Blogger Widgets

Total Page visits

Monday, June 24, 2013

கூகுளின் புரட்சிகரத் திட்டம் !

பலூன்களை வானில் பறக்கவிட்டு அதனூடாக இணைய வசதியை வழங்கும் திட்டமொன்றை கூகுள் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்திற்கு ' புரொஜெக்ட் லூன்' என கூகுள் பெயரிட்டுள்ளது. சுமார் 18 மாத கால முயற்சியின் பலனே இதுவென கூகுள் தெரிவிக்கின்றது. உலகில் இணைய வசதியற்றோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இம்முன்னோடித் திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.

பலூன்களின் இதற்கு தேவையான உபகரணங்களைப் பொருத்தி வானத்தில் பறக்கவிடுவதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் உபகரணங்கள் மூலமாக 3ஜி வேக இணைய வசதியை கூகுள் வழங்க எதிர்ப்பார்த்துள்ளது. ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் உயரத்தில் இவை பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ள இத்திட்டத்தை நியூசிலாந்தில் கூகுள் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 30 பலூன்களை கூகுள் நியூசிலாந்தின் தெற்கிலுள்ள தீவொன்றிலிருந்து அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பலூனும் சுமார் 1200 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்கு இணைய வசதியை வழங்கக்கூடியது. ஈலியம் நிரப்பப்பட்ட இப்பலூன்கள் இவ்வசதியை வழங்குவதற்கு தேவையான சக்தியை ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இணைய வசதியற்றோருக்கு அதனை வழங்குவது மட்டுமன்றி, அனர்த்த நிலைகளின் போது தொடர்பாடல் சாதனங்கள் துண்டிக்கப்படும் போது இதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் கிளாஸ், ஓட்டுநர் அற்ற கார் போன்ற புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் கூகுளின் 'லெப் x' இலேயே இப் புரட்சிகர திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனூடாக இணையக் கேபிள்களை உருவாக்குதல், அவற்றை பொருத்துதல், பராமரித்தல் போன்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுமென நம்பப்படுகின்றது. உலக சனத்தொகையில் 4.8 பில்லியன் பேர் இணைய வசதியற்றவர்களாக இருப்பதுடன் , 2.2 பில்லியன் பேர் அவ்வசதியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும் இத்திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் இணையவசதியை வழங்க கூகுள் எதிர்ப்பார்த்துள்ளது ஆனாலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இதில் உள்ளன. குறிப்பாக காற்றின் வேகத்திற்கு பலூன்களால் ஈடுகொடுக்க முடியாமல் போதல், இதனால் இணைப்பு இடை நடுவே துண்டிக்கப்படுதல் போன்ற பல காரணிகளையும் கூகுள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு புது முயற்சியைப் போல இதிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. இதிலிருந்து கூகுள் மீளுமா? இத்திட்டத்தில் வெற்றி பெறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி  கம்ப்யூட்டர் தகவல்கள்

No comments: