Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

ஆசிரியர்கள் யார்? அவர்களை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

ஆசிரியர்களின்(அவர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்களாக இருந்தாலும் சரி) தகுதி வரையறைகள் பற்றி பலகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. நாட்டின் மிக முக்கியத்துவம் கொண்ட தொழில்களில் ஆசிரியத் தொழிலும் ஒன்று. ஏனெனில் பாடப் புத்தகம் என்பதற்கு வெளியே நிதர்சன உலகைக் காட்டி, சமூகத்தனமான விஷயங்களை கற்றுக் கொடுத்து, ஒரு தலைமுறை மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையையும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்துள்ளது.

இப்போதுள்ள பெரிய பிரச்சினையே அந்த உன்னத துறையில் இருப்பவர்கள் தகுதியான நபர்கள்தானா? அல்லது புதிதாக அத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் சரியான ஆட்களா? என்பதுதான். முழு அளவில் தகுதியானவர்கள் கிடைப்பது அபூர்வம். எனவே ஓரளவாவது தகுதி படைத்த நபர்கள் ஆசிரியத் தொழிலுக்கு வர வேண்டுமெனில் என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்ற விவாதம் பல காலமாக இருந்து வருகிறது மற்றும் அதற்காக சில வழிமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன. அத்தகைய வழிமுறைகள் தகுதியான ஆசிரியர்களை உருவாக்கப் போதுமானதா? அல்லது இன்னும் சில அம்சங்களை சேர்க்க வேண்டுமா? என்பதை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், மேல்நிலைக் கல்வியை முடித்தப்பிறகு 2 வருட டிப்ளமோ(ஆசிரியர் பயிற்சி) படிப்பு இருக்கிறது. பட்டப்படிப்பை முடித்தவுடன் பி.எட். படிப்பு இருக்கிறது. இந்த இருவகைப் படிப்புகளிலும் இன்டர்ன்ஷிப் உண்டு. முதுநிலைப் பட்டம் முடித்திருந்து, பி.எட். மற்றும் எம்.எட். முடித்திருந்தால் ஒருவர் பள்ளியின் மேல்நிலைப் பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுவார். டி.ஆர்.பி. என்றொரு தேர்வுமுறை பள்ளிக் கல்வி முறையில் இருந்தாலும் அந்தத் தேர்வுமுறை முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. அது விஷயத்தில் ஒவ்வொரு அரசும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஒரு அரசு டி.ஆர்.பி. தேர்வு வைத்து, அதனடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தால், இன்னொரு அரசோ, சீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்தவர்களுக்கும் டி.ஆர்.பி. தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அது நடத்தப்படவில்லை.

அதேசமயம் மத்திய அரசு பள்ளிகளுக்கு(நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்றவை) ஆரம்பநிலை ஆசிரியராக ஆகவேண்டும் என்றாலே, அதற்கு பி.எட். பட்டம் தேவை என்ற நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளுக்கு பி.எட். பட்டதாரிகள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அதை எதிர்த்து, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இது வேலை வாய்ப்பு உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் போய்விடுகிறது.

கல்லூரி பேராசிரியர் என்ற வகையில், முன்பெல்லாம் முதுநிலைப் பட்டம் படித்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்தது. பின்னர் எம்.பில். பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி சேர்க்கப்பட்டது. எம்.பில். பட்டதாரிகளின் எண்ணிக்கைப் பெருகப் பெருக, நெட்\ஸ்லெட் அல்லது பிஎச்.டி. கட்டாயம் வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. இந்த தகுதி நிலைகளில், எம்.பில். பட்டதாரிகள் எத்தனை பேர் 'நெட்' தேர்வை தேர்வு செய்கிறார்கள் என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது. கடின உழைப்பில் ஆர்வமும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் மட்டுமே நெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற முடிவை எடுக்கின்றனர். அப்படி முடிவெடுப்பவர்களில், விடாமுயற்சியுடனும், நம்பிக்கையுடனும் தொடர்ச்சியாக உழைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் பொதுவில், கடின உழைப்பை மேற்கொள்ள தயாராக இல்லாதவர்கள், பி.எச்.டி. படிப்பை தேர்வு செய்கிறார்கள்.

எனவே இதுதொடர்பாக குரல் எழுப்பும் ஒரு தரப்பார், 'கடின உழைப்பு இல்லாத, பணம் செலவழித்து, கைடு மனம் கோணாமல் நடந்துகொண்டால் சில வருடங்களில் பெறக்கூடிய பிஎச்.டி. பட்டத்தை, நெட் தேர்வுக்கு மாற்றாக வைக்கக்கூடாது' என்கின்றனர். ஆனால் இதற்கு பதிலளிக்கும் இன்னொரு தரப்பாரோ, 'பிஎச்.டி. என்பது எளிதல்ல. அதிலும் கடின உழைப்பு உள்ளது' என்கின்றனர்.

இவர்கள் சம்பந்தப்படாத மூன்றாம் தரப்பாரோ, கடினமாக படித்து நெட் தேர்வில் தேறி, ஆசிரியராக வருபவர்க்கும், பிஎச்.டி. முடித்து வருபவர்களுக்கும், வகுப்பறையில் சிறப்பாக பாடம் நடத்தும் திறன் அமைந்துவிடுமா? என்கின்றனர். இதே தரப்பார்தான், பி.எட்., எம்.எட். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளின் தரத்தையும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு தகுதியான ஆசிரியரை உருவாக்க வேண்டுமெனில், வேறு பல சிறந்த பயிற்சிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். பி.எட். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளில் இருக்கும் இன்டர்ன்ஷிப் போன்ற பயிற்சிகள் போதாது என்கின்றனர்.

ஆசிரியர்களுக்கு காலத்திற்கேற்ப ஏற்படும் அனுபவங்கள் மட்டுமே போதாது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் எந்த தொழிலுமே வாழ்க்கைக்கான ஒரு உயிர்வாழ் ஆதாரமாக உள்ளதே தவிர, ஒரு ஆத்ம திருப்தியான விஷயமாக பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனெனில், இந்த உலகில் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையே இருப்பதால், சம்பந்தா சம்பந்தமில்லாதவர்கள், சம்பந்தமே இல்லாத தொழிலுக்கு செல்கிறார்கள். இந்நாட்டில், ஆசிரியர் தொழிலானது, அத்தகையதொரு மோசமாக ஆக்ரமிப்பில் நெடுங்காலமாகவே சிக்கியுள்ளது. ஆசிரியப் பணி என்ற உன்னதப் பணிக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்கள் இன்று அத்தொழிலின் மாண்பையே கெடுத்து வருகின்றனர்.

இன்று பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், சாதி உணர்வை மாணவர்களிடம் வெளிப்படுத்துபவர்களாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும், குடும்ப பிரச்சினையால் உண்டாகும் கோபத்தை சிறிய மாணவ-மாணவிகளின் மீது கடும் வன்முறையாக பிரயோகிப்பவர்களாகவும், சம்பள உயர்வையே குறியாக கொண்டவர்களாகவும், ஒழுங்காக வகுப்பிற்கு வந்து பாடம் எடுக்காதவர்களாகவும், அரசு வேலை தவிர்த்த தனியான வேறு தொழில்களில் முதலீடு செய்து, பள்ளியில் முறையாக பணியாற்ற வேண்டுமே என்ற கவனமின்றி, தங்களின் தொழிலுக்கே பிரதான முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் உள்ளனர்.

கல்லூரி பேராசிரியர்களை எடுத்துக்கொண்டால், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், தனது ஆசிரியப் பணி தவிர்த்து, தனியாக வேறு தொழில் நடத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, பெரும்பாலானோர் தனித் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் பணி செய்தால் போதும் என்ற நிலையிருந்தும், அதைக்கூட செய்ய மனமின்றி, கல்லூரிக்கே ஒழுங்காக வராமல், வேறு வேலையில் ஈடுபடுபவர்கள் பலர் உள்ளனர். அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் பலர், யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நினைப்பில் தங்களின் இஷ்டத்திற்கு நடந்துகொள்கிறார்கள். இலக்கியத் துறை பேராசிரியருக்கு, எந்த இலக்கியத் திறனும் இருக்காது. வரலாற்றுத் துறை ஆசிரியருக்கு ஆழமான வரலாற்றுப் பார்வை இருக்காது, அறிவியல் துறை ஆசிரியர்ளுக்கு அத்துறை சார்ந்த உந்துதல்கள் இருக்காது. ஆனால் இவர்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பில் இருப்பார்கள். தங்களிடம் ஒத்துப்போகாத மாணவர்களை, பிராக்டிகல் மதிப்பெண் போன்ற விஷயங்களில் பழிவாங்கும் ஆசிரியர்களும் உண்டு. கேள்வி கேட்டாலே கோபம் வரும் ஆசிரியர்களும் உண்டு. துடிப்பான மாணவரைக் கண்டாலே எரிச்சலடையும் ஆசிரியர்களும் உண்டு.

எனவே ஆசிரியர்களாக தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பல்வேறான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் ஒருமுறை மீண்டும் மீண்டும் முறையான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன்கள் பட்டைத் தீட்டப்பட வேண்டும். மேலும், கால மாறுதல்களுக்கேற்ப, பலவகை வகுப்பறை சார்ந்த பயிற்சிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்பட வேண்டும்.

அதேசமயம் இனிமேல் புதிதாக இத்துறையில் நுழைபவர்களை வடிகட்ட வேண்டியிருக்கிறது. மிக எளிதான முறையில் பட்டங்களைப் பெற்றுவிட்டு, அதன்மூலம் இடஒதுக்கீடு முறையிலோ, சீனியாரிட்டி அடிப்படையிலோ ஆசிரியத் தொழிலுக்குள் வரும் முறை தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பொருத்தமான கைடு பிடித்து, பணம் செலவழித்து பிஎச்.டி. பட்டம் பெற்று உள்ளே வருபவர்களும் தடுக்கப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி என்ற இரு நிலை ஆசிரியர்களுக்கும் 'நெட்' போன்ற கடினமான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும். அதில் தேறுவதன் மூலம்தான் அவர்கள் உள்ளே நுழையும் நிலை இருக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற நிலை இருக்கும்போதுதான், அத்துறையை மிகவும் விரும்புபவர்கள் மட்டுமே முயற்சி செய்து தேர்வெழுதி, ஆசிரியர்களாக பணியில் சேர்வார்கள். ஏதோ ஒரு 'வேலை' கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களும், ஆசிரியர் தொழில் அதிக விடுமுறை உள்ள சிரமமற்ற தொழில் என்று நினைப்பவர்களும் ஒதுங்கிக் கொள்வார்கள். அதேசமயம், இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டு வருவதால், இதுபோன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கா வண்ணம் அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பலகோடி பேருக்கு கல்வி கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கும் இந்நிலையில், இதுபோன்ற கடினமான வழிமுறைகளை அமல்படுத்தினால், ஆசிரியத் தொழிலுக்கு கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்பது பலரின் நியாயமான கேள்விதான். இந்நிலையைப் போக்க வேண்டுமெனில், பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களிலேயே தேவையான மாற்றங்களை செய்து, ஆசிரியர்களாவதற்கு இயல்பிலேயே ஆர்வம் உள்ள மாணவர்களை, தயார் செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்கள் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பிற சவால்களை எளிதாக சமாளிப்பார்கள்.

மேலும், நுழைவுத்தேர்வு எழுதி தேறினால் மட்டும் போதாது, வகுப்பறையில் அவர்கள் வெற்றிகரமான ஆசிரியர்களாக செயல்படுவதற்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். ஆசிரியத் தொழிலானது, ஒரு தியாகமிக்க, பேரார்வம் தேவைப்படுகின்ற, சமூக அக்கறைக் கொண்ட, இளைய தலைமுறைகளின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டில் இயற்கையாகவே பற்று கொண்ட, நன்னடத்தையுள்ள, கற்பனை வளமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட, உலகியல் அறிவுகொண்ட, பொறுமையுள்ள, சகிப்புத் தன்மையுள்ள, சுயநலமற்ற நபர்களுக்கான ஒரு தொழில். எனவே, இத்தகைய தொழிலுக்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவித கடினமான வரைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால்தான், எதிர்கால தலைமுறைகள் தப்பிப் பிழைக்கும்.

இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: