வேலை தேடுதல் செயல்பாட்டில், ரெஸ்யூம் தயாரிப்பதிலிருந்து, இறுதி
கட்டமான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது வரை, சில-பல நடைமுறைகள் உள்ளன.
உங்களது திறன்கள், ஆர்வம், தகுதிகள், சாதனைகள் போன்றவற்றை மதிப்பிடுதல்,
ரெஸ்யூமை புதுப்பித்தல் மற்றும் இன்டர்வியூ செல்லும் நிறுவனத்தைப் பற்றிய
தகவல்கள் மற்றும் நீங்கள் விரும்பும் பணிநிலையைப் பற்றிய ஆய்வு செய்தல்
போன்றவை இன்டர்வியூ செயல்பாட்டின் ஆரம்பகட்ட தேவைகள். மேலும், நேர்முகத்
தேர்வில் கேட்கப்படலாம் என்று உத்தேசமாக கருதப்படும் கேள்விகளுக்கு பதில்
சொல்வதற்கான பயிற்சியை மேற்கொள்வதும் தயாராதல் செயல்பாட்டில் அடங்கும்.
மேலும், இறுதி ஆயத்த நிலையில், ஆடைத் தேர்வு மற்றும் தோற்றப் பொலிவில்
கவனம் செலுத்துதல், இன்டர்வியூ நடக்கும் இடத்தைப் பற்றி தெரிதல் போன்ற
அம்சங்களும் முக்கியமானவை.
ரெஸ்யூம் தயாரித்தல்
ஒருவர், ஒரு நிறுவனத்திற்கு தன்னை தெளிவாகவும், சிறப்பாகவும்
வெளிப்படுத்துவதற்கு, ஆரம்ப நிலையில் பயன்படும் ஒரே கருவி ரெஸ்யூம் என்பது
பலரும் அறிந்ததே. படித்து முடித்து புதிதாக பணிக்கு வருபவருக்கும், ஏற்கனவே
பணி அனுபவம் உள்ளவருக்கும் இடைய ரெஸ்யூம் தயாரித்தலில் முக்கிய
வேறுபாடுகள் உண்டு. புதியவருக்கான ரெஸ்யூம் தயாரிப்பில், அனுபவம் பற்றி
எதுவும் எடுத்துச் சொல்ல முடியாது. மாறாக, அவர் தனது இயல்பான திறனையும்,
இன்டர்ன்ஷிப் மற்றும் ப்ராஜெக்டில் நிரூபித்த செயல்திறனையுமே வெளிப்படுத்த
முடியும். எனவே, இந்த அம்சங்களில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு, வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரெஸ்யூம் தயாரிப்பதற்கான சில சிறந்த வழிமுறைகள்
* ரெஸ்யூம் நுட்பமானதாகவும், சொல்வதை தெளிவாக சொல்வதாகவும் இருக்க
வேண்டும். பிறரது ரெஸ்யூமை அப்படியே காப்பி அடிக்கவோ அல்லது
இணையத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொள்ளவோ கூடாது. ஏனெனில், உங்களை
இன்டர்வியூ எடுப்பவர், ஒரு ரெஸ்யூம் சுயமாக எழுதப்பட்டதா? அல்லது வேறு
ஒன்றிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா? என்பதை மிக எளிதாக கண்டுபிடித்து,
உங்களின் தரத்தை மதிப்பிட்டு விடுவார்.
* ஒரு புதியவர்(Fresher) தயாரிக்கும் பணி நோக்க அறிக்கையானது, முதல் 5
வருடங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் மற்றும் தேவையற்ற விஷயங்களைத்
தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த அறிக்கையானது ஒரு தனிநபரின் தொழில்மீதான
அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எங்கிருந்தோ
எடுக்கப்பட்ட கருத்தாக இருக்கக்கூடாது.
* உங்களது ரெஸ்யூம் நீடித்த அம்சங்களையும், முடிந்தவரை பலவிதமான
பணிகளுக்கும், பலவிதமான நிறுவனங்களுக்கும் ஒத்துவரக்கூடியதாகவும்
வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* இதுமட்டுமின்றி, புதியவர்களின் ரெஸ்யூமில், தனித்திறன்களை(Extra
curricular activities) பற்றிய விவரங்கள் நல்ல முறையில்
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அனுபவங்கள் எதுவுமில்லாத
நிலையில், உங்களது தனித்திறன்கள், உங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
* அதேசமயம், இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களிடம்
பல சான்றிதழ்கள் இருக்கிறது என்பதற்காக, சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்டு
பெற்ற சான்றிதழ்களை எல்லாம் காண்பிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு செயல்முறை
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப்
பற்றி இணையதளத்தில் சென்று, முக்கிய அம்சங்கள், அதன் தயாரிப்புகள்,
நோக்கங்கள், சாதனைகள், அதன் நிறுவனர், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும்
பணியாளர் எண்ணிக்கை உள்ளிட்ட இதர விபரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள
வேண்டும். நீங்கள் சொல்லும் பதில்களில் உங்களின் சுயதன்மை பளிச்சிட
வேண்டும். உங்களது நண்பர் அல்லது உறவினர் யாரேனும் அந்நிறுவனத்தில்
பணிபுரிந்தால், அவரின் மூலமாக, அந்நிறுவன விஷயங்களைத் தெளிவாக தெரிந்து
கொண்டு, அதன்படி பதிலளிக்கலாம்.
திட்டமிடுதல்
முடிந்தால், இன்டர்வியூ நடக்கும் நாளுக்கு முன்பேயே, முடிந்தால் ஒருதடவை
அந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு வரவும். அதனால், எந்த வழியில்,
எந்த பேருந்தில் எளிதாக சென்று அடையலாம் என்ற ஐடியா உங்களுக்கு கிடைக்கும்.
மேலும், அந்த நாளில் ஏற்படும் தேவையற்ற பதற்றத்தையும் தவிர்க்கலாம்.
இன்டர்வியூ நடப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாகவே அந்த இடத்திற்கு சென்று
சேர்வது நல்லது. அங்கு சென்றபிறகு, உங்களது முகத்தை மீண்டும் கழுவி
ப்ரெஷாகி, சிறிதுநேரம் ரிலாக்சாக இருக்கவும்.
ஆடை அலங்காரம்
இன்டர்வியூ செல்லும்போது, உங்களது உடை அலங்காரம் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பது பலரும் அறிந்தது. சீரான தலைமுடி அலங்காரம், நகங்களை
வெட்டியிருத்தல், ஷேவ் செய்திருத்தல், ஷ¤ அணிந்திருத்தல் மற்றும் வாசனை
திரவியங்களை பயன்படுத்துதல் முக்கியமானவை. சற்றே சிறித்த முகத்துடன்
இருந்தால் நல்லது.
நேர்முகத் தேர்வு
உடல்மொழி
உங்களது கண்பார்வை நேர்முகத் தேர்வாளரின் முகத்தை நேரடியாக பார்த்தவாறு
இருக்க வேண்டும். நாற்காலியின் நுணியில் அமராமல், நன்கு வசதியாக நிமிர்ந்து
அமர வேண்டும். உங்களது கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டே பேசவும்.
முக்கிய கேள்விகளுக்குத் தயாராகவும்
நேர்முகத் தேர்வின்போது, ஒரு குறிப்பிட்ட பணிக்கும், உங்களுக்கும்
பொருத்தமான இசைவு இருக்கிறதா? என்று இன்டர்வியூ எடுப்பவர் உங்களை
ஆராய்வார். எனவே, இதனை உறுதிசெய்யும்பொருட்டு, அவர் சில வழக்கமான
கேள்விகளைக் கேட்பார். உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பது, ஏறக்குறைய
அனைத்து நேர்முகத் தேர்வுகளிலும் கேட்கப்படும் வழக்கமான கேள்வி. ஆனால்,
இந்த கேள்விக்கு பலராலும் சரியாக பதில்சொல்லத் தெரிவதில்லை.
இந்தக் கேள்விக்கு, உங்களது குடும்பத்தைப் பற்றி வளவளாவென சொல்லிக்
கொண்டிருக்கக்கூடாது. மாறாக, உங்களது நேர்மறை அம்சங்களைப் பற்றி அதிகம்
குறிப்பிட வேண்டும். பதில்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருப்பது
முக்கியம்.
பொதுவாக, நேர்முகத் தேர்வு முடிந்ததும், நீங்கள் ஏதேனும் கேள்வி
கேட்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த சமயத்தில் நீங்கள் தெளிவாக
இல்லையெனில், தயவுசெய்து எந்தவிதக் கேள்வியையும் கேட்க வேண்டாம். அதேசமயம்,
கேள்விகள் கேட்டால், அந்த நிறுவனத்தில் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
பற்றி எந்த கேள்வியையும் கேட்க வேண்டாம். அதுபோன்ற கேள்விகள் உங்கள் மீது
எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும். எனவே, உங்களது கேள்விகள் பணித்தன்மைகள்
குறித்தே இருக்கட்டும். நேர்முகத் தேர்வின்போது, பதட்டமாகவோ, அச்சத்துடனோ அல்லது குழப்பத்துடனோ இருக்க வேண்டாம். நல்ல தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
இக்கட்டுரையை எழுதியவர், Indian Institute of Job Training என்ற
நிறுவனத்தில் Divisional Head என்ற பொறுப்பில் இருக்கும் ஷாஜன் சாமுவேல்.
No comments:
Post a Comment