தோசை இயந்திரத்தை கண்டுபிடித்த, 21 வயது கல்லூரி மாணவன், ஈஸ்வர்: நான்,
சென்னையில் உள்ள, எஸ்.ஆர். எம்., பல்கலை கழகத்தில், கல்லூரி மாணவனாக
படிக்கிறேன். ஒரு முறை, நண்பர்களோடு டில்லிக்கு சுற்றுலா சென்றிருந்தேன்.
அப்போது, காலை உணவிற்காக உணவகத்திற்கு சென்று, தோசை மற்றும் பர்கர் ஆர்டர்
செய்து சாப்பிட்டோம். சாப்பிட்டதற்கான விலையை செலுத்தும் போது, ஒரு பர்கர்,
30 ரூபாய் ஆனால், தோசை விலையோ, 100 ரூபாய். தோசை விலைக்கான காரணத்தை
கேட்டேன்.
"தோசை செய்ய ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, டில்லியில் அதிக கூலி
கேட்கின்றனர்; ஆனால், பர்கரை இயந்திரம் மூலம் தயார் செய்வதால், 30 ரூபாய்
என்ற குறைந்த விலைக்கே, விற்பனை செய்ய முடிகிறது' என்றனர்.
தோசை
செய்வதற்கு, இயந்திரம் இல்லாததே அதிக விலைக்கான காரணம் என்பதால், அன்று
முதல், எப்படியாவது தோசைக்கான இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்
ஏற்பட்டது. இயந்திரத்தை உருவாக்க, செயலில் இறங்கிய போது, அதிக பணம்
தேவைப்பட்டது. கல்லூரி நிர்வாகமே, என் கண்டுபிடிப்பை பாராட்டி இயந்திரம்
தயாரிக்க, 1.2 லட்சம் ரூபாய் பண உதவி செய்தது. சொலினாய்டு வால்வுகள்,
டெப்லான் மற்றும் ஸ்டீலாலான தோசைக்கல் மூலம் இயந்திரத்தை உருவாக்கினேன்.
இது மின்சாரத்தால் மட்டுமே இயங்கும். சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம்
இயங்கும் வகையில், தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. இரண்டரை கிலோ தோசை மாவு,
அரை லிட்டர் எண்ணெய், தண்ணீர் என, மூன்று பாத்திரத்தில் தனித்தனியாக ஊற்றி
இயந்திரத்தின் பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். தானாகவே தண்ணீர் மூலம்
தோசைக் கல்லை சுத்தப்படுத்தி, மாவு மற்றும் எண்ணெய் ஊற்றி, ஒரு
நிமிடத்தில், 20 தோசையை எளிதில் தயாரித்து விடும். இந்த இயந்திரத்தின்
மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய். விலை அதிகம் என்பதால், கார்பரேட் மற்றும் பெரிய
உணவகங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
விரைவில், குறைந்த விலையில், வீடு
மற்றும் கடைகளில் பயன்படுத்தும் வகையில், இயந்திரத்தை தயாரிப்பேன்.
No comments:
Post a Comment