பள்ளி படிப்பை முடித்ததும், மாணவர்களுக்கு முன்னாலுள்ள பெரிய சவால்,
நல்ல கல்லூரியில் இடம்பெற வேண்டும் என்பதுதான். அது பொறியியல்
கல்லூரியாகட்டும், மருத்துவ கல்லூரியாகட்டும் அல்லது கலை-அறிவியல்
கல்லூரியாகட்டும். நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும்
என்று நினைக்கின்றனர். பெரும்பாலான கல்வி ஆலோசகர்களும் இதையே
வலியுறுத்துவது இன்றைய நடைமுறையாக உள்ளது.
நல்ல கல்லூரியில் படிக்கவில்லை என்றால், வாழ்வில் நல்ல வேலை வாய்ப்புகள்
கிடைக்காமல் போய், சுகமான வாழ்க்கையை வாழ முடியாது என்று நினைத்து
விடுகின்றனர்.ஆற்றல் உங்களுக்குள்ளே...
அனைத்தும் உங்களுக்குள்...
நல்ல கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கான போட்டி, இன்றைய நிலையில்
சாதாரணமானதாக இருப்பதில்லை. சில பெற்றோர்களும், மாணவர்களும், நல்ல கல்வி
நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் செய்ய
தயாராக உள்ளனர். ஆனால் நல்ல கல்வி நிறுவனம் மட்டுமே அனைத்தையும்
தந்துவிடாது என்பதை பல மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.
ஒரு புகழ்பெற்ற கல்லூரி என்பது மாணவர்களுக்கான சில ரெடிமேட் வாய்ப்புகளை
வைத்திருக்கலாம். ஏனெனில், பல பெரிய நிறுவனங்கள், அங்கு வந்து தங்களுக்கான
மாணவர்களை வேலை வாய்ப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.
ஒரு மாணவர் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், பலவிதமான திறன்களை
தனக்குள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மறத்தலாகாது. அதன்மூலமே, இந்த
பரந்துபட்ட உலகில் ஒருவர் எதையும் எதிர்த்து நின்று சாதிக்க முடியும்.
மாணவர்கள் தங்களின் எதிர்மறை எண்ணத்தை கைவிட வேண்டும். ஐயோ, நல்ல கல்லூரி கிடைக்கவில்லையே, அவ்வளவுதான் என்று நினைக்கக்கூடாது.
படிப்புடன் கூடிய வேலை
பாரம்பரியமாக, இந்திய மாணவர்கள், கல்லூரிகளில் படிக்கும்போது வேலை
செய்வதிலலை. பகுதிநேரம் அல்லது இன்டர்ன்ஷிப் போன்ற வாய்ப்புகளை
பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால் பட்டப் படிப்பை முடித்து
வெளிவருகையில், ஒரு மாணவர் அதிக நெருக்கடிக்கு உள்ளாகிறார். என்னதான்
சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், பணி அனுபவம் இல்லாத நிலையில், சிறந்த
வேலைவாய்ப்பை பெறுகின்ற அவரின் முயற்சியில் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, கேம்பஸ் சிறந்த கேம்பஸ் இன்டர்வியூ வாய்ப்பற்ற கல்வி
நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், இன்டர்ன்ஷிப் அல்லது பகுதிநேர பணி ஆகிய
வாய்ப்புகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
வேலைக்கான திறனை மேம்படுத்தல்
இன்டர்ன்ஷிப் வாய்ப்பிற்கு பெரிய நிறுவனங்களைத்தான் நாடிச் செல்ல
வேண்டும் என்பதல்ல. பல மாணவர்கள், பெரிய நிறுவனங்களில்தான் நல்ல
வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், பெரிய நிறுவனங்கள்
பெரும்பாலும், குறுகிய நிலையிலான வாய்ப்புகளையே வழங்கும்.
கல்லூரி படிப்பின்போது, வெறுமனே விளையாட்டு மைதானம் அல்லது உணவகத்தில்
சுற்றித் திரிவதைவிட, அந்த வட்டாரத்திலுள்ள ஏதேனும் ஒரு தொழில் நிறுவனத்தை
அணுகி நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் அவர்களுக்கு
எழும் சிக்கல்களை நீங்கள் தீர்த்து வைத்து, பிரதியுபகாரமாய், தொழிலைக்
கற்றுக் கொள்வதுடன், அனுபவச் சான்றிதழையும் பெறலாம்.
பரந்த வாய்ப்புகள்
அனைவராலுமே, உலகத்தரம் வாய்ந்த பல்கலையில் படித்துவிட முடியாது. ஆனால்
அதற்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. பல்வேறான நிறுவனங்களிடமிருந்து பெரும்
நிதியால், உலகின் புகழ்பெற்ற பல பல்கலைகள், ஆன்லைன் மூலமாக தங்களின்
பாடத்திட்டங்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
இலவசமான பாட உபகரணங்கள், இலவச விரிவுரைகள், குறிப்புகள் மற்றும்
வீடியோக்கள் ஆகியவை கிடைக்கப் பெறுகின்றன. இந்த முறையில், உங்களின் கற்றல்
திறனை சோதிக்க, தேர்வும் உண்டு. எனவே, இத்தகைய வாய்ப்புகளின் மூலமாக,
உங்களின் அறிவை நன்கு விசாலமாக்கிக் கொள்ளலாம். வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொள்வது உங்களின் கையில்.
நீங்கள்தான் தேட வேண்டும்
நீங்கள் படிக்கும் கல்லூரியானது, உங்களுக்கு தேவையான வாய்ப்புகளை
வழங்கவில்லை என்றால், அதற்கான சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேவையான
ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கான நடைமுறை பயிற்சிகளை வெளியில்தான் பெற
முயற்சிக்க வேண்டும். ஏனெனில், வெற்றிக்கான வழியானது, எப்போதுமே நேராகவும்,
எளிதாகவும் இருந்ததில்லை. தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றுவது முற்றிலும்
உங்களின் சாமர்த்தியம் சார்ந்தது. வாழ்த்துக்கள்!
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment