Blogger Widgets

Total Page visits

Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்ப(பா)டம்! தெரிந்தோ தெரியாமலோ ‘காமம்’ செய்வது தான் காதல் செய்வது... அதனால் வரும் பிரச்னைகள் ஏராளம், குற்ற உணர்ச்சிகள் தாரளம்... ‘ஆதலால் காதல் செய்யாதீர்...’ எனும் கருத்தை வலியுறுத்தியிருக்கும் இப்படம் ஒன்று போதும் இயக்குநர் சுசீந்திரனின் சமூகம் பற்றிய அக்கறை மற்றும் சிந்தனைகளுக்கு சான்று கூற...

கதைப்படி கல்லூரியில் படிக்கும் கார்த்திக் எனும் சந்தோஷூக்கு அதே கல்லூரியில் படிக்கும் தன் தோழி ஸ்வேதா எனும் மனீஷா யாதவ் மீது காதல். நட்பு வட்டத்தின் உதவியுடன் காதலை, நாயகியிடம் வெளிப்படுத்தி சுற்றம் நட்பிற்கு தெரியாமல் அம்மணியுடன் அசந்‌த இசைந்த சந்தர்ப்பத்தில் காமத்தையும் வெளிப்படுத்தி சுகப்படுகிறார். அதனால் மனீஷா சுமை பட்டு சுகவீனப்பட, வீட்டிற்கு விவரம் தெரிய வருகிறது, பிரச்னை ஆகிறது. இருவீட்டு பெரியவர்களும் கூடிப்பேசி திருமணம் செய்ய உத்தேசிக்கின்றனர்.

பையன் வீட்டினர் வயிற்றை கழுவி, கலைத்துவிட்டு வந்தால் கல்யாணம் என்கின்றனர். பெண் வீட்டினர், கலைத்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை... அதனால் கலைக்க முடியாது என்கின்றனர். உருகி உருகி காதலித்து கட்டித்தழுவிய நாயகன், நாயகி இருவருக்குமிடையிலும் இந்த விஷயத்தில் ஈகோ மோதல் எழுகிறது. இருபக்கமும் பேச்சு தடிக்கிறது! அப்புறம்? அப்புறம்மென்ன.?! எனக்கு அவன் வேண்டாம் என நாயகியும், எனக்கு அவள் வேண்டாம் என நாயகரும் முடிவு செய்து பிரிகின்றனர். குழந்தை பிறக்கிறது! அதற்கப்பபுறம்.?! அதற்கப்புறமென்ன.? அதை அநாதை ஆசிரமத்தில் அம்போ என விட்டுவிட்டு நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும், நாயகருக்கு வேறு இடத்தில் பெண்ணும் இந்த இருவரது சம்மதத்துடன் பார்க்கின்றனர் இருவீட்டு பெரியவர்களும்! இன்றைய இளைஞர்களின் காதல் கண்ணாமூச்சி நாடகத்தை சவுக்கால் அடிக்கும் க்ளைமாக்ஸூடன் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் மெய்யாலுமே ரொம்ப துணிச்சல்காரர் தான்!

நாயகர் கார்த்திக் எனும் சந்தோஷ் பாத்திரத்தின் பெயருக்கு ஏற்றபடியே பந்தாவாக நடித்திருக்கிறார் என்பதோடு பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார் எனலாம்! அதிலும் தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காதலியின் கருவை கலைக்க அலைத்து செல்லும் காட்சியில், ‘‘என்னை இவரது கணவன் என்றால் டாக்டர் நம்பமாட்டார், நீ புருஷனாக போ...’’ என்று நண்பனை காதலி உடன் அனுப்பி வைக்கும் இடத்தில் ‘வாவ்’ சொல்ல வைத்து விடுகிறார் மனிதர்! அதேமாதிரி பைக் ஓட்டத் தெரியுமா? எனும் அப்பாவின் கேள்விக்கு... ’’பைக்கை படுக்க ‌வச்சே ஓட்டுவேன்’’ எனும் பதிலில் இன்றைய இளைய தலைமுறையின் இலக்கு இல்லாத வேகத்தை (முட்டி ‌மோதும்...) எள்ளி நகையாடியிருக்கும் இடங்கள் சூப்பர்ப்!

நாயகி மனீஷா யாதவ், ஸ்வேதாவாக தனது அறிமுகப்படமான ‘வழக்கு எண் 18/9’-ல் நடித்ததை விட பிரமாதமாக நடித்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நாயகரின் அப்பாவாக ராம்நாத் ஷெட்டி, அம்மா பூர்ணிமா பாக்யராஜ்(ரொம்ப நாளுக்கு அப்புறம்...) நாயகியின் அப்பாவாக ஜெய்பிரகாஷ், அம்மா துளசி, மாமா தருண் மாஸ்டர், நாயகன் - நாயகியின் ஐடியா நண்பர் அர்ஜூன் உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அந்த ஐடியா நண்பர் அர்ஜூன், நமக்கு இப்படி ஒரு நண்பர் இல்லையே என ஏங்க வைக்கிறார். பேஷ், பேஷ்!!

ஆண்டனியின் படத்தொகுப்பு, சூர்யா ஏ.ஆர்.ன் ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஏன ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், சுசீந்திரனின் இயக்கத்தில், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ படத்தை ‘‘ஆதலால் வெற்றி பெற செய்வீர்’’ என ரசிகர்களை சொல்ல வைக்கும் படமாக்கியிருக்கிறது!

ஆகமொத்தத்தில், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ - ‘காமம் செய்வீர்’ - ஆதலால் காதல் செய்யாதீர் எனும் மெஸேஜ் சொல்லும் ப(பா)டம்!!

No comments: