Blogger Widgets

Total Page visits

Tuesday, August 13, 2013

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

‘சொல்லாமலே’ சசியின் இயக்கத்தில், ‘காதல்’ பரத் ‘6’ பேக் உடற்கட்டு உடன் நடித்திருக்கும் ஆக்ஷ்ன், லவ் சென்டிமெண்ட் திரைப்படம் தான் ஐந்து ஐந்து ஐந்து!

‘சொல்லா‌மலே’ திரைப்படத்திற்குப்பின் சசி, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ என இன்னும் சில படங்களை இயக்கி இருந்தும், ‘காதல் படத்திற்குப்பின் ‘வெயில்’, ‘எம்மகன்’, ‘நேபாளி’, ‘திருத்தணி’, ‘யுவன் யுவதி’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் பரத் நடித்திருந்தும், இன்னமும் அவர்களது அடையாளங்கள் ‘சொல்லாமலே ’ சசி, ‘காதல்’ பரத் என்றே இருப்பது போன்று ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ படத்திற்குப் பின்னும் இந்த இருவரது அடையாளங்களிலும் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை... என்றாலும் இப்படத்திற்காக இயக்குநர் சசியும், நடிகர் பரத்தும் நிறையவே உழைத்திருக்கிறார்கள் என்பது பிரேம் டு பிரேம் படத்தில் தெரியும் பிரமாண்டத்தில் புரிகிறது! இருந்தும் என்ன பயன்? ‘சொல்லா‌மலே’ சசியிடமும், ‘காதல்’ பரத்திடமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு ‘பூ’, ஒரு ‘வெயில்’ மாதிரி படங்களைத்தான் என்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளாதது இப்படத்திற்கு பலத்தை விட, பலவீனத்தையே கூட்டுகிறது. பாவம்!

கதைப்படி அரவிந்த எனும் பரத்திற்கு லியானா எனும் மிருத்திகா மீது காதல். ஆனால் ஒரு விபத்துக்குபின் அப்படி ஒரு காதலோ, காதலியோ அல்ல, அந்த விபத்தில் சிக்கிய பரத்துக்கு மனநிலை சரியில்லை... அதன் விளைவு தான் இப்படி என்று பரத்தின் உடன்பிறந்த அண்ணன் கோபால் எனும் காமெடி சந்தானமும்(!), அவர்களது மனநல மருத்துவரும் அடித்துக்கூற குழம்புகின்றார் பரத். நம்மையும் குழப்புகிறார்! ஒரு வழியாக இதற்கெல்லாம் காரணம் லியானா எனும் மிருத்திகாவை தன் இறந்து போன காதலி சாயலில் இருப்பதால் ஒருதலையாக காதலிக்கும் ஐம்பது வயது பெரும் தொழில் அதிபர் தான் என்பதை கண்டுபிடிக்கும் பரத், அவரிடம் சிக்கித் தவிக்கும் காதலியை மீட்டு கரம்பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்.?!, எதையெல்லாம் இழந்தார்?!, இறுதியில் காதலியை கரம்பிடித்து ஜெயித்தாரா? தோற்றாரா? என்பது தான் ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ திரைப்படத்தின் மொத்த கதையும்!

இப்படி ஒரு வித்தியாசமான கதையை விறுவிறுப்பாக, சஸ்பென்சாக சொல்கிறேன் பேர்வழி... என்றும் திரைக்கதையில் நிறைய ‘திடுக்‘ திருப்பங்களை ஏற்படுத்துகிறேன் என்றும்... நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார் இயக்குநர் சசி! சசி சார் உங்களுக்கு சுவாரஸ்யமான காதல் போதாதா...?! எதற்கு சஸ்பென்ஸ், த்ரில்லர் எல்லாம்?!

பரத், 6 பேக் உடம்பை காட்டி போடும் சண்டைக்காட்சிகளிலும், மிருத்திகாவுடனான ப்ளாஷ்பேக் காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். சந்தானம், ஒருசில காட்சிகளில் வந்து காமெடி பண்ணி அதன்பின் தம்பி பரத்துக்காக உயிரை விடுவது ‘டிராஜிட்டி!’

லியானாவாக வரும் மிருத்திகா டூயல் ரோலிலும் தூள் பரத்துகிறார் என்றால், பரத்துக்காக 50 வயது தொழில் அதிபரால் செட்டப் செய்யப்படும் மஞ்சரி எனும் எரிக்கா பெர்ணான்டஸூம் தானும், மிருத்திகாவுக்கு சளைத்தவரில்லை... என பரத்துடன் படுபாந்தமாக டூயட்பாடி ஆடுவது படத்திற்கு ப்ளஸ் சேர்க்கிறது!

சைமனின் இசையில் அவர் எழுதிபாடும் ‘எழவு’ பாடல் தவிர மற்ற நான்கு முத்துக்குமாரின் பாடல்களும் நல்முத்துக்கள்! சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவும், ரவி ஸ்ரீசந்திரனின் சண்டைப்பயிற்சி உள்ளிட்டவைகள் சசியின் ‘டிரிபிள் பைவ்’வை ‘சேட்டிஸ்பை’ ஆக்கியுள்ளன!

ஆகமொத்தத்தில், 5 5 5(‘‘ஐந்து ஐந்து ஐந்து’’) - 35 ‘‘(ஜஸ்ட்பாஸ்!)’’

1 comment:

mobilefan said...

தங்கள் வலைப்பதிவின் பிற்புற கறுப்பு வர்ணத்தை மாற்றுங்கள்.இரவு நேரத்தில் படிக்க கடினமாகவுள்ளது.கறுப்பிற்கு பதிலாக மெல்லிய நிறங்களை பயன்படுத்தலாம்.