ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு
சேர்ந்திருங்கள், சமுதாயத்தோடு சேர்ந்திருங்கள், இந்த உலகோடு
சேர்ந்திருங்கள், தனித்தீவில் குடியிருக்க நாம் துறவிகளல்ல, மற்றவர்களின்
உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களோடு மக்களாக வாழும் வாழ்வில்தான் ஒரு
முழுமை இருக்கும், தேவையற்ற தனிமைகளை தவிர்த்திடுங்கள், குறைந்த பட்ச்சம்
மனைவியோடாவது சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.
ஊராரின் ஆதரவு, தோழ் கொடுக்கும் தோழர்கள், கை கொடுக்கும் காதலி என்று
உறவுகளோடு ஒட்டி வாழ்கிறவன் மனதை ஒரு படி மேலே வைத்திருப்பான், அதில்
சுறுசுறுப்பும் வேகமும் தானாகவே குடி கொள்ளும், வெளிச்சத்துக்கு வராமல்
தனியே இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவனின் மனம் ஒருபடி பின்தங்கியே
இருக்கும், அதில் அதிக வெறுமை குடிகொண்டிருக்கும், ஏக்கங்கள்
நிறைந்திருக்கும், மனதில் ஒரு முழுமை இருக்காது எனவே சேர்ந்து வாழுங்கள்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தங்களுக்கென்று ஒரு தனியுரிமை இருக்கிறது, அதை
தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், மனம் தனிமையை தேடும் போது அதையும்
முழுசாக அனுபவியுங்கள், ஆனால் தனிமையே போதும் என்ற முடிவிற்கு வர வேண்டாம்,
வாழ்க்கையை நன்கு வாழ்ந்தவர்கள் பின்னர் வாழ்வை இன்னொரு கோணத்தில்
அனுபவிக்க நினைப்பர் அவர்கள் தனிமையை மேற்கொள்வது வேறு விஷயம், கோடி
ஆசைகளையும், ஏக்கங்களையும் வைத்துக் கொண்டு இப்போதே தனித்திருந்தால்
அந்நிலை உங்களை பாதிக்கும்.
மக்களோடு மக்களாக சேருங்கள், மனம் விட்டு பேசுங்கள், அன்பை பரிமாறிக்
கொள்ளுங்கள், நாட்டு நடப்புகளை விவாதியுங்கள், அநீதிகளை எதிர்த்து குரல்
கொடுங்கள், எதாவது ஒரு அமைப்பில் உங்களை இணைத்து அதில் ஆர்வம் காட்டுங்கள்,
ஆனால் சேரக்கூடாதவைகளில் சேராதீர்கள், கூடா நண்பர்களோடு கூடாதீர்கள்,
எதையும் தரம் பிரித்து இயல்பானதுதான் என்று உறுதி செய்த பின்னரே அதில்
உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இனிமையான பருவம் என்று சொல்வது, பள்ளி அல்லது
கல்லூரி பருவத்தைதான் அங்கேதான் பலரோடு சேர்ந்திருக்க முடிகிறது, அதன்
பிறகு அவரவர்கள் தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பிக்கும் போது, தனிமையை
உணர்கிறார்கள், ஆனால் அப்போதும் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்திருக்க
கற்றுக் கொண்டால், தனிமை ஓடி விடும், புதிய உறவுகள், வரவுகள் எனும்
போதுதான் மனம் மலர்ச்சியடையும்.
வெளியில் இறங்கி நடந்தாலே, பிரச்சனைதான் வருகிறது நம் பாட்டிற்கு இருந்து
விட்டால் தொல்லையில்லாமல் வாழலாம் என்று நினைப்பவர்கள் பிரச்சனைகளை
எதிர்கொள்ள தைரியமிலாதவர்கள், எதிலும் தலையிடாமல் உன்பாட்டிற்கு இரு என்று
எந்த வேதமும் சொல்லவில்லை, நமக்கு தேவையென்றால் பிரச்சனைகளையும் தாண்டி அதை
அணுக தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் நான்கு பேருக்கு தெரியும்படி
நாமும் எதையாவது செய்ய முடியும்.
இன்று குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லை, எப்படி நண்பர்களை
சேமிப்பார்கள், நகர வாசிகளுக்கு வீடுதான் உலகமாக இருக்கிறது, அங்கே
வெளியாட்களை நம்பவும் முடியவில்லை எப்படி மற்றவர்களோடு
சேர்ந்திருப்பார்கள், ஆனாலும் தங்கள் சூழலை அனுசரித்து சேர்ந்து வாழக்
கற்றுக்கொள்ள வேண்டும், ஒரே வீட்டிலாவது பிரிவினையில்லாமல் மனைவி,
பிள்ளைகளென்று சேர்ந்து வாழ வேண்டும் அதையும் கோட்டை விட்டவனை பாவப்பிறவி
என்றே சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment