Blogger Widgets

Total Page visits

Sunday, June 2, 2013

சாப்ட்வேர் கனவுகளும் நிஜங்களும்


வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி போகுதுன்னு சில சமயம் நினைத்து பார்த்தால் சிரிப்புதாங்க வருது. நான் எப்பவுமே ஏதாவது கனவுகளிலே கற்பனைகளிலே மூழ்கியே தான் இருப்பேன்.அதுவும் நான் காலேஜ் படிக்கர சமயத்துல எல்லாம் வேலைக்கு சேர்ந்த அப்பறமா எப்படி எல்லாம் இருக்கனும் எப்படி எல்லாம் இருக்கும் அப்படின்னு நிறைய யோசிப்பேன் , கனவுகள் கானுவேன்.

அப்போ எல்லாம் சாப்ட்வேர் வேலைனா எனக்கு என்ன கனவுன்னா, மணிக்கணக்கா சும்மா ஏதாவது கீபோர்ட்ல தட்டிட்டே இருக்கனும், ஆயிர்க்கனகான வரிகளிலே கோடு எழுதி தள்ளனும், கன்னா பின்னானு யோசிச்சி உருப்படியான சாப்ட்வேர் எல்லாம் உருவாக்கனும்னு அப்படின்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்.

எல்லோருக்கும் உபயோகமான விஷயங்களை பண்ணனும், கணிணிகளை மக்கள் சுலபமா பயன்படுத்தரா மாதிரி விஷயங்கள உருவாக்கனும். இது மாதிரி ஒரு விஷயம் இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு எதெல்லாம் தோனுதோ அதெல்லாம் நானே உருவாக்கலாம் அப்படின்னு எல்லாம் யோசிச்சிட்டு இருப்பேன்.நாம வழக்கமா உபயோகபடுத்தர ஒரு சின்ன ஒரு வலை கருவியில இருந்து இயக்குத்தளம் (operating system) வரைக்கும் என் கனவுகள் நீண்டுக்கிட்டே போகும். 

மக்கள் கண்கள் விரிந்து தன்னை அறியாமல் புன்னகைக்கரா மாதிரி கலை நுனுக்கமான விஷயங்களை உருவாக்கனும் (flash movies மாதிரி) , மக்கள் கவலைகளை மறக்கரா மாதிரி விஷயங்களை பண்ணனும், கணிணியின் பயன்பாடுகளை உரக்க பறைசாற்றும் படைப்புகளை பண்ணனும், மக்களை பூரிக்க வெச்சு தகவல் தொழில்நுட்பத்தின் மந்திரத்துல மயக்க வெக்கரா மாதிரி விஷயங்கள பண்ணனும்னு நினைத்தேன். என் உருவாக்கங்களால் மக்களை சந்தோஷப்படுத்தனும்னு நினைப்பேன்.எனக்கு இப்போ இந்த துறையில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பிறகு கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது இதுல எத்தனை கனவுகள் நனவாகி இருக்குன்னு யோசிச்சு பார்த்தால் சிரிப்புதான் வருது.

ஆரம்பம் எல்லாம் ஒழுங்காதான் இருந்தா மாதிரி இருந்துச்சு. பெங்களுருல இந்தியாவிலேயே மிக புகழ் பெற்ற ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பெனியிலதான் வேலைக்கு சேர்ந்தேன். அகா புடிச்சாலும் புடிச்சோம் நல்ல புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கோம்,இனிமே நம்ம இஷ்டப்படி சாப்ட்வேர் உருவாக்கங்களா உருவாக்கித்தள்ளிக்கிட்டே இருக்கலாம்னு நினைத்தேன். மக்களை நேரடியா போய் சேரும் ஜனரஞ்சகமான பொருட்கள் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆவல் (அதாவது Google,Youtube,Meebo,Flickr/Picassa மாதிரியான உருவாக்கங்கள்)

ஆனா B2B (Business to business) என்று சொல்லப்படும் அலுவல் சார்ந்த தொழில் அமைப்பு பற்றி எல்லாம் நான் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை.. அதாவது ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சில நூறு அல்லது அதற்கும் கம்மியான மக்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் எல்லாம் நான் யோசிச்சே பார்க்காத விஷயங்கள். இதெல்லாத்தையும் விட சப்போர்ட் (support) எனப்படும் மென்பொருள் மெகானிக் வேலை பற்றி நான் கேள்வி பட்டிருக்கவில்லை.இப்படிப்பட்ட சப்போர்ட் மற்றும் பராமரிப்பு வேளைகள்தான் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளின் முக்கியமான தொழில் என்று எனக்கு என்றைக்குமே தோன்றியது இல்லை. ஒட்டு போடுவது, பயன்பாடுகளை (applications) “எப்படியாவது” ஓடவைப்பது மட்டுமே இந்த கம்பெனிகளின் முக்கியமான வேலைகள் என்று நான் அறிந்திருக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் வேளைகளை இவ்வாறாக பிரிக்கலாம். பல பிரிவினருடன் பேசி வேலையை முடிப்பது, உடன் வேலைசெய்பவரிடம் தாஜா செய்து வேலை வாங்குவது, உபயோகமே இல்லாத ஆயிரக்கணகான எக்செல் கோப்புகளை நிரப்புவது, ப்ராசஸ் (process) எனும் பெயரால் கோடிக்கணக்கான மணிகள் உப்பு சப்பில்லாத சொத்தை வேலைகள் செய்வது, வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும்       சக பணியாளரிடம்,இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டில் இருக்கும் சக பணியாளரிடமும் வேலை நிமித்தமாக சண்டை போடுவது, திடீரென்று கொடுக்கப்படும் உன்றுமே தெரியாத வேலைகளை வைத்துக்கொண்டு         திரு திரு என முழிப்பது, ஆயிரம் வேலைகள் வந்து குவிந்த வண்ணம் கிடக்க, எதை எடுப்பது,எதை விடுப்பது என தெரியாமல் திக்கு முக்காடுவது, அவைகளை முக்கியத்துவத்திற்கு  ஏற்றார் போல் வரிசை படுத்துவது, முக்கியத்துவம் திடீரென்று மாற்றப்பட அவற்றை மறுபடியும் வரிசை படுத்துவது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் கோட் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் எவ்வளவு என்று கேட்டால் மிகவும் சொற்பமே. சிறிதும் கலைத்திறனை வெளிக்கொனற முடியாத வேலை வகைகள். இதெல்லாம் கூட பரவாயில்லை என்று இருந்திருப்பேன்,ஆனால் எனக்கு சுத்தமாக பிடிக்காத இன்னொன்றும் நான் எதிர்கொள்ள நேரிட்டது.இரவு வேளைகளில் வேலை பார்ப்பது.இந்த கம்பெனியில் சேருவதற்கு முன்னாலே அமெரிக்காவில் இருப்பவருக்கு கம்ப்யூட்டர் பழுதாகிவிட்டால் தொலைபேசி வழியே உதவும் தொழில்நுட்ப உதவி குழு ஒன்றில் ஓரிறு மாதங்கள் பணியாற்றி இருந்தேன். அது இரவு வேளைகளில் பணியாற்றும் வேலைதான். அப்பொழுதே இரவில் பணியாற்றுவது நமக்கு சரி பட்டு வராது என்று தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த சப்போர்ட் தொழில் வந்தால் இரவில் வேலை செய்யும் கட்டாயங்கள் உண்டு. முடிந்த வரை வெளிநட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு பகல் நேரமாய் இருக்கும்போது நமது இரவு நேரங்களில் அந்த வேலையை செய்தால்தான் இந்த நிறுவனங்கள் காசு சேர்க்க முடியும்.

அவர்களுக்கும் வேறு வழி கிடையாது. தகவல் தொழில்நுட்பத்தொழில் மிகவும் போட்டி நிறைந்த ஒரு சந்தை. வேலை முடிக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டே போக வேண்டும், தேவையான ஆட்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே போக வேண்டும் அப்பொழுது தான் லாபத்தை கூட்டி இந்த சந்தையில் நிலைக்க முடியும். இதனால் இரவில் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுமா?? வேலை பளு காரணமாக வேலை செய்பவருக்கு மன உளைச்சல் அதிகமாகுமா?? கஷ்டம்தான்!!! ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் செய்யவில்லை என்றால் வேறு ஒரு கம்பெனி ஆர்டரை தட்டிக்கொண்டு போய்விடும்.இந்த பைத்தியக்காரத்தனமான ஓட்டப்பந்தயத்தில் எதையும் விட்டு கொடுக்க முடியாது. போட்டி கம்பெனி தொழிலாளருக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கிறதோ அதற்கு மேலாக பெரிதாக ஒன்றும் கொடுக்க முடியாது . கொடுத்தால் போட்டி விளிம்பை விட்டுக்கொடுக்க வேண்டிய அபாயத்திற்கு இந்த கம்பெனிகள் தள்ளப்பட்டு விடும்.

இந்த கம்பெனிகளுக்கு ஆர்டரை தரும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் இதே போன்ற நிலைதான்.ஒரு வேலையை ஒரு அமெரிக்க கம்பெனி செய்வதற்கு 100 டாலர்கள் ஆகும், அதே வேலையை ஒரு இந்திய கம்பெனி 40 டாலரில் முடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்திய கம்பெனிக்கு தான் கொடுக்க தோன்றும். அதில் மிச்சமாகும் 60 டாலரை அவன் கம்பெனியின் இதர வளர்ச்சி பணிகளில் செலவிடுவான். அதே இந்திய கம்பெனிகளில் ஒரு கம்பெனி 40 டாலருக்கு செய்கிறது என்றும், மற்றொன்று 35 டாலருக்கு செய்கிறது என்றால் அவன் 35 டாலர் கம்பெனியிடம் தான் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலை . இல்லையென்றால் அவன் அவனுடைய போட்டி கம்பெனியிடம் தோற்று விடுவான்!!! இங்கே யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருக்கும் அவர்கள் அவர்களின் நிர்பந்தங்கள்,பிரச்சினைகள்,  அப்பொழுது எங்கள் கனவுகளுக்கு யார் பதில் சொல்வது?? என்னை போன்று எதிர்பார்ப்புகளுடம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலைமை தான் என்ன?? எதையாவது உருவாக்க வேண்டும் என்று எங்களின் தாகம் என்ன ஆவது? இது மாதிரி பல கேள்விகளுக்கு எனக்கு இன்னைக்கு வரை சரியான பதில் இல்லை

இத்தனையும் சொன்ன பிறகு இந்த துறையால் நான் பெற்ற நன்மைகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் நான் நன்றிகெட்டவனாகி விடுவேன். தீவிரமான வேலை சூழ்நிலைகளால் நான் முன்னைவிட பொறுமையாய் யோசிக்கும் மனநிலை பெற்றேன். நிறைய பேசி பேசி என் பேச்சாற்றல் கொஞ்சம் வளர்ந்து விட்டது. பெங்களுர் எனும் ஒரு வேற்று நகரில் தங்கி வேலை செய்யும் அனுபவம் கிடைத்து. உலகத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்றிற்கு சென்று தங்கி வாழும் அனுபவம் கிடைத்தது. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை மேம்பட்டது. எல்லவற்றிற்கும் மேலாக என்னால் என் பெற்றோருக்கு முன்னை விட சிறப்பான வாழ்க்கை நிலையை என்னால் அளிக்க முடிந்தது. மற்ற எல்லாவற்றையும் விட கடைசி விஷயம் தான் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம்.

ஆனால் ஏதாவது கலைத்திறன் வாய்ந்த விஷயங்களை உருவாக்கவேண்டும் என்ற என் கனவுகளை என்னால் மறக்க முடியவில்லை. பல சமயங்களில் , என் திறைமைகள் மற்றும் எண்ண ஓட்டத்துக்கும் இந்த துறைக்கும் சம்பந்தமே இல்லையே, நான் இந்த துறையில் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?? என்று இயலாமை கலந்த ஒரு ஏக்கம் எனை குழப்பமடைய செய்து விடும். பேசாமல் புகைப்பட துறையில் புகுந்து விடலாமா?? விளம்பரத்துறையில் விழுந்து விடலாமா?? எழுத்து துறையில் எழுந்து விடலாமா?? என்று நிறைவேராத கோட்டைகளை கட்ட ஆரம்பித்து ,சிறிது நேரத்தில் எதார்த்தத்திற்கு திரும்பி விடுவேன்.

சேருமிடம் ஏதும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை படகு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த தகவல்  என் எண்ணங்கள் எழுத்துக்களாய் எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது. 

No comments: