Blogger Widgets

Total Page visits

Saturday, August 31, 2013

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்"

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" என மதுரை புத்தக விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசினார். 

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் 8வது புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. கலெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். "பபாசி" தலைவர் சண்முகம் வரவேற்றார். 

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு குறிக்கோளை எடுத்துக்காட்ட, இந்திய பெருமையை, தமிழுக்காக பாடுபட்டோரை அறிய புத்தகங்கள் உதவுகின்றன. கல்விக்காக முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்," என்றார்.

விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: "நிறைய புத்தகங்களை படித்தால்தான் நம்மை நாம் அறிய முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவு ஆகிய 3 தளங்கள் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் மனதை, ஒருமுகப்படுத்தி, ஒரே புள்ளியில் சந்திக்கும் யுக்தியை அறிய வேண்டும். 

அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும். நூல்கள் அறிவுபூர்வமான விஷயங்களை தருகின்றன. எனவே நூலகங்களுக்கு நூல்களை வாங்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 30 கோடி நிதி தந்துள்ளார். செம்மொழி தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகளை கடந்தது என சமீபத்தில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. தமிழை சைவமும், வைணமும் வளர்த்தன. அதனால்தான் 2000 ஆண்டுகளாக சிதையாமல் நிற்கிறது. இத்தகைய தமிழ்மொழி நூல்களை தினமும் 100 பக்கங்களாவது படிக்க வேண்டும். படிக்க படிக்க மகத்தான உயரத்தை அடைவீர்கள். 

நூல்களை பாதுகாக்க புத்தகக் கொள்கையை உருவாக்க வேண்டும் என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆணை பெற்று, பொக்கிஷமாக விளங்கும் புத்தகங்களை பாதுகாக்க "புத்தகக் கொள்கையை" வெளியிடுவோம்." இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா, பபாசி பொருளாளர் வெங்கடாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் வைரவன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவிற்கான, ஊடக உதவியை, "தினமலர்" நாளிதழ் வழங்குகிறது.

No comments: