றால் இரட்டிப்பு சந்தோஷம். அங்கிருக்கும் நாள்களில் சாப்பிட வேண்டியது. நண்பர்கள் உறவினர்களை சந்தித்துப் பேச வேண்டியது. கிணற்றுக்குச் சென்று நீச்சல் அடித்து குளிப்பது என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி உற்சாகமாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் இதுபோன்ற சந்தோஷம் இல்லாவிட்டால், மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என மன நல நிபுணர்களும் கூறுகிறார்கள் எனவே, நீங்களும் உங்களது சொந்த கிராமத்துக்கு அவ்வப்போது குடும்பத்துடன் சென்று வாழ்வின் ஒரு பகுதியை ருசிக்கத் தவறாதீர்கள்.

நான் சென்றபோது எங்கள் ஊரில் நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் ஒரு நாள் இரவு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. அம்பாள் வீதி வலம் வந்தபின்னர் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பட்டிமன்றம் தொடங்கியது. ஆண், பெண் என சுமார் 200 பேர் பட்டிமன்றத்தை ரசிக்க வந்திருந்தார்கள். பட்டிமன்ற பேச்சாளர்கள் நகைச்சுவையாக பேசும்போது, ஆண், பெண் வித்தியாசமின்றி, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். முழுமையாக ரசித்தார்கள். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பட்டிமன்றத்தை மிகவும் ரசித்தார்கள். பட்டிமன்ற நடுவர், "ஆஹா இதுவல்லவோ ரசனை. இப்படிப்பட்ட ரசிகர்கள்தான் எங்களுக்கு வேண்டும். உங்கள் ரசனைக்கும், ரசிப்புத் தன்மைக்கும் தலைவணங்குகிறோம்' என்றார். இது கிராமத்தை பொறுத்தவரை இயல்பான ஒன்றுதான் என்றாலும், அனைத்து தரப்பினரும் பட்டிமன்றத்தைக் கைதட்ட வேண்டிய நேரத்தில் கைதட்டி ரசித்தது சற்று வித்தியாசமான காட்சிதான். இவர்கள் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கத் தெரிந்தவர்கள். துக்கம் வந்தாலும், தும்மல் வந்தாலும் அடக்க மாட்டார்கள்.

இதுபோலத்தான் ஒருமுறை, ஒரு நண்பரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் தனது பேரக் குழந்தைகளுடன், குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்தார். அவர் பெரிய தொழிலதிபர். அவரிடம், "குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களே' எனக் கேட்டேன். "வாழ்க்கையில் பல பகுதி உள்ளது. பள்ளிப் பருவம். அப்போது பாடங்களை முழு ஈடுபாட்டுடன் ரசித்துப் படிக்க வேண்டும். பின்னர், வேலைக்குச் செல்லும் பருவம். பொறுப்பு அதிகரித்து விடுகிறது. எனினும், பார்க்கும் வேலையைச் ரசித்து செய்தால் முன்னேறலாம். பின்னர், திருமணம் செய்து விடுகிறோம். மனைவியுடன் சுற்றுலா சென்று ரசிக்க வேண்டும்.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் மழலை மொழியை ரசிக்க வேண்டும். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து பிறக்கும் பேரன் பேத்திகளுடன் விளையாடினால்தான் வாழ்க்கை முழுமை அடையும். இதில் எந்த கட்டத்திலும் கௌவரம் பார்த்தல் நாம் வாழ்க்கையை ரசிக்கத் தவற விட்டவர்களாகி விடுகிறோம்' என நண்பர் கூறினார்.

அது உண்மைதான். பல இடங்களில் பல சம்பவங்களைப் பார்க்கிறோம். திரையரங்கில் நகைச்சுவைக்காட்சி வந்தால் சும்மா அமர்ந்திருப்பவர்கள் பலர் உள்ளனர். திருமண விழா உள்ளிட்ட விழாக்களில் நண்பர்களுடன் சிரித்துப் பேசினால் கௌரவம் பாதிக்கும் என லேசாகப் புன்கைத்து விட்டு செல்பவர்கள் பலர் உள்ளனர். "நான் பெரிய மனுஷன். நான் பெரிய பதவியில் இருக்கிறேன். நான் வாய்விட்டுச் சிரித்தால் பலர் தவறாக நினைப்பார்கள். அது கௌரவக் குறைச்சலாக இருக்கும்' என பலர் எண்ணுவதுண்டு.

பாவம். அவர்கள் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள். ஆனால். வாய்விட்டுச் சிரிப்பவர்களைப் பைத்தியம் மாதிரி இருக்கிறான் என நம்மில் பலரும் கூறுவதுண்டு. இவர்களுக்குப் பயந்து கொண்டு பலர் தங்களது ரசிப்புத் தன்மையை வெளிக் காட்டுவதில்லை.

ஆக, நம்மிடையை சிரித்தால் கேலி செய்பவர்கள் இருக்கிறார்கள். நமது ரசனையை வெளிக்காட்டினால் ஒரு மாதிரியாகப் பார்ப்பவர்கள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

வாழ்க்கை மற்றும் அதில் நடைபெறும் சம்பவங்கள் நம்மைப் பாதித்தால், அவை எந்த மாதிரியான பாதிப்பு எனபதை சற்றேனும் வெளிப்படுத்த வேண்டும். நல்ல ரசிகராக இருந்து வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ரசித்தால்தான் நல்ல ஆரோக்கியத்தையும், பிறந்த பயனையும் அடையலாம். வாழ்க்கை என்னும் விருந்தில் உங்கள் பங்குக்கான உணவை மகிழ்வோடு ரசித்து உண்ணுங்கள். வாழ்வின் சுவையை இழந்துவிடாதீர்கள்.

No comments: