Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள்

‘‘என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்...’’ என்று, மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு திரைப்படத்தில் பாடுவார். பண்டைய காலத்தில் இருந்து, தமிழ்நாடு எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், கல்வி வளத்தில் மிக முன்னணியில் இருந்திருக்கிறது. இதற்கு அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒன்றே போதும், அந்த காலங்களில் எவ்வளவு மேன்மையான அறிவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு. வறுமையின் கடைக்கோடியில் இருப்பவன்கூட, தன் பிள்ளை கண்டிப்பாக எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும் என்று நினைப்பான். அந்த வகையில், கல்வியில் முதலிடத்தில் இருந்தது தமிழ்நாடு என்பதை மகாகவி பாரதியார் தன் பாட்டில் எடுத்துக்கூறியிருக்கிறார். ‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் – மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’’ என்று அவர் பாடியதில் இருந்தே, கல்விக்கு தமிழ்நாடு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது நன்றாக புரியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல்–அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்றார். தான் அதிகம் படிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் எல்லோரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்து, ஊர் ஊருக்கு பள்ளிக்கூடங்களை தொடங்கி கல்விக்கண்ணை திறந்துவைத்தார். அவர் போட்டுவைத்த புள்ளிகளை தொடர்ந்து வந்த முதல்–அமைச்சர்கள் பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வண்ணமிகு கோலங்களாக ஆக்கினர்.

மாணவர்கள் முன்புபோல இப்போது இல்லை. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் அறிவு மிக விசாலமாகிவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு  போகும்முன்பே   இப்போதுள்ள குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோரால் பதில்சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றால் முன்புபோல இல்லை. எந்த பாடத்தை எடுத்தாலும், அதில் அவர்களுக்கு ஏற்கனவே ஞானம் இருப்பதால், ஆசிரியர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். தனக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தில், ஆசிரியர்கள் கரைகண்டவர்களாக இருக்கவேண்டும் என்று மாணவர்களும் எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் பெற்றோர்களும், ஏன் சமுதாயமும் எதிர்பார்க்கிறது. ஆழமான அறிவாற்றல் இல்லாத ஆசிரியர்களால், நிச்சயமாக இப்போதுள்ள காலகட்டங்களில் சமாளிக்க முடியாது. அதிலும், இந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது. இந்தச்சட்டத்தின் 23–வது பிரிவு (உள்பிரிவு 1–ன்படி) ஒன்று முதல் எட்டு வரையிலான ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு, நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகுதிகள் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக நியமனம் செய்யப்பட இருக்கும் ஒன்று முதல் எட்டாவது வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது 34,871 தொடக்கப்பள்ளிகளும், 9,969 நடுநிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நியமனம்பெற விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக பெறவேண்டும். இந்த ஆண்டு தகுதித்தேர்வை ஆகஸ்டு 17, 18–ந் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனைக்கு வரஇருக்கின்றன. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்தத்தேர்வில் எப்படியும் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, பணி நியமனத்தை பெறவேண்டும் என்ற துடிப்பில், இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்கள்போல, ஆசிரியர்கள் விழுந்து... விழுந்து... படிப்பதை காணமுடிகிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் எட்டாவது வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படிக்கப்போகும் மாணவச்செல்வங்கள், எல்லா திறமைகளையும் பெற்று, ஒளிமிகுந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை
 
 இந்த பதிவே தினத்தந்தி தினசரி நாளிதழின்  இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: