Blogger Widgets

Total Page visits

Wednesday, May 1, 2013

சூது கவ்வும் விமர்சனம்

நலன் குமரசாமி குறும்பட உலகில் ஒரு ஸ்டார் இயக்குநர். அவரது ஆரம்ப கால குறும்படங்களில் நாங்க டீம் நிஞ்சா.. இப்பதான் சினிமா கத்துக்குறோம் தப்பா எடுத்தா கண்டுக்காதீங்க என அடக்கமாய் எடுத்திருந்தாலும் அவற்றில் ஒரு தரம் இருந்தது. அந்த நலன் இப்பொது நன்றாக தன்னை தயார்படுத்திக்கொண்டு எடுக்கும் முழு நீள திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ஒரு பக்கம்.

சூது கவ்வும் படத்தில் முதல் டிசைனிலிருந்து 'காசு பணம் துட்டு மணி' பாடல் காட்சிவரை ஒவ்வொரு ஸ்டெப்பாக ஆச்சர்யத்தை கிளப்பிய கிரியேட்டிவிட்டி இன்னொரு பக்கம்.

இப்படி ஒரு தரமான படத்தை எதிர்பார்த்துத்தான் சென்றேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார் நலன். இந்த அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கவில்லை.

எந்த விதத்திலும் ரிஸ்க் எடுக்காமல், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் சொகுசாய் ஆட்களை கடத்தி காசு சம்பாதிக்கும் பிஸினெஸ்மேன் விஜய் சேதுபதி. இவர் இன்னும் சில பேரை சேர்த்துக்கொண்டு கடத்தல் வேலைகளை செய்ய அதன் தொடர்ச்சியாய் இன்னொரு வேலை வர, அதை செய்யப்போய் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கரு.

கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் நலன் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றிக்கான பிள்ளையார் சுழியாய் இருந்திருக்கவேண்டும்.

மேலும் ஒரு திரைக்கதை எழுத்தாளராய் நலன் பின்னிப்பெடலெடுக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அழகாய் செதுக்கி, சொல்ல வேண்டியதை சொல்லி, அதை காமெடியாக்கி ரசிக்கவைத்து, அதே நேரத்தில் பர்பார்மென்ஸ்கும் ஸ்கோப் குடுத்து என எல்லா விதங்களிலும் கவனமாய் கையாண்டிருக்கிறார்.
காட்சிக்கு காட்சி எதாவது விதத்தில் சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் டாப் க்ளாஸ். கடைசி காட்சியில் அந்த அடி உதையின் உச்சகட்ட வேதனையில் இதுதான் இருட்டறையில் முரட்டுக்குத்தா என கேட்டு சிரிக்கும் காட்சி இருக்கிறதே.. தியேட்டரே அதிர்கிறது.

விஜய் சேதுபதி.. இந்த வருடத்தில் அதிகம்பேர் பொறாமைப்படக்கூடிய நடிகர். எப்படித்தான் இந்தாளுக்கு மட்டும் இப்படி மாட்டுதோ என பலர் வியத்தாலும், இனி மேல் இந்த குறும்பட இயக்குநர்கள் தான் இன்டஸ்ட்ரியை ஆட்டிவைக்கப்போகிறார்கள் என ஏதோ ஒரு விதத்தில் யூகித்து அவர்களை மதித்து, நட்பாகி, நெருக்கமாகி தன்னை உருவாக்கிகொண்ட அவரது புத்திசாலித்தனம் கலந்த எளிமைத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த தொடர் வெற்றிகள்.

இந்தப் படத்தில் தாஸ் என்ற ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் விளையாடுகிறார். ஹீரோயிசம் என்றால் கிலோ எவ்வளவு என கேக்கும் அளவுக்கு கொஞ்சம் அசட்டுத்தனமும், நேர்மையும் கலந்த ஒரு ப்ராடாய் வருகிறார். கூடவே ஒரு காதலியையும் கூட்டிக்கொண்டு அலைகிறார் பாருங்கள்... சிரிப்பு மூட்டும் வசனங்களோ அல்லது பாடி லாங்வேஜோ இல்லாமல் எல்லோரையும் சிரிக்க வைப்பது சாதாரண விசயமில்லை. சிறப்பாக எழுதப்பட்ட காட்சியும், அதை உணர்ந்து வெளிப்படுத்தும் நடிப்பும் மட்டுமே அத்தகைய ரிசல்டை கொடுக்கும்.

இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்களில் சிம்ஹா, ரமேஷ்,அசோக் மற்றும் கருணா. சிம்ஹாவின் இயல்பான வெகுளித்தனமான முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் வெகுவாய் கைகொடுக்கிறது. இவர்கள் அணைவருக்கும் இந்தப் படம் ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும்.

அதே போல முரட்டுத்தனமா போலிஸ் அதிகாரி பிரம்மா, படம் எடுக்கும் டாக்டர் ரவுடியாய் தாஸ் என எவருமே சளைக்காமல் கலக்கியிருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையே முரட்டுக்காட்டில் ஒரு பூங்கொத்தாய் சஞ்சிதா ஷெட்டி.. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கதாநாயகி ரோல். களையாய் கலகலப்பாய் இருக்கிறார்.

சென்னை 600028 பார்த்தபோது ஒரு ஃப்ரெஷ்ஸா இருந்த்தல்லவா.. அதே போல இந்தப் படமும் ரொம்ப ஃப்ரெஷ்ஸாக இருக்கிறது.

ஒரு நல்ல படம்னா அது இப்படித்தான் இருக்கும் என நாம் வைத்திருக்கும் ஒரு கணக்கையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிய கருத்தோ, மனதை தொடும் சம்பவங்களோ இல்லை. கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்க முடியாது. ஆனாலும் எல்லா இடத்தில் என்ஜாய் பண்ண முடியும் என மிகததிறமையாய் எழுதப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படத்தின் நிஜ ஹீரோ.

அதே போல இன்னொரு முக்கியமாய் குறிப்பிட வேண்டிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குநர் எந்த அளவுக்கு காட்சிகளில் புதுமையை கொண்டுவருகிறாரோ அதே அளவுக்கு இசையிலும் இவர் ஜமாய்க்கிறார். இவரது இசை படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை.

ஒளிப்பதிவாளர் தினேஷும் நிறைவாய் செய்திருக்கிறார் தன் பணியை. அட்டகாசமான திரைக்கதை, அதற்கேற்ற நடிகர்களின் தேர்வு, அவர்களின் கச்சிதமான நடிப்பு.. ஒரு தேர்ந்த இயக்குநருக்கான லாவக்கத்துடன் இயக்கம் என படம் நம்மை அசரடிக்கிறது. இது முழுக்க முழுக்க நலன் குமரசாமியின் ஷோ. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் வரிசையும் உடனடியாய் சேர்ந்துவிடும் அத்தனை தகுதிகளும் இவருகிருக்கிறது. அவரையும், அவரைக் கண்டெடுத்து இயக்குநராக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த பதிவு www.soundcameraaction.com எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரபடுகிறது. இணைப்பை சொடுக்கி வலை பக்கத்துக்கு செல்லலாம். நன்றி 

No comments: