Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

தேர்வை சிறப்புடன் எழுத ஆலோசனைகள்: ஜெயப்பிரகாஷ் காந்தி

வெற்றியை அடைய குறுக்குவழி என்று எதுவும் கிடையாது என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, முதலில் நன்றாக படிக்க வேண்டியது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு வகை தேர்வுக்கும், ஒவ்வொரு விதத்தில் நாம் தயாராக வேண்டும். சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, பல நாட்கள் கடினமாகப் படிக்க வேண்டும், அதேநேரத்தில், பள்ளி தேர்வுகளுக்கு 1 அல்லது 2 வாரங்கள் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்கள் பின்பற்றத்தக்கவாறு சில ஆலோசனைகளை நான் இங்கே தருகிறேன்.

தேர்வைக் கண்டு அஞ்சவோ (or) வெறுக்கவோ வேண்டாம் & நம்பிக்கையுடன் இருக்கவும்

சில மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். ஆனாலும், தேர்வென்றாலே அவர்களுக்கு ஒரே பயம்தான். இதனால் அவர்கள் கவனம் சிதறி, அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போய்விடுகிறது. எனவே, படிக்கும் முன்பாக, மனதிலிருந்து பயத்தைப் போக்கி, உங்களின் மனதை தெளிவாக்கி படிக்கத் தொடங்க வேண்டும். நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான அம்சம், அந்த நம்பிக்கைதான் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது.

சிறந்த கால அட்டவணை

படிக்கத் தொடங்கும் முன்பாக, நல்ல கால அட்டவணையை தயார்செய்து கொள்ளவும். இந்த அட்டவணையில் அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும், அதேசமயத்தில், அந்த அனைத்திற்கும் சமமான நேர முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. கடினமாக உணரும் பாடங்களுக்கு அதிக நேரமும், எளிதாக உணரும் பாடங்களுக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். ஆனால், எந்நேரமும் படிப்பு படிப்பு என்றிருக்காமல், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். படிப்பிற்கு இடையிடையே ஓய்வும் கட்டாயம் தேவை.

நல்ல சூழ்நிலை

படிப்பிற்கேற்ற நல்ல சூழ்நிலை என்பது மிகவும் முக்கியமானது. உங்களுக்கு எந்த இடம் தொந்தரவில்லாமல், செளகரியமான இடமாகப் படுகிறதோ, அந்த இடத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். அந்த இடமானது, மனதை ஒருமுகப்படுத்தவும், ஆழ்ந்து படிக்கவும் ஏற்ற இடமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தை படிக்கையில், உங்களின் கவனம் முழுவதும் அதன்மீதே இருக்க வேண்டும். எனவே, பிற பாடங்கள் தொடர்பான புத்தகங்களை உங்கள் கண்பார்வையில் படாதபடி வைத்திருத்தல் நல்லது.

உங்களின் சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும் நேரத்தை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கவும். நீங்கள் படிக்கும் அறையில் பெரியளவிலான முகம் பார்க்கும் கண்ணாடி எதுவும் இருக்க வேண்டாம் மற்றும் சிறிய கண்ணாடியாக இருந்தால், உங்களின் அருகில் இருக்க வேண்டாம். ஏனென்றால், உங்களின் உருவத்தைப் பார்த்து, கவனத்தை சிதற விடுவீர்கள்.

இதைத்தவிர, சிறப்பாக படிப்பதில், இன்னொரு வெற்றிகரமான ரகசியமும் அடங்கியுள்ளது. கிழக்கு அல்லது வட-கிழக்கு திசையில் பார்த்தவாறு அமர்ந்துகொண்டு படிக்கையில், உங்களுக்கு, அதிகளவிலான நேர்மறை ஆற்றல் கிடைக்கும் மற்றும் உங்களின் மதிப்பெண்ணும் உயரும்.

நேராக அமரவும்

படிக்கும்போது, சரியான முறையில் அமர்தல் என்பது முக்கியமான செயல்பாடு. கட்டிலில் படுத்துக்கொண்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டோ படிக்க வேண்டாம். நேராக அமர்வதே சிறந்தது. உங்களின் முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். உங்களின் கால்கள் தரையில் சமமாகவும், தரையிலிருந்து சிறிது மேலெழும்பியும் இருக்கட்டும். கால்களை நன்றாக தரையில் வைப்பதால் தூக்கம் தூண்டப்படும். ஏனெனில் ரத்த ஓட்ட செயல்பாட்டை அது பாதிக்கிறது.

படிக்கும்போது குறிப்பெடுத்தல்

படிக்கையில், முக்கிய அம்சங்களை குறிப்பெடுத்துக் கொள்வதானது, திருப்புதலின்போது, படித்தவைகளை நினைவுகூற உதவும். முக்கியப் பெயர்கள், வருடங்கள், எண்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டதாய் உங்களின் குறிப்பு இருக்க வேண்டும். தேர்வு நெருக்கத்தில், பாடப்புத்தகங்களை அவசர அவசரமாக புரட்டுவதைவிட, இதுபோன்ற குறிப்புகளை பார்த்து முக்கியமானவைகளை நினைவில் வைக்கலாம். நீங்கள் எழுதிய குறிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை, பாடப்புத்தகத்தைப் பார்த்து தீர்த்துக் கொள்ளலாம்.

உறக்கம் மற்றும் தூக்கம்

தேர்வுக்கு முன்பாக நல்ல உணவு மற்றும் உறக்கம் ஆகியவை மிகவும் அவசியம். பொதுவாக, மாணவர் பருவத்தினர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது உறங்க வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாள் இரவு குறைந்தது 6 மணிநேர உறக்கம் அவசியம். அதேசமயம், 8 மணிநேரத்திற்கு மேலாக உறங்கத் தேவையில்லை. உங்களுக்கு நன்கு ஒத்துவரும் உணவை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தேர்வு தினத்தன்று தயவுசெய்து பட்டினி கிடக்க வேண்டாம். தேர்வுக்கு முந்தைய நாள் படுக்கும் முன்பாக சிறிது தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். ஏனெனில், அதன்மூலமாக, உங்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

நன்றாக எழுதுதல்

நீங்கள் என்னதான் நன்றாகப் படித்திருந்தாலும், படித்ததை, தாளில் எப்படி எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதை வைத்துதான் உங்களின் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் எழுதியதை ஒவ்வொரு எழுத்தாக பார்க்க, பேப்பர் திருத்தும் ஆசிரியரால் முடியாது. எனவே, அவர் அவசரஅவசரமாக முக்கியமான பாயின்டுகளைத்தான் பார்ப்பார். எனவே, உங்களின் பதில்களை முடிந்தளவு பாயின்டுகளாவே எழுதுங்கள்.

உங்களின் கையெழுத்தை முடிந்தளவு அழகாக எழுதுங்கள் மற்றும் அடித்தல்-திருத்தல் இல்லாமல் எழுதுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பதிலுக்கான கேள்வியை முதலில் தேர்ந்தெடுத்து, அதை எழுதுங்கள்.. இதனால், கடைசி சில கேள்விகளுக்கு உங்களால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை என்றாலும், அதனால் உங்களின் மதிப்பெண்கள் பெரிதாக பாதிக்கப்படாது. எழுதும்போது நேரம் வகுத்து எழுதுங்கள். உங்களது பாடத்தில் இல்லாத சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால், அதற்கு வெறுமனே ஏதேனும் பதில் எழுதி வையுங்கள். ஏனெனில், அதுபோன்ற கேள்விகளுக்கு முழுமையான மதிப்பெண்கள் அளிக்கப்படுவது நடைமுறை.

தவறான வழிகளை தவிருங்கள்

காப்பியடித்தல் மற்றும் பிட் அடித்தல் போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டாம். அது உங்களை தேர்விலிருந்து புறந்தள்ளுவதோடு, உங்களின் நன்மதிப்பு மற்றும் எதிர்காலத்தையே பாதித்துவிடும். எனவே, உங்களால் முடிந்தளவு நேர்மையாகவும், சுயமாகவும் தேர்வை எழுதுங்கள். ஏனெனில், தேர்வு என்பது, உங்களை நிரூபிக்க மேற்கொள்ளப்படும் செயல்பாடாகும்.

கடவுளையும், உன்னையும் நம்பு

கடவுள் நம்பிக்கை இருந்தால், தேர்வுக்கு முன்பாக பிரார்த்தனை செய்யலாம். தேர்வு எழுதும் 10 நிமிடம் முன்னதாகவே, உங்களின் மனம் அமைதியடைந்துவிட வேண்டும். ஏனெனில், அந்த அமைதி நிலைதான் உங்களை நன்றாக தயார்படுத்தும். உங்களின் சுய நம்பிக்கையானது, தேர்வை வெற்றிகரமாக எழுத உதவும் காரணகளில் முக்கியமானதாகும்.

தேர்வு எழுதி முடித்தவுடன் உடனடியாக விவாதம் செய்ய வேண்டாம். இதன்மூலம் உங்களின் தவறுகள் தெரியவந்தால், நீங்கள் அடுத்து எழுதப்போகும் தேர்வு பாதிக்கப்படும். உங்களின் நண்பர்கள் யாரேனும் அந்த தவறை செய்துகொண்டிருந்தாலும், நீங்கள் அதில் பங்கெடுத்துக் கொள்ளாமல், உடனே வீடு திரும்பி, அடுத்து ஆக வேண்டியதை கவனிக்கவும்.

இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது. 

No comments: