மாணவர்கள் புதிய புதிய எண்ணங்களுடன் எதிர்பார்ப்புகளுடனும்
கல்லூரியை தேர்வு செய்யும் அவசரத்திலும், நினைத்த கல்லூரி கிடைக்குமா? என்ற
குழப்ப மிகுதியாலும் தவிப்புடன் வலம் வரும் காலம் தான் தேர்வு முடிவு
வந்ததிலிருந்து, கல்லூரியில் சேரும் வரை உள்ள காலமாகும். மிகவும்
குறிப்பிடத் தகுந்த எதிர்காலத்திற்கான முன் அடித்தளமாக இருப்பதும் இந்தக்
காலம்தான்.
இந்த காலத்தில் நாம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான்
எந்த ஊரில், எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்கிறோம்.
அதன் மூலம் ஒரு புதிய ஊர் அறிமுகமாகிறது. புதிய பழக்க வழக்கங்கள் கொண்ட
மாறுபட்ட பேச்சு வழக்கை கொண்ட மக்கள் அறிமுகமாகிறார்கள். சேரும்
கல்லூரியின் மூலம் புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். புதிய நண்பர்கள்
பலரும் பல ஊர்களைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக புதிய
சிந்தனைகள், கருத்து பரிமாற்றங்கள் என வாழ்க்கை புதிய ஒரு பரிமாணத்தை
காணுகிறது.
இந்த பரிமாணம் நம் வயது, அனுபவங்கள், கற்றுக்கொண்ட
தகவல்கள், செயல்பாடுகளைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த பரிமாணத்தால் நாம்
மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறோமா அல்லது மாற்றங்களின் வழி செல்லாமல்
கட்டுப்பாட்டுடன் சுய அறிவுடன் நடந்துகொள்கிறோமா என்பதை மையமாகக் கொண்டு,
நம் வாழ்க்கை எதிர்காலத்தில் அமைய வாய்ப்பிருக்கிறது. மாற்றங்கள் என்பது
எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை.
ஏனெனில் கல்லூரி வாழ்க்கை என்றவுடன் மாணவர்களுக்கு
சுதந்திரம் என்ற வார்த்தை தான் ஞாபகத்திற்கு வருகிறது. அது எல்லோருக்கும்
அமைவதில்லை, அப்படியே அமைந்தாலும் கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக
பயன்படுத்துபவர்களுக்குதான் எதிர்காலம் சிறப்பானதாக அமையக்கூடிய
வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கல்லூரி காலங்களில் காலத்தை வீணாக
பயன்படுத்தியவர்கள் கூட அதன் பிறகு தங்கள் தவறை உணர்ந்து
வெற்றியடைகின்றனர்.
எனவே, இந்த அருமையான காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி
நம்மை சீர்படுத்தும் கல்லூரியையும், நண்பர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து,
காலத்தை கணக்கிட்டு பயன்படுத்தியும் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற
முயற்சி செய்வோம்.
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment