Blogger Widgets

Total Page visits

Tuesday, August 20, 2013

நேர்மை

தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். பணத்தையே பிரதானமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.

தனது மூன்று மகன்களையும் அழைத்து, ''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போது தான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன். ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,'' என்றார். பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர்.

வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை. எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' என்றான்.

இரண்டாமவன் உடனே சொன்னான், ''நீ பரவாயில்லை. எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்" என்றான்.

கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து, ''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா? அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,'' என்று கன்னாபின்னாவெனத் திட்டினான். அண்ணன்கள் இருவரும், ''பரவாயில்லை, நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?'' என்று கேட்டனர்.

கடைக்குட்டி சொன்னான், ''நான் நேர்மையானவன். அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.'' என்றானே பார்க்கலாம்

No comments: