Blogger Widgets

Total Page visits

Saturday, August 31, 2013

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

துர்கா சக்தி என்ற பெயர் இப்போது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சொல்லப்படும் பெயர். அவர் மணல் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்க முற்பட்டதால்தான் அவருக்கு சங்கடம் வந்தது என்கிறார்கள். மணல் கொள்ளை, நச்சுப் பொருள் கழிவு, வரைமுறையில்லாத கட்டடங்கள், இயற்கையின் தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகள், பிளாஸ்டிக் உபயோகம், தொலைநோக்குப் பார்வை இல்லாத கொள்கைகள், கனிம வளச் சுரண்டல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இயற்கை வதை நிகழ்வுகளை. ஒருகால் இயற்கையன்னை என்று சொல்லாமல் இயற்கை அப்பா என்று சொல்லியிருந்தால் ஒரு அத்து இருந்து இருக்குமோ?

மதுரையில் கம்பீரமாக நிற்கும் யானை மலையைக் குடைய வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அது நெய்ஸ் என்ற கல் அமைப்பு என்கிறார்கள். உலகில் இருக்கும் மிகப்பழமையான ஒற்றை கல் வடிவங்களில் ஒன்றாம். ஆஸ்திரேலியாவின் ஏயர்ஸ் ராக் என்பதற்கு இணையானதாம். ஏயர்ஸ் ராக்கை தேசிய பரம்பரை மரபுரிமைச் சொத்தாக அறிவித்து விட்டார்கள். நாம்? மேற்சொன்ன அரசாணை வந்தவுடன் ஒற்றைக்கடை மக்கள் சாலைகளில் படுத்துவிட்டார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. திட்டம் கைவிடப்பட்டது. மக்கள் ஒன்றாக எழுந்து சுற்றுப்புறச் சூழலை காப்பாற்றுவோம் என்று உறுதிபூண்டால்தான் இயற்கை வதை நிற்கும்.

நம் மக்கள் மலைகளையும், நதிகளையும், மரங்களையும், விலங்குகளையும் ஏன் இறையுணர்வோடு பார்த்தார்கள்? அவர்கள் முட்டாள்கள் அல்ல. "இது புனிதம் கும்பிடு' என்று சொன்னால்தான் இயற்கையைச் சின்னாபின்னம் செய்ய மாட்டார்கள் என்று பழங்கால மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் இயற்கையை அறங்காவலராகத்தான் பேண வேண்டும். நாமே சொத்து முழுவதையும் கபளீகரம் செய்வது நியாயமல்ல. நம் முன்னோர்கள் இந்த அறத்தைக் காத்தார்கள். நாமோ இந்த கஜானாவைக் காலி செய்தே தீருவது என்று கங்கணம் கட்டி செயல்படுகிறோம்.

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஹள்ளி பஞ்சாயத்தில் சின்னாறு என்று ஒரு நீர்நிலை, அதுதான் அவர்களுக்கு குடிநீர் வழங்குமூலம். சின்னாறு அணையிலிருந்து மாரண்டஹள்ளிக்கிடையே இருக்கும் ஆற்று மணலைத் திருடுகிறார்கள் என்று ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பரமகல்யாணி சுற்றுப்புற சூழல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரை, மணல் தோண்டலினால் நீர்நிலைகள் எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யச் சொன்னார்கள். அந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை விளக்கியது. இன்று ஆற்று மணலை சுரண்டியெடுத்தால் மேலும் சுரண்டாமல், தோண்டாமல், மாற்றாமல் இருந்தால் ஐந்து வருடங்களாகுமாம் நேற்றைய இயற்கை நிலை வருவதற்கு. அதாவது இயற்கை அன்னையை மணல் கொள்ளை என்ற கத்தியால் இன்று குத்தினோமானால், அந்தக் காயம் ஆறுவதற்கு ஐந்து வருடங்களாகும். இந்த ஆற்று மணல் சுரண்டல், மீன் வளத்தை பாதிக்கும்; ஆற்றைச் சுற்றி பல ஹெக்டேர் பசுமை நிலங்கள் பாழாகும்; வன வளம் அழியும்; நிலத்தின் ஸ்திரத்தன்மைக்கு கேடு வரும்; நீரோட்டம் சலசலவென்று போகாமல் குழம்பி வண்டலாக மெதுவாகப் போகும்; போதுமா?

சென்னைவாசிகளுக்கு பக்கிங்ஹாம் கால்வாய் தெரியும், பெயரைக் கேட்டவுடனே மூக்கைச் சுளிப்பார்கள். எண்பது வருடங்களுக்கு முன் சிறு படகுகள் போக முடியுமாம். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில், சாப்பாட்டை படகில் ஏற்றி மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு உல்லாசமாக பயணம் செய்த ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். நம்ப முடிகிறதா? கழிவுப் பொருள்கள் சேர்ந்து சேர்ந்து இன்று துர்நாற்றத்தின் பிறப்பிடமாக ஆகிவிட்டது. இது மனிதர்கள் செய்த வன்முறை என்பதைவிட வேறு எப்படி வர்ணிப்பது? உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் ""ஆறுகள், காடுகள், கனிமங்கள் எல்லாம் நாட்டின் இயற்கைப் பொக்கிஷங்கள். இவைகளை அழிக்கக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு இந்த வளங்களை காத்து, வளப்படுத்தி, மேன்மைப்படுத்துவது முன் தலைமுறையின் கடமை. மணல் ஆயிரக்கணக்கான வருடங்களில் தானாக உண்டாகிறது. அது மனித வளத்திற்கு ஆதாரம். ஆனால் கட்டுப்பாடில்லாமல் ஆற்றைச் சுரண்டி சுரண்டி சொல்லொணாப் பேரழிவுக்கு மனிதன் காரணமாகிவிட்டான்''.

உயர்ந்த சதுப்பு நிலக்காடுகள் நம் நாட்டில் ஸýந்தர்பண்ஸிலும் (மேற்கு வங்காளம்) பிச்சாவரத்திலும், யானத்திலும் இருக்கிறது. இது தொடர்பாக ஒரு பொது நல மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வர்த்தக ஸ்தாபனம் அனுமதி பெறாமலே கட்டுமான நடவடிக்கையைத் தொடங்கியிருந்தது. அந்த தீர்ப்பில் ùஸரெஸ் நியமங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ùஸரெஸ் வர்த்தகத் தலைவர்களை ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தி, சுற்றுப்புற சூழலைப் பேணும் வகையில் அவர்கள் தங்கள் வியாபார நியமங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இதன் குறிக்கோள் என்னவென்றால் வர்த்தக ஸ்தாபனங்கள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு நேரடியாகப் பொறுப்பேற்று இயற்கை வளத்தை நல்ல வகையில் பயன்படுத்தி, ஆபத்தைக் குறைத்து அழிவைத் தடுத்து, நம் சொத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் எதையும் கண்டுகொள்வதில்லை.

உத்தரகண்டத்தில் நிகழ்ந்த பேரிடருக்குக் காரணம் என்ன? இதுபோல பேரிடர்களை சட்ட அகராதியில், "இறைவன் செயல்' என்பார்கள். வெள்ளம் இயற்கையாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால் வெள்ளத்தில் நடந்த பெரும் சோகங்களுக்கு இறைவன் பொறுப்பல்ல. நான் இறைவனுக்காக வக்காலத்துத் தாக்கல் செய்கிறேன்.

சுற்றுப்புற சூழல் அறிஞர்கள் இந்தப் பேரிடர் மனிதனால் உண்டான விபத்து என்கிறார்கள். இதுபோன்ற விபத்துகள் ஏற்படக் காரணங்கள் மலைச்சரிவுகளை திட்டமற்ற முறையில் வெட்டுதல், பாறைக் கூட்டங்களை கண்மூடித்தனமாக வெடிக்க வைப்பது, மரங்களை மனம் போனபடி வெட்டுதல் முதலிய நடவடிக்கைகள், ஹோட்டல்கள், மின்திட்ட கட்டுமானங்கள் இவைகளுக்கெல்லாம் வரைமுறையில்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னேற்றமும் இயற்கை பாதுகாப்பும் ஒருங்கே இணைய வேண்டும். மென்மையான சுற்றுப்புற சூழல் என்கிறார்கள். அங்கு மனித நடமாட்டம் இவ்வளவுதான் இருக்கலாம் என்றும் ஒரு வரம்பு வைக்க வேண்டும். முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறை காசி, பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்வார்கள். இப்பொழுது? ""ரொம்ப ஈஸி மேடம் ஹெலிகாப்டர் நேரே இறங்கி விடும்'' சிரமப்பட்டு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆயுளில் ஒரு முறைதான் செல்வோம். இதுவே எளிதாகப் போய்விட்டது என்றால்? ஒருவேளை ஒவ்வொரு வருடமும் போய் பாவங்களைக் கழுவ வேண்டும் என்று தோன்றுகிறதோ என்னவோ. அந்த இயற்கை சூழலே கோயில்தான் என்ற பயம், பணிவு, பக்தியுடன் அணுக வேண்டும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள்கூட இயற்கையின் புனிதத்தை மதிக்க வேண்டும். வேறு வழியில்லை. தெய்வம் தூணை வெடித்துக் கொண்டு இன்று வராது. ஆனால் இயற்கை அன்னை சுனாமியாகவும், நிலநடுக்கமாகவும் பல அவதாரங்களில் வருவாள், வெடிப்பாள், கொதிப்பாள், அழிப்பாள்.

அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் சிவப்பிந்திய தலைவரிடம் அவர்கள் நிலத்தை வாங்க வேண்டும் என்று கூறியபொழுது அந்த சிவப்பிந்தியத் தலைவரால் சொல்லப்பட்டது இது. ""ஆகாயத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? இந்த நிலத்தின் இளஞ்சூட்டை? இது எங்களுக்குப் புரியவில்லை.... இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானது... வாஷிங்டனிலிருந்து பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்குவேன் என்கிறார்... நதிகளில் பாய்கிற மின்னும் நீர் எங்கள் முன்னோர்களின் ரத்தம், இந்த நிலத்தை விற்றால் அந்த புனித ரத்தத்தை விற்க வேண்டும். வெள்ளையர்களுக்கு எங்கள் பாதை புரியாது. நிலம் அவன் சகோதரனல்ல, அவனுக்கு அது அடக்கி ஆள வேண்டிய எதிரி. அவன் இந்த நில அன்னையை ஆட்டு மந்தையை விற்பது போல விற்கிறான். வெள்ளையர்கள் நகரங்களில் அமைதி இல்லை. வசந்தத்தில் இலைகள் பிரியும் ஓசையை அங்கு கேட்க முடியாது. பூச்சி இறகுகளின் சரசரப்பும் கேட்காது. நான் காட்டு மிராண்டி. எங்களுக்கு காற்று புனிதமானது. ஏனென்றால், விலங்கு, மனிதன், மரம் எல்லாவற்றிற்கும் இந்த காற்றுதான் மூச்சு. இந்த நாட்டையும் என் மக்களையும் நீங்கள் ஆளுவது என்ற விதி எனக்குப் புதிர். ""அடர்த்தியான புதர் எங்கே போயிற்று? கம்பீர கழுகு எங்கே போயிற்று?'' இயற்கையை நாம் சூறையாடுதலைப் பற்றி இதைவிட கடுமையாகவும், கம்பீரமாகவும், கவிதையாகவும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் வெள்ளையர்கள் என்று சொன்னார். இன்று நம்மெல்லோருக்கும் விழுகிறது இந்த சாட்டையடி சொற்கள்.

நம் முன்னோர்கள் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்றுதான் எங்கெங்கு குடியிருப்புகள் இருந்ததோ, அங்கெல்லாம் ஒரு குளமோ ஏரியோ வெட்டினார்கள். அது இயற்கையாகவே தண்ணீர் சேமிக்கும். இதன் குறிக்கோள் நாம் தண்ணீர் தண்ணீர் என்று ஆலாய் பறக்கக்கூடாது என்பதுதான். ஆனால் நம் முன்னோர்கள் விட்டுப்போன மூலதனத்தை அழித்தோம். பேராசையும் பணத்தாசையும் நம்மை உந்த ஏரி, குளம் எல்லாவற்றையும் தூர்த்து கட்டடம் கட்டிவிட்டோம். தண்ணீர் போயிற்று, எங்கே?

பேரிடர் வரும்பொழுது அது ஏழை பணக்காரர் பார்க்காது. எல்லோரும் அதன் சீற்றத்தின் உள்ளடங்குவார்கள். மனிதனுக்கு வேறு இனத்தால் அழிவில்லை. அவன் கையாலேயேதான். அவனேதான் இந்த அழிவைத் தடுக்க வேண்டும். கரப்பான் பூச்சிக்கு தாக்குப்பிடிக்கும் தன்மை அதிகம் உள்ளது என்கிறார்கள். டைனோஸர்களுக்கு முன் தோன்றிய உயிர்வகை என்கிறார்கள். கதிர்வீச்சின் விளைவுகூட கரப்பான் பூச்சிமேல் குறைவாகத்தானிருக்குமாம். இயற்கையை அழித்து அதன் விளைவினால் மனித இனம் போன பின் நிசப்தமான அந்த கல்லறை உலகில் ""நன்றாக வேண்டும் உனக்கு, என் கொள்ளுத்தாத்தாவைக் கொல்ல மருந்து அடித்தாயில்லையா?'' என்று கரப்பான் பூச்சி நகைக்குமோ?

Source Dinamani

No comments: