Blogger Widgets

Total Page visits

Sunday, June 2, 2013

சாப்ட்வேர் தொழிலும்,குடும்ப வாழ்வும்


“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இது இப்போதைய நடைமுறையில் கணிணி வல்லுனர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா??

கணிணி வல்லுனர்களின் குழந்தைகள்தான் தாய் தந்தை கேட்பாரின்றி தனியே வளரும் நிலைமை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது!!புரியவில்லையா??? இந்த சாப்ட்வேர் தொழில் செய்பவர்களில் பல நிறை குறைகளை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சமீப காலமாக என்னை பெரிதும் பாதித்த விஷயம் என்னவென்றால்,இந்த தொழிலால் நம் மக்களின் குடும்ப வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியது.

கணிணி வல்லுனராக பணியாற்றினால்,ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி,வெளிநாடு சென்று பணி புரியும் சந்தர்ப்பம் அவ்வப்போது வரும்.ஆன்சைட் எனப்படும் இந்த சந்தர்ப்பம் கிடைக்க வேலைக்கு சேர்ந்த புதிதில் அனைவரும் மிக ஆவலாக இருப்பார்கள்.காரணம் இந்தியாவை தவிர வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு வித்தியாசமான அனுபவம் பெறவும் மற்றும் ஆன்சைட்டில் கிடைக்கும் அதிக்கப்படியான சம்பளமும் தான். இந்த ஆவல் புரிந்துக்கொள்ள கூடியது தான். அதுவும் வெளிநாடு சென்று வருவது குறிப்பாக ஆண்களுக்கு கல்யாண சந்தையில் மதிப்பை உயர்த்தும் நிகழ்வாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. மாப்பிள்ளை கண்டிப்பாக ஒரு முறையாவது வெளிநாடு சென்றிருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே மணமகன் தேவை விளம்பரங்களில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

கல்யாணம் ஆவதற்கு முன் பெரிதாக வரவேற்கபடும் இந்த ஆன்சைட், திருமணம் ஆனதும் பல பேருக்கு தொல்லையாக அமைந்து விடுகிறது. அதுவும் கணிணி வல்லுனர்களில் பலர் இந்த சாப்ட்வேர் துறையிலே மாப்பிள்ளை/பெண் தேர்ந்தெடுப்பதால் இந்த தொல்லை இரட்டிப்பாகிறது. நான் இருக்கும் இடத்தில் என் மேலாளர் ஒருத்தரை தவிர கல்யாணமான அத்தனை பேரும் பிரம்மச்சாரிகளாக தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலாளரின் மனைவி வேலைக்கு போகாமல் இல்லத்தரசியாக இருக்கிறார்,மற்ற அனைவரின் மனைவிமார்களும் இந்தியாவில் வேலைக்கு செல்கின்றனர்.
அதுவும் இருவரும் கணிணி துறையில் உள்ளவர்கள் என்றால் இருவரும் வெவ்வேறு வெளிநாடுகளில் இருக்கும் நிலையும் பல சமயங்களில் உருவாகிறது.

திருமணம் ஆகி பல மாதங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே வாழும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு தம்பதியினர் திருமணம் ஆகி ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.கணவன் மலேசியாவில் ஆன்சைட்டில்,மனைவி சென்னையில் ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை என்ன செய்வது?? இருவரும் வேறு வேறு கம்பெனி வேறு!!

ஒரே கம்பெனியில் இருந்தால் வெளிநாட்டில் ஒரே ஊரில் மாற்றல் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் சிலரும் உண்டு. ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை, மேலிடம் வரை சிபாரிசு பெற்று , வாய்ப்பு இருக்கிறதா என்று கண்ணீல் விளக்கெண்ணை வைத்து தேடி,நண்பர்கள், மற்ற ப்ராஜெக்டில் வேலை செய்பவர்களிடம் பேசி, விவாதித்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தெரியாது, நாளைக்கே கணவனுக்கோ மனைவிக்கோ மாற்றல் ஆகி விட்டால் திரும்பவும் பிரிய வேண்டியது தான். என்றைக்கு பிரிவோமோ என்று எதிர்பார்த்துக்கொண்டே காலத்தை தள்ள வேண்டும்.

அதுவும் குழந்தை ஏதாவது பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தாய் ஒரு நாட்டில்,தந்தை ஒரு நாட்டில் என்று தாய் தந்தையரே பார்க்காமல் பாட்டியிடமும் உறவினர்களுடமும் வளரும் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஏற்கெனவே இந்த தொழிலில் குடும்பத்திற்காக நேரம் செலவிடவே முடியவில்லை என்ற பேச்சு , இதில் இந்த தொந்தரவு வேறு. இதற்கு ஒரு முடிவே இருப்பதாகவே தெரியவில்லை. வேலையில் அனுபவம் கூட கூட வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்கள் அதிமாகிக்கொண்டு தான் போகும்,அப்பொழுது மேலும் மேலும் பிரிவு தான் மிச்சம். இதில் குழந்தைகளின் நிலை என்ன என்று எனக்கு யோசிக்க தெரியவில்லை.

என்னை சுற்றி இருப்பவர்கள் இப்படி இருப்பதினால்தான் எனக்கு இப்படி தோன்றுகிறதா இல்லை உண்மையிலேயே இந்த ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்காகவே தான் சாப்ட்வேர் வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் கணிணி தொழில் செய்யும் யாரையும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவே செய்துள்ளார்.

என்னமோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.என்ன நான் சொல்வது சரிதானே?? :-)


இந்த தகவல்  என் எண்ணங்கள் எழுத்துக்களாய் எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது. 

No comments: