பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை,
சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து
தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி
பெறுவதற்கும் தான்.
அதாவது, குறிப்பிட்ட துறையில்,
வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்
தான்.மாணவர்கள், தன் சுயவிருப்பத்துடன், ஒரு துறையை படிக்கத்
தேர்ந்தெடுத்து, அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும் போது, முழு
ஈடுபாடு இருக்கும்; பணம் சம்பாதிப்பதும், அதனுடன் சேர்ந்து நடக்கும்.
பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவருக்கு, பணம் சம்பாதிப்பது ஒன்றே
முக்கிய நோக்கம். பணி, இரண்டாம் பட்சம் தான். கட்டாயத்தின் அடிப்படையில்
படித்த மாணவர், படிப்பிலும் நாட்டமின்றி, தெளிவான புரிதலுமின்றி படித்து
முடித்து, வேலை கிடைப்பதும் கடினம்.
விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ
தரமுடியாது. விருப்பமில்லாத துறையில், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை, எந்த
நாட்டில் அதிகமாகிறதோ, அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம்
எப்படியிருக்கும்? பொருளாதாரம் பாதிக்காதா?பணம் சம்பாதிக்கும் நோக்கம்
முதன்மையாகும் போது, தொழில் அறங்கள் ஒழிக்கப்படும்.
தொழிலில் புரிதல் குறைவாக உள்ளதால், உற்பத்தியை எட்ட குறுக்கு வழிகள்
கையிலெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்படும், தரக்குறைவான பொருட்களுக்கான
அரசு தரக்கட்டுப்பாட்டுத் துறைகளை சரிக்கட்ட, லஞ்சம், ஊழல் கையூட்டுகளால்
ஈடுகட்டப்படும்.
உங்களுக்கு விருப்பமில்லாத செயலை, உங்களால் எவ்வளவு நேரம் செய்ய
முடியும்? அச்செயலை நேர்த்தியாக செய்ய முடியுமா? விருப்பமில்லாத துறையில்
படித்து, விருப்பமில்லாத துறையில் வேலை செய்து வாழ்வது, புதை மணலில்
சிக்குவது போன்றது. அதன்பின் மீண்டு வருவது மிகக்கடினம். இது, அந்த தனி
மனிதனோடு மட்டும் முடிந்து போவது இல்லை. சமுதாயத்தையும் பாதிக்கும்.
மன உளைச்சலில் ஆரம்பித்து, குடும்ப உறவுகளில், சமூக உறவுகளில் சிக்கல்
என்று நீண்டு கொண்டே போகும். மீனைக் கொண்டு வந்து, ஓட்டப்பந்தயத்தில்
ஜெயிக்கச் சொன்னால் எப்படி? விருப்பம் என்பது, இயல்பிலிருந்து வருகிறது;
இயல்பிலிருந்து மாறும் போது சமூகம் பாதிக்கப்படுகிறது.
ஒரு சின்ன உதாரணம்... ஆட்டோ டிரைவர், தன் தொழிலை விரும்பி ஏற்றுக்
கொண்டிருந்தால், பயணம் செய்யும் பொதுமக்களுக்கு எவ்வளவு நன்மை. பணம்
சம்பாதிப்பது ஒன்றே, நோக்கமாகக் கொண்டிருந்தால் எவ்வளவு சங்கடங்கள்.
இதே போல பணம் சம்பாதிப்பதே முக்கிய நோக்கமாக கொண்ட அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,
அரசியல்வாதிகளால் எவ்வளவு சிக்கல்கள் இந்த சமுதாயத்திற்கு. விருப்பப்பட்ட
துறையில், தொழிலில் ஈடுபட்டவர்களால் எத்தனை நல்ல பங்களிப்புகள் என, வரலாறு
முழுவதும் எண்ணிப் பார்க்கலாம்.
பணம் உள்ளவர்கள், வசதியாகப் பிரச்னை இன்றி வாழ்வதாகத் தெரிவதால், அதுவே
நோக்கமாக பலருக்கு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத போது, பலர்
எந்த வழியில் பணம் நிறைய கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25-30
வயதான பின் தான், தாம் செய்த தவறு தெரிகிறது.
அதன் பின் திருமணம், குழந்தை என்றான பின், தனி நபர் விருப்பம் என்பது
இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுகிறது. இது போன்று, விருப்பமில்லாத
துறையை தேர்ந்தெடுப்பது எதனால் நேர்கிறது என்றால், பொருளாதாரத்தை
ஈட்டுவதற்கான பரந்துபட்ட பல்வேறு துறைகள் வேலைகள், தொழில்கள் இருப்பது
இளவயதினருக்கு தெரியாமல் இருப்பது தான்.
பெற்றோரும், ஆசிரியர்களும் அதற்கும் மேலாக கல்விக் கொள்கையும், பள்ளி
மாணவர்களுக்கு பலவகைப்பட்ட வேலைவாய்ப்பு துறைகளையும், தொழில்களையும்
அறிமுகப்படுத்துவதை முக்கியமான பொருளாக கருதாததும், இந்த நிலைக்கு காரணம்.
நம் கல்வித் திட்டம், அனைத்து மாணவர்களையும் ஒரு சில வேலைகளுக்காகவே தயார்
செய்கிறது.
பல துறைகளைப் பற்றி அறிமுகப்படுத்தாததால், ஒவ்வொரு மாணவனுக்கும்
பொருளாதாரத்தை ஈட்ட குறுகிய பாதையே உள்ளது. அதிலும், ஜாதி ஏற்றத்
தாழ்வுகளைப் போல, உயர்ந்த வேலை, படிப்பு தரக்குறைவான வேலை, படிப்பு என்ற
சமூக மதிப்பீடுகளும் உள்ளன.
ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் ஒரு வித பிம்பம், ஒரு சில வேலைகளையே
உயர்ந்தவையாக முன்னிறுத்துகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும்,
இந்தக் காரணத்தால் தான் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆக மட்டும் தான்
ஆகின்றனர்.
இன்ஜினியரிங்கில், 40க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அதுகூட எந்த
குறிப்பிட்ட துறையில் இன்ஜினியர் ஆவது என்பது, மாணவர்களுக்கே தெரியவில்லை.
இது இல்லேன்னா அது, என்ற மனநிலையில் தான் உள்ளனர், மாநிலத்திலேயே அதிக
மதிப்பெண் பெற்றவர்கள்.
பள்ளிக்கல்வி நிறைவடையும் முன்பே, பொருளாதாரம் எப்படி நடக்கிறது.
எந்தெந்த தொழில்கள் அரசால், தனியார் நிறுவனங்களால், தனி நபர்களால்
நடைபெறுகிறது என்று, மாணவர்களுக்கு விளக்க வேண்டும். எந்தெந்த தொழில்கள்
அவர் சார்ந்த ஊரின், மாவட்டத்தின், மாநிலத்தின் பொருளாதார நிலைகளின்
ஆதாரமாக உள்ளது என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு விவாதங்களின் மூலமாக
கற்றுத் தரவேண்டும்.
உதாரணமாக, விவசாயத் துறையின் பொருளாதாரம் நேரடி வேலைவாய்ப்புகள், மறைமுக
வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கலாம். இதே போல, சுகாதாரம், ரயில்வே,
செய்தித் துறை, ஏற்றுமதி, இறக்குமதி, பாதுகாப்பு, கல்வி, வரிவிதிப்பு,
நுகர்பொருள், சேவை என, ஒவ்வொரு துறைகளைப் பற்றி விவாதிக்கலாம்.
ஒரு தொழில் பாதிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் அதன்
முக்கியத்துவத்தைப் பற்றியும் விவாதிக்கலாம்.இந்த விவாதத்திற்கு, வாரம் ஒரு
வகுப்பை ஒதுக்கலாம். விளையாட்டு வகுப்பை கால அட்டவணையில் மட்டுமே பார்க்க
முடிகிற நிலைமை, விவாத வகுப்பிற்கு வந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்.
நம் பாரம்பரிய கல்வியில், இது போன்று பல்வேறு தொழில் துறைகள்
குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவிக்கப்படும் பழக்கங்கள்
இல்லை. நம் நாட்டில் புகுத்தப்பட்ட, பிரிட்டிஷ் கல்வியிலும் பல்வேறு துறை
தொழில்கள், வேலைவாய்ப்புகள் மாணவர்கள் கல்விமுறை வாயிலாக தெரிந்துகொள்ள
அனுமதிக்கவில்லை.
அமெரிக்க, ஐரோப்பிய பள்ளிகளில் இரண்டு விதமான நடவடிக்கைகள் உண்டு.
இவ்விரண்டும் பள்ளிகளில் குறிப்பிட்டநாள் அன்று, பெற்றோர், தந்தையோ தாயோ,
தன் குழந்தையின் வகுப்பிற்கு வந்து, தான் செய்யும் பணி குறித்துக்
கூறுவார்.
ஆசிரியர்கள், தீ அணைப்புத் துறையினர், விஞ்ஞானி, பொறியாளர் எனப் பலர்
வந்து, தாம் செய்யும் பணி குறித்து விளக்குவர்.சில சமயம் பள்ளியே, சிலரை
அழைத்து வருவதுண்டு. இரண்டாவது நடவடிக்கையின் போது, மாணவன் தன் தந்தை, தாய்
செய்யும் பணி இடத்திற்கு, தன் பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு
கவனித்த வேலைகளைக் குறித்து, அடுத்த நாள் ஒரு கட்டுரை எழுதி வகுப்பில்
படித்துக் காட்ட வேண்டும்.
தமிழக அரசு, சமீப காலங்களில் கல்விக்கொள்கையில், பல்வேறு மாற்றங்கள்
செய்து வருகிறது. அதனோடு, இந்த இரண்டு முறைகளையும், விவாத வகுப்புகளையும்
பள்ளிகளில் கடைப்பிடிக்க, அரசு ஆவன செய்யலாம். வெளிநாடுகளில்
உள்ளவர்களுக்கு பலப் பல துறைகளைக் குறித்து, மிகச் சிறிய வயதிலேயே
தெரிவிக்கப்படுகிறது. அதிலிருந்து, அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
நம் ஊரில், இது அவ்வளவு சாத்தியம் இல்லை. இருப்பினும், சிறு
வயதினருக்கு, நம்மால் முடிந்தவரை பல்வேறு துறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.
அப்போது, தான் சிறந்த மாணவர்கள் உருவாவர்.
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment