Blogger Widgets

Total Page visits

Saturday, June 8, 2013

மதிப்பெண்கள்.. மதிப்பீடல்ல..!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சி! அவர்களே எதிர்பாராத அளவுக்கு பலரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தேர்வில் 9 பேர் 498 மதிபெண்கள் பெற்று முதலிடம் வகித்தனர். 52 பேர் இரண்டாம் இடம். 137 பேர் மூன்றாமிடம். இதுதவிர, தமிழ்ப்பாடம் அல்லாமல் சம்ஸ்கிருதம் படித்து 499 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருபுறம்.

 சில பெற்றோர்கள் வெளிப்படையாகவே, "என் பையன் இந்த அளவுக்கு மதிப்பெண் பெறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை' என்று வியந்தார்கள். பிள்ளைகளைக் குறைத்து மதிப்பிடுவதுதான் பல பெற்றோரின் குணம். ஆனால், மாணவர்களே, தங்களுக்குள் பாராட்டிக்கொள்ளும்போது, "எப்படிடா? எனக்கே தெரியவில்லை!' என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது.

 வினாத்தாள் மிக எளிதாக இருந்தது என்பது ஒரு வாதம். சமச்சீர் கல்வி முறையால்தான் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைத்தது என்பது இன்னொரு வாதம். விடைத்தாள் திருத்தும் நடைமுறைகள், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கச் சொல்கின்றன என்பது ஒரு சிலருடைய வாதம். கடைசி ஒரு மாதத்தில், மாதிரி வினாத்தாள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்வு நடத்தியதும், மாதிரி வினாத்தாள்களில் இருந்த கேள்விகளே பொதுத்தேர்விலும் இடம்பெற்றதும் இந்த அளவுக்கு அனைத்து மாணவர்களும் மதிப்பெண் பெறக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

  இந்த வாதங்கள் அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இந்த உண்மைகள் தமிழகத்தின் நலன் கருதும் கல்வியாளர்களுக்குக் கசப்பானவையாகவே இருக்கும். ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் சாதனைகளால் எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை. அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப்  பொதுத்தேர்வில், இதைவிடக் கூடுதலான மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறுவார்கள். டி.வி. தொடர் நாடகத்துக்குக் கிடைக்கும் "ரேட்டிங்' போல, பொதுத்தேர்வுகளுக்கும் ஆண்டுதோறும், ஆட்சிதோறும் "ரேட்டிங்'கா தர முடியும்?

ஆண்டு நிறைவில் நடத்தப்படும் தேர்வு என்பது, ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காகவும், அடுத்த படிநிலையில் அவரை உயர்த்துவதற்காகவும்தான். ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடங்களிலும் புரிதல் கொண்டவராக இருக்கிறாரா என்பதைச் சோதிப்பதுதான் தேர்வு.

 ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் ஒன்றுபோல இருக்காது. சில மாணவர்கள் முழுமையாகப் படித்து அறிந்திருக்கலாம். சிலர், சில பாடங்களில் சிறப்பாகவும், சில பாடங்களில் புரிதல் இல்லாமலும் இருக்கலாம். எல்லா பாடங்கள் தொடர்பாகவும் கேள்விகளைப் பல படிநிலைகளில் அமைத்து, அதன் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறனை அளவிடுவதுதான் தேர்வு. இந்த அடிப்படையில்தான் வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும்.

  எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத்திறனை அறிய உதவாது. இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள். ஒரு கணக்கை எவ்வாறு, படிப்படியாக அணுகி, மாணவனால்  விடை காணப்படுகிறது என்பது முக்கியம். சில படிகள் தாவி, விடையைச் சரியாக எழுதினாலும் அடித்து விடுவார்கள். "ஒரு சிக்கலை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் மனப்பயிற்சிதான் கணிதம். விடையைவிட, அதற்கான வழிதான் முக்கியம்' என்று மதிப்பெண் தர மறுத்த ஆசிரியர்களும் இதே தமிழ்நாட்டில் இருந்தார்கள்.

ஆங்கிலம், தமிழ் விடைத்தாள் என்றால் திருத்தல் இன்னும் கடுமையாக இருக்கும். ஆங்கிலம், தமிழ்  இரண்டாம் தாளில் கட்டுரைக்கு 10 மதிப்பெண் உண்டு. அதில் ஒரு தலைப்பின் கீழ் எழுதப்படும் கட்டுரையில் இன்னின்ன விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று 7  மதிப்பெண் வகுத்துக்கொள்வார்கள். மீதி 3 மதிப்பெண் அந்தக் கட்டுரையில் மாணவர் கையாளும் சொந்த மொழிநடை, கருத்தை எடுத்துச்சொல்வதில் தெளிவு, எழுத்துப் பிழையில்லாமல் இருத்தல் ஆகியவற்றுக்குத்தான். ஆகவே மொழிப்பாடத்தில் "நூற்றுக்கு நூறு' என்பது சாத்தியமே இல்லாமல் இருந்தது.


அறிவியல் பாடத்தில் 38,154 பேர் நூற்றுக்கு நூறு! கணிதத்தில் 29,905 பேர் நூற்றுக்கு நூறு! சமூக அறிவியலில் 19,680 பேர் நூற்றுக்கு நூறு! ஆங்கிலத்திலும்கூட பல மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். வினாத்தாள் மட்டும் எளிமையாகவில்லை, விடைத்தாள் திருத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. 

அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை!கல்வி இலவசமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும். தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.

 ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், ஆசிரியர்களும், தமிழக அரசும் சுயமதிப்பீடு செய்தால் புரியும் - இவை கொடுக்கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்பது!


இந்த பதிவு தினமணி நாளிதழில் இருந்து பகிரப்படுகிறது. 

No comments: