சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக இந்தியா
முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்
வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரவிந்திர ஜடேஜா(5 விக்.,), ஷிகர் தவான்(102
ரன்) வெற்றிக்கு கைகொடுத்தனர்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த
"பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. "டாஸ்'
வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ராம்தினுக்குப் பதில், டேரன் சமி இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் இல்லை.
சார்லஸ் அரைசதம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ், கெய்ல் இணைந்து நல்ல துவக்கம்
கொடுத்தனர். "அபாய' கெய்லை (21), புவனேஷ்வர் அவுட்டாக்கினார். இதன்பின்
ஆட்டத்தை தன்கையில் எடுத்துக் கொண்டார் சார்லஸ். இவர், உமேஷ் ஓவரில்
"ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து, தனது முதல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து
அஷ்வின் பந்தையும் சிக்சருக்கு அனுப்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி, 19 ஓவரில் 102
ரன்களை எட்டியது.
ஜடேஜா திருப்பம்:
அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா "சுழல்' ஜாலம் காட்டினார். முதலில் சார்லசை
(60) வெளியேற்றிய இவர், பின் சாமுவேல்ஸ் (1), சர்வானையும் (1)
நிலைக்கவிடவில்லை. டெஸ்ட் போட்டி போல மந்தமாக விளையாடிய டேரன் பிராவோ, 83
பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
டுவைன் பிராவோ (25), "அதிரடி' போலார்டு (22) நீடிக்கவில்லை. மீண்டும்
பந்துவீச வந்த ஜடேஜா, இம்முறை சுனில் நரைன் (2), ராம்பாலை (2)
அவுட்டாக்கினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி182 ரன்னுக்கு 9
விக்கெட்டுகளை இழந்தது.
சமி அரைசதம்:
பின் அதிரடியாக ஆடிய டேரன் சமி ஸ்கோரை உயர்த்தினார். இஷாந்த் சர்மாவின்
கடைசி ஓவரில் தலா 2 சிக்சர், பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஜடேஜா ஓவரிலும் 14 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9
விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. 5வது அரைசதம் கடந்த சமி (56),
அவுட்டாகாமல் இருந்தார். "சுழலில்' அசத்திய ரவிந்திர ஜடேஜா, தனது சிறந்த பந்துவீச்சை (5/36) பதிவு செய்தார்.
"சூப்பர்' ஜோடி:
எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர்
தவான் ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் கொடுத்தது. ரோச் ஓவரில் இரு
பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா, டேரன் பிராவோ ஓவரிலும் இரண்டு
பவுண்டரிகள் விளாசினார். மறுமுனையில் இவருக்கு "கம்பெனி' கொடுத்த ஷிகர்
தவான், தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், 15வது அரைசதம் கடந்த
ரோகித் சர்மா (52) அவுட்டானார். வந்த வேகத்தில் நான்கு பவுண்டரிகள் அடித்த
கோஹ்லி, 22 ரன்கள் எடுத்தார்.
தவான் சதம்:
இரு முறை(23, 41 ரன்) "கண்டம்' தப்பிய ஷிகர் தவான், தனது இரண்டாவது
அரைசதம் கடந்தார். இவர், ரோச் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள்
அடித்தார். இந்திய அணி 35.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்த
போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்துக்கு பின் ஆட்டம் துவங்கியதும்,
பிராவோ பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான் சதம் கடந்தார். பின் போலார்டு
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்து, அணியின்
வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 39.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 236
ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான்(102 ரன், 10 பவுண்டரி, 1 சிக்சர்),
கார்த்திக்(51, 8 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் 11
ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா
முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் தோற்றதால், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை
இழந்தது. ஆட்ட நாயகன் விருதை ரவிந்திர ஜடேஜா வென்றார்.
----
கோஹ்லி "100'
கடந்த 2008ல் அறிமுகமான விராத் கோஹ்லி, 24. நேற்று 100வது ஒருநாள்
போட்டியில் பங்கேற்றார். இம்மைல்கல்லை எட்டிய 30வது இந்திய வீரர் என்ற
பெருமை பெற்றார். இதுவரை 13 சதம், 22 அரைசதத்துடன் மொத்தம் 4107 ரன்கள்
எடுத்துள்ளார்.
---
1983 உலக கோப்பைக்கு பின்...
கடந்த 1983, ஜூன் 25ல் லார்ட்சில் நடந்த உலக கோப்பை தொடரின் பைனலில்
இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சுமார் 30
ஆண்டுகளுக்குப் பின் நேற்று இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில்
மீண்டும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
----
"ஹாட்ரிக்' சதம்
தவான் ரன் மழை தொடர்கிறது. கடந்த மார்ச்சில் மொகாலியில் நடந்த
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 187 ரன்கள் விளாசினார். பின்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 114 ரன்கள்
எடுத்தார். நேற்று 102 ரன்கள் விளாசிய இவர், சர்வதேச கிரிக்கெட்டில்
தொடர்ந்து மூன்றாவது சதம் அடித்தார்.
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது
No comments:
Post a Comment