Blogger Widgets

Total Page visits

Sunday, August 25, 2013

ஆதலால் காதல் செய்வீர்: தாமினியின் மனமாற்றத்துக்குக் காரணம்?

சின்னஞ் சிறுவர்களிடமும் வாழ்க்கை என்ற புரிதலுக்குள் புகுந்துவிடாத இளைஞர்களிடமும் காதலுக்காக உயிரையே கொடுப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டு சேர்த்து திசை திருப்பிய பெருமை சினிமாவைச் சேரும். இந்தக் காதல் சிந்தனைகளால் வருங்கால வளமான வாழ்க்கையை  இழந்தவர்கள் எத்தனையோ பேர். படிக்கும் வயதில் படிப்பை மறந்து சிந்தனையை முழுவதும் காதல் எண்ணங்களில் திளைக்கவிட்டு, வாழ்க்கையைக் கோட்டைவிடும் எத்தனையோ பேருக்கு தூண்டில் போட்டு இழுத்ததும் அதே திரைக்கதைகளே! 

இந்தச் சூழ்நிலையில், திரைக்கு வந்து அதே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ஆதலினால் காதல் செய்வீர். காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியாத இளைய சமுதாயம், காதல் என்ற போர்வையில் வளமான வாழ்க்கையைத் தொலைத்துத் தவிப்பதை இதே சினிமாதான் வெளிப்படுத்துகிறது. இந்தப் படமே, காதல் கதைகளால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சினிமா வாரிசின் வாழ்க்கையை நேராக்கி இருக்கிறது என்கிறார்கள் சினிமாவுலகில்!

 
காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி, ஆதலால் காதல் செய்வீர் படம் பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒப்புக் கொண்டாராம். இவ்வாறு தகவல் வெளியாகி சினிமா மீதான மறுபார்வையை வெளிப்படுத்தியுள்ளது. 

நடனக் கலைஞர் சந்துருவை இயக்குநர் சேரனின் மகள் காதலித்ததும், அதற்கு துவக்கத்தில் ஆதரவு அளித்திருந்த சேரன், பின்னர் பின்வாங்கியதும் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், சேரன் மகள் தாமினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் காதலன் சந்துருவை கொலை செய்ய தன் தந்தை சேரன் முயற்சி செய்வதாக புகார் கூறியிருந்தார்.

இதை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு சில நாள் முன்பு காதலன் சந்துரு மீதே தாமினி புகார் அளித்திருந்தார். அதில் சந்துரு தனக்கு தொந்தரவு தருவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டார். பின்னர் மனம் மாறி தந்தை சேரனுடன் வீட்டுக்குத் திரும்புவதாகக் கூறினார் தாமினி. இதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், தாமினி தலைமை ஆசிரியர் வீட்டில் தங்கியிருந்தபோது, 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தை அவர் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன் தவறு உணர்ந்து மனம் திருந்திய தாமினி, பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: