Blogger Widgets

Total Page visits

Monday, June 24, 2013

பொறியியல் கல்லூரியை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது? எந்த கல்லூரியில் படிப்பதற்கு அனைத்து வசதிகளும் இருக்கும்? ஏதேனும் ஒரு கல்லூரி தேர்ந்தெடுத்தால், கேம்பஸ் இன்டர்வியூ இருக்குமா? என்றெல்லாம் பல சந்தேகங்கள் எழுவது உண்மை தான். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் முன்பு முதலில் தெளிவாக இருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு சில யோசனைகள்:

* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும். விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

* அந்தக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் என்.பி.ஏ.,வால் (NBA - National Board Accredition) அங்கீகரிக்கப்பட்வையா என்று பார்க்க வேண்டும்.

* கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் மொத்த தேர்ச்சி விகிதம் படிக்கும்போதே வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

* அந்தக் கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது. அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற விஷயங்களைப் பரிசீலிக்கும் போது பல கேள்விகள் உங்களுக்குள் வரும். நமது விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதா? பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா? உள்ளிட்ட கேள்விகள் எழும்.

அந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் அதற்கு ஒவ்வொரு விடை கிடைக்கும். சிலர் பாடப்பிரிவுகளில் விருப்பம் இல்லையென்றால் கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பார்கள். அது மிகவும் சரியானதே. வேலைவாய்ப்பா, விருப்பமா என்ற கேள்வி எழும்போது, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு எந்தப் பாடப்பிரிவு கிடைக்கிறதோ அதில் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் விருப்பமே இல்லாத துறையைத் தேர்ந்தெடுத்து விடவும் கூடாது.

 இந்த பதிவு தினமணி  நாளேட்டில் இருந்து பகிரப்படுகிறது

No comments: