ஒரு பெண் கல்வி பெற்றால், ஒரு தலைமுறையே படிப்பறிவு பெற்றுவிடுகிறது.
ஒரு வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்
அந்தக் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக, ஊட்டமாக இருக்கிறார்கள் என்று
பொருள். இதே அளவுகோலுடன் இந்தியாவின் நலத்தையும் ஊட்டத்தையும் கணிக்க
முடியுமா? முடியும்.
"இந்தியாவில் 35 விழுக்காடு பெண்கள் (15 வயது முதல் 49 வரை) உடலில்
சக்தியின்றி, பலவீனமாக இருக்கிறார்கள். 43 விழுக்காடு குழந்தைகள் (5
வயதுக்குள் இருப்போர்) அவர்களது வயதுக்கேற்ப இருக்க வேண்டிய உடல்
எடையைவிடக் குறைவாக, பலவீனமாக இருக்கிறார்கள்'. இது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி,
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் கிருஷ்ண
தீர்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தேசிய குடும்ப நலக் களஆய்வு-3
புள்ளிவிவரம்.
வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நாம் பரவாயில்லை என்று ஆறுதல்
கொள்ளலாமே தவிர, மகிழ்ச்சி கொள்ள முடியாது. உடல் வலு குன்றிய பெண்களைப்
பொருத்தவரை பிகார் (45%), சத்தீஸ்கர் (44%), ஜார்க்கண்ட் (43%), மத்தியப்
பிரதேசம் (42%) ஆகிய மாநிலங்களில் ஏறக்குறைய பாதிக்குப் பாதிபேர் உடல்வலு
குறைந்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 28% ஆக உள்ளது.
அதேபோன்று உடல்எடை குறைந்த குழந்தைகள் விஷயத்திலும், பிகார் (55%),
சத்தீஸ்கர் (47%), மேகாலயா (48%), மத்தியப் பிரதேசம் (60%) என குழந்தைகள்
எடை குறைவாக இருக்கையில் தமிழ்நாட்டில் இந்த விகிதம் 30% ஆக இருக்கிறது.
இந்தியாவில் உணவு உற்பத்திக்கு குறைச்சல் இல்லை. ஆண்டுக்கு 250
மில்லியன் டன் உணவு தானியம் உற்பத்தி செய்கிறோம். இப்போதும்கூட, 40
மில்லியன் டன் கோதுமையை அடுக்கிவைக்க போதுமான இடம் இல்லை என்பதற்காக,
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக 2 மில்லியன் டன்
கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்கின்றது. அரிசி,
பருப்பு உற்பத்தியிலும் குறைவில்லை. இருந்தும்கூட இத்தனை பெண்களும்
குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் உடல்வலுவின்றிக் கிடப்பதன் காரணம் என்ன?
நியாயவிலைக் கடைகளில் மிக மலிவான விலையில் அரிசி, கோதுமை, பருப்பு
போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி
இலவசமாகவே தரப்படுகிறது. ஏழைகள் அனைவரும் இந்த உணவுப் பொருள்களை
வாங்குகிறார்கள். இருந்தும் பெண்கள் உடல்வலுவுடன் இல்லை.
எல்லா ஊர்களிலும், பள்ளிகளிலும் சத்துணவுக் கூடங்கள் இருக்கின்றன.
இருந்தும்கூட குழந்தைகள் உடல் எடை குறைவாக இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த
குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ஐசிடிஎஸ்) தேசிய ஊரக சுகாதார இயக்கம்,
மதிய உணவுத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கவேண்டும்
என்பதற்காக உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
என எல்லாமும் இருந்தும்கூட ஏன் இந்த நிலை?
எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உணவுப்
பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. ஆனாலும்
உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமே இந்த நிலையை மாற்றிவிடப்
போதுமானதா? இந்த நிலைமைக்கு பல சமூக- பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன.
போதுமான அளவுக்கு உணவு கிடைக்காத நிலைமை, அடிக்கடி நோய்க்கு ஆளாதல், தூய
குடிநீர் கிடைக்காத சூழ்நிலை, கழிப்பறை வசதிகள் இல்லாதிருத்தல், மருத்துவ
வசதிகள் கிடைப்பதில் உள்ள நடைமுறை இடையூறுகள், வேலைவாய்ப்பு இல்லாமல்
குடும்ப வருமானம் குறைந்திருக்கும் நிலையில் வாங்கும் சக்தி இல்லாத
பொருளாதார நெருக்கடி போன்றவைதான் இத்தகைய நிலைமைக்கு முக்கியமான காரணங்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின்படி அனைத்து மாநிலங்களிலும் பெண்களும்
குழந்தைகளும் கிராமப்பகுதிகளில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புறங்களில் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கிராமங்களைவிட
மிகமோசமான வாழ்க்கைச் சூழலும், மாசும், நோய்களும் நிறைந்துள்ள
நகரத்தில்தான் அதிக பாதிப்பு இருக்க வேண்டும். ஆனால் தலைகீழாக இருக்கக்
காரணம் என்ன?
சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் நகரங்களின் குடிசைப் பகுதிகளில் இல்லவே
இல்லை என்றாலும் அவர்களிடம் வாங்கும் சக்தி இருக்கிறது, மருத்துவ வசதி பெற
முடிகிறது. நகராட்சி, மாநகராட்சி லாரிகள் மூலம் நல்ல குடிநீர் - சில
குடங்கள்தான் என்றாலும்- கிடைக்கிறது. ஆனால் இத்தகைய குறைந்தபட்ச
வாய்ப்புகளும்கூட கிராமங்களுக்கு கிடைப்பதில்லை.
இவற்றுடன், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடிக்கே செலவு செய்து,
குடும்பத்தில் தன்னை நம்பி இருக்கும் பெண்கள், குழந்தைகளின் வாழ்வுக்குத்
தேவையான பணத்தைத் தராத குடிகாரர்களால் பொருளாதார இழப்பை சந்திக்கும்
குடும்பங்கள் கணக்கிலடங்கா. "குடி உயர கோல் உயரும்' என்பது இன்றைய தேதியில்
பொருந்தா மொழி. "குடி' ஒழிய குடும்பம் ஒளிரும் என்பதே சரியாக இருக்கும்.
உணவுப் பாதுகாப்பு சட்டம் மட்டுமே அனைத்துக்கும் தீர்வாகிவிடாது.
அனைத்து நிலைகளிலும் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதன்
மூலம்தான் இந்தியப் பெண்கள் நலம் பெறுவர். குழந்தைகளும் ஊட்டம் பெறுவர்.
"சுற்றிலும் பார்க்குமிடமெல்லாம் தண்ணீர், ஆனால் குடிக்க ஒரு துளிக்கூட
இல்லை' என்று நடுக்கடலில் கப்பலில் இருந்தபடி பாடினான் ஓர் ஆங்கிலக்
கவிஞன். இந்தியாவில் உணவு தானியக் கிடங்குகள் நிறைந்து வழிகின்றன. ஆனால்,
35 விழுக்காடு பெண்களும் 43 விழுக்காடு குழந்தைகளும் ஊட்டச் சத்தில்லாமல்
பலவீனமாக இருக்கிறார்கள். நமது நிர்வாகத்தில்தான் தவறு இருக்கிறது
No comments:
Post a Comment