Blogger Widgets

Total Page visits

Saturday, June 15, 2013

தில்லு முல்லு


கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளி வந்த ‘‘தில்லுமுல்லு’’ திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் ‘மிர்சி’ சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது    ‘கோல்மால்’ என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ சூப்பர் என்றால் ‘மிர்சி’ சிவாவின் ‘தில்லுமுல்லு’ சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்!

முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. ‘மிர்சி’ சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார்.

முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும்‌ டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி ‘கங்கு-லீ’ என்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் ‘தில்லுமுல்லு’ படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும்.

முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார். பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளே முருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ‘‘ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி’’ன்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும் தொற்றிக்கொள்வது ‘தில்லுமுல்லு’ படத்திற்கு மட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்!

பழைய ‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல!

கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில் வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.

லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ‘தில்லுமுல்லு’ பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்து முற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ‘ராகங்கள்-16’ பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் - ‘வென்றிருக்கிறார்’.

வேந்தர் மூவிஸ் எஸ்.மதனின் நேரடி முதல் தயாரிப்பு ‘‘தில்லுமுல்லு’’ என்றாலும், வசூல் -  ‘‘அள்ளு... தள்ளு...’’ என்றளவில் சூப்பர் டூப்பர் ஹிட்!

No comments: