ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லை. அனைத்திற்குமே, பிரசன்டேஷன் மற்றும்
கேள்வி-பதில் திறன்கள் ஆகியவை பிரதான அம்சங்களாகிவிட்டன. எனவே, அவைப்பற்றி
ஏராளமான ஆலோசனைகளும், கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. ஒருவரின் பணி
வெற்றிக்கு, பிரசன்டேஷன் திறனும், கேள்வி-பதில்களை எதிர்கொள்ளும் திறன்
ஆகியவை தீர்மானிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. அவை தொடர்பான விஷயங்களை
இப்போது அலசலாம்.
உங்களின் பார்வையாளர்களை அறியுங்கள்...
நமக்கு பார்வையாளர்களாக(audience) அமைந்தவர்கள் யார்? இந்த
கலந்துரையாடலிலிருந்து அவர்கள் எதை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்? நமது
பிரசன்டேஷன், அவர்களிடம் என்னமாதிரியான சிந்தனையை உருவாக்க வேண்டுமென
விரும்புகிறோம்? போன்ற கேள்விகள் முக்கியமானவை. உங்களின் பார்வையாளர்களைப்
பற்றிய முன் மதிப்பீடு மிகவும் பயனுள்ளது. ஏனெனில், அதன்மூலமாக, அவர்கள்
எந்தவிதமான கேள்விகளைக் கேட்பார்கள் என்பதைக் கணித்து, அதன்மூலமாக நீங்கள்,
உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்து, வகுப்பறையில் ஒரு பிரசன்டேஷன்
வழங்க உள்ளீர்கள் எனில், உங்களின் பிரதான பார்வையாளர் பேராசிரியராக
இருப்பார். அவர், உங்களின் செயல்பாட்டுத் திறனை இதன்மூலம் மதிப்பிடுவார்.
அதேசமயத்தில், ஒரு செமினார் அல்லது மாநாடாக இருந்தால், நீங்கள் அங்கே,
உங்களின் துறை தொடர்பான நிபுணராக இருப்பீர்கள். பார்வையாளர்கள்,
உங்களிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ள விரும்பலாம்.
கேள்விகளை எதிர்பார்த்தல்
உள்ளடக்கத்தை ஆய்வு செய்கையிலேயே, அந்தப் பாடம் தொடர்பாக நாம் தயாராகி
விடுகிறோம். ஆனால், அதேசமயத்தில், பார்வையாளர்கள் என்ன மாதிரியான கேள்விகளை
கேட்பார்கள் என்பது பற்றி ஓரளவு யூகித்து, அதன்படி சில ஏற்பாடுகளை நீங்கள்
செய்துகொண்டால், அது புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு தெளிவான
புரிதலுக்கு நீங்கள் வர வேண்டுமெனில், அதன்பொருட்டு, தேவையான நேரம்
செலவழித்து,பல அம்சங்களை ஆராய்ந்து, உங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம்.
நுணுக்கமான கவனிப்பு
உங்களது பிரசன்டேஷன் செயல்பாட்டில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமெனில்,
கவனிப்பு திறன் மிகவும் முக்கியம். பார்வையாளர், என்ன கேட்க வருகிறார்,
அதன் நோக்கம் என்ன போன்ற விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனில்,
உங்களின் கவனிப்பு கூர்மையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு முந்தக்கூடாது.
பல இடங்களில், பிரசன்டேஷன் செய்பவர்கள், பார்வையாளரின் கேள்வியை முழுவதுமாக
கேட்க விடாமல், அதை அறைகுறையாக புரிந்துகொண்டு, பதில் தருகிறார்கள்.
இதனால், பார்வையாளர்கள் அதிருப்தியடைகிறார்கள்.
எனவே, பார்வையாளரை, முழுவதுமாக பேச விடுதல் முக்கியம். கேள்வியை
முழுவதுமாக முடிக்கும் முன்பாகவே, அதை புரிந்துகொண்டதாக நினைத்து, பதில்
சொல்ல ஆரம்பிப்பது, உங்களது பிரசன்டேஷனை முனை மழுங்க செய்துவிடும்.
பகுப்பாய்தல் மற்றும் தெளிவாக வெளிப்படுத்தல்
பொதுவாக, சந்தேகங்களுக்கு பதிலளிக்கையில், சற்று நிதானமாகவே செயல்பட
வேண்டும். கேள்வி கேட்பவர் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், உங்களின்
விளக்கும் திறனும், நீங்கள் பயன்படுத்தும் மொழியும் இருக்க வேண்டும்.
முடிந்தளவு எளிமையான வார்த்தையையும், வார்த்தை கட்டமைப்பையுமே பயன்படுத்த
வேண்டும். சிக்கலான வார்த்தைப் பயன்பாடு, குழப்பத்தையே ஏற்படுத்தும்.
மேலும், நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கும்போது, நடைமுறையிலிருந்து ஒரு
சிறப்பான, எளிய உதாரணத்தைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில், ஒரே
சந்தேகத்தில், பல கேள்விகள் உள்ளடங்கியிருக்கும். இதைத் தெளிவாக
புரிந்துகொண்டு, ஒரே சமயத்தில் அனைத்திற்கும் பதிலளிக்காமல், பகுதி
பகுதியாக பிரித்து, ஒருநேரத்தில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கவும்.
புரிந்ததா?
ஒரு கேள்விக்கான பதிலைக்கூறி முடித்த பின்பாக, கேள்வி கேட்டவரிடம்,
உங்கள் கேள்விக்கான எனது பதில் சரிதானா? என்று கேட்டுவிடுதல் நன்று.
ஏனெனில், அவர் தனது கேள்வியை சரியாக விளக்காமல் விட்டிருக்கலாம் அல்லது
கேள்வியை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் அல்லது உங்களது பதில்
உங்களுக்கு மட்டுமே திருப்தியைக் கொடுத்திருக்கலாம், கேள்வி கேட்டவருக்கு
அல்ல.
இதனால், மேற்குறிப்பிட்ட வகையில் கேட்டு, அவரின் திருப்தியை சோதித்துப்
பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படின், திரும்பவும் பதில் கூறலாம்.
பயப்படத் தேவையில்லை
நீங்கள் பிரசன்டேஷன் செய்யும் விஷயத்தை முடிந்தளவு தெளிவாக
படித்திருப்பீர்கள்தான். ஆனாலும், எதையும் முழுதாக யாராலும் படிக்க
முடியாது. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நேரம் பிரசன்டேஷன் செய்ய, ஒரு
விஷயத்தை, ஆதிமுதல் அந்தம்வரை அலசி ஆராய்தல் என்பது சாத்தியமில்லாத விஷயம்.
முனைவர் பட்ட ஆராய்ச்சி என்பதே, ஒரு சிறு விஷயத்தை, சிறிய அளவில்
ஆய்வுசெய்வதுதான். ஏனெனில், ஒவ்வொரு விஷயமும் நம் கற்பனைக்கெட்டாத அளவு
அவ்வளவு பெரியது!
அந்த வகையில், பார்வையாளர் கேட்கும் கேள்வியானது, உங்களின் எல்லையைத்
தாண்டியதாக இருந்தால், அதற்காக பயப்படவோ, தயங்கவோ வேண்டாம். பதிலை,
குறிப்பிட்ட காலத்தில் கூறுகிறேன், உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்,
இதுதொடர்பாக நான் பார்க்க வேண்டியுள்ளது என்பன போன்ற சரியான காரணங்களை
கூறுங்கள். யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால், தெரியவில்லை என்றால் அசிங்கமாக நினைத்துவிடுவார்களோ என நினைத்து,
சம்பந்தமின்றி எதையெதையோ பேசி, மழுப்பி, உங்களின் பிரசன்டேஷன் மற்றும்
உங்களின் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம். இதனால், பலரின் நேரம்
விரயமாகும்.
குழு உணர்வோடு இருங்கள்
கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒரு குழுவாக பிரசன்டேஷன் செய்வது,
நடைமுறையாக உள்ளது. இத்தகைய செயல்பாட்டில், ஒருவரின் தனித்திறன்
அளவிடப்படுவதுடன், அவரின் குழு செயல்பாட்டு திறனும் மதிப்பிடப்படுகிறது.
கேள்வி - பதில் பகுதியில்தான் இந்த மதிப்பீடு கூர்மையடைகிறது. இந்த
நேரத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தெளிவாக பதில் சொல்ல
வேண்டும். உங்களின் சக குழு உறுப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள்
முந்திக்கொண்டு பதிலளிக்கக் கூடாது. ஒருவேளை சக உறுப்பினர் அளிக்கும் பதில்
திருப்தியற்றதாகவும், சரியானதாகவும் இல்லாமல் இருந்தால்கூட, நீங்கள்
உங்களது அதிருப்தியை பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தக்கூடாது.
சக உறுப்பினர் பதிலளித்து முடித்தவுடன், பேராசிரியரின் அனுமதிபெற்று,
கூடுதல் தகவலாக, உங்கள் நண்பர் விட்டதை நீங்கள் கூறலாம். இதன்மூலம், உங்கள்
குழுவின் செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஒரு
குழுவாக செயல்படும்போது, அதன் தவறுக்கு நீங்களும் ஒருவராக பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டும், அந்தத் தவறுக்கு நீங்கள் காரணம் இல்லையென்றாலும்கூட.
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment