Blogger Widgets

Total Page visits

Saturday, August 31, 2013

நேரம் ஒதுக்குங்கள்

அண்மையில் நான் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறிய ஒரு தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய மகனுடன் அவர் பேசி இரண்டு மாதமாகிவிட்டது என்று கூறினார்.

அந்த நண்பர் நன்கு படித்தவர். ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனைவி அவர்களுடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது, பழகுவது என்பதை உளவியல் ரீதியாக அறிந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள்.

நண்பரின் மகன் தன்னுடைய தந்தையிடத்தில் சரியாக பழகவில்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், பள்ளியை நிர்வகிப்பவர், பிள்ளைகளின் மனதை அறிந்திருக்க வேண்டியவர் தன்னுடைய மகனின் மனநிலையை அறியாமல் போய்விட்டாரோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது.

ஒரு தந்தை தன் மகனுடன் ஒரு நாள், இரண்டு நாள் பேசாமல் இருக்கலாம். அதிகபட்சமாக ஒரு வாரம் பேசாமல் இருக்கலாம். இரண்டு மாதமாக பேசவில்லையென அந்த நண்பர் கூறியது வேதனையான விஷயமாகும். இதற்கு காரணம் அவர்கள் உறவுகளில் சிக்கல் என்பது உள்நோக்கி பார்த்தால் தெரிகிறது.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் தான் நம்முடைய சமுதாயத்தில் அதிகமாக இருந்தது. பகல் பொழுதில் இல்லாவிட்டாலும், இரவு நேரத்தில் ஒரு பொழுதாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்பொழுது ஒவ்வொருவரின் பிரச்னை குறித்தும் அலசப்படும். அப்பொழுதே தீர்வும் காணப்படும். வீட்டில் உள்ள வயதான தாத்தா, பாட்டியிடத்தில் பேரப்பிள்ளைகள் தங்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். அவர்கள் பிள்ளைகளின் பெற்றோர்களிடத்தில் அதுகுறித்து கூறி பரிந்துரை செய்து பெற்றுத் தருவார்கள். அதனால் உறவுமுறையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பிரச்னையில்லாமல் குடும்ப வாழ்க்கை இருந்தது.

கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பந்தமே தற்போது அற்றுப்போய் வருகிறது. அதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கு பாலம் போன்று செயல்பட வயதானவர்கள் இருப்பதில்லை. பெற்றோர்களிடம் நேரடியாக கேட்டு பெறும் தைரியம் பிள்ளைகளிடத்தில் இருந்தாலும் அதற்கு ஏன், எதற்கு, இது அவசியமா என பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளால் இன்றைய தலைமுறையினர் எரிச்சலடைகின்றனர். கேட்டதை கொடுக்காமல் கேள்வி கேட்கிறார்களே என்று கோபப்படுகின்றனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதனால் உறவுகளில் விரிசல் என பிரச்னை தலைதூக்குகிறது. வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

இத்தகைய சூழ்நிலைகளால்தான் சமுதாய பிரச்னைகள் உருவாகின்றன. பெற்றோர் - பிள்ளைகளின் உறவுகளில் சிக்கல் எழும்பொழுது, பிள்ளைகள், பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் விலகிச் செல்லும் பொழுது அவர்களுடைய மனது அலைபாய்கிறது. அதனால் அவர்கள் தவறானவர்களின் நட்பாலும், அவர்களுடைய தவறான வழிகாட்டுதல்களாலும் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலை, சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு - பெற்றோர் - பிள்ளைகளின் உறவு மேம்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் உளவியல் ரீதியாக தங்களுடைய பிள்ளைகளை அணுக வேண்டும். அவர்களுக்கு சாதகமாக பேசுவது போல பேசி அவர்களின் மன நிலையை அறிந்து பேச வேண்டும். அவர்கள் எதைக் கேட்டாலும் உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் அவர்களின் மனநிலையை அறிந்து அவர்களிடம் பக்குவமாக பேச வேண்டும். பிள்ளைகள் தேவையென கேட்கும் பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்க பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கிறதா என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். தங்களால் வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தாலும், அந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது என்பதையும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

தினந்தோறும் தங்களுடைய பிள்ளைகளுடன் பேச பெற்றோர்கள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்று பிள்ளைகள் வெளியில் எதிர்கொண்ட விஷயங்களைப்பற்றி பேச வேண்டும். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு தீர்வு கூற வேண்டும். படிப்பு குறித்து கேட்டறிய வேண்டும். அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தால் ஏன் ஆர்வம் குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த வகையில் செயல்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய அவசியமான தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தாங்கள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று குடும்ப பிரச்னைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறாமல் விட்டுவிடக் கூடாது.

குடும்ப பிரச்னைகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறி விவாதிக்க வேண்டும். தங்களுடைய குடும்ப நிலைமையை அறிந்தால்தான் அவர்களும் பொறுப்பாக செயல்படுவார்கள். என்னதான் பிள்ளைகள் மீது அதிக பாசத்தை பொழிந்தாலும், பிள்ளைகளின் போக்கிலேயே அவர்களை தனியாக விட்டுவிடாமல், அவர்கள் போக்கில் பெற்றோர்களும் சென்று பிள்ளைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடனான உறவை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் மகிழ்ச்சியடைச்செய்யவேண்டும். இதன் மூலம் தனிக்குடும்ப மனநிலை மாறி கூட்டுக் குடும்பம் போன்ற மகிழ்வு உருவாகவும் வழி ஏற்படும்.

Source Dinamani

No comments: