Blogger Widgets

Total Page visits

Monday, May 27, 2013

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்-6 (ஹாலிவுட்) - விமர்சனம்

இருண்ட திரையில் விர்..விர்..விர்.. என்ற சத்தம். திரையரங்கம் முழுவதும் நிலநடுக்கம் வருவது போன்ற ஒரு அனுபவம். இருள் போய் வெளிச்சம் வர இரண்டு கார்கள், குறுகிய ஹேர்பின் பாயிண்ட் வளைவுகளில், அங்கே வியக்க வைக்கும் கார் ரேஸ்.  முதல் காட்சியில் வைத்த கண் வாங்காமல் பார்த்த விழிகள் படம் முழுக்க விலகவில்லை. தலைப்புக்கேற்றார் போல் அதீத வேகம்.  இயற்பியல் புவிஈர்ப்பு விதிகளை பொய்ப்பித்துக் காட்டும் சண்டைக் காட்சிகள், பார்ப்போரை ஏங்கவைக்கும் அதி நவீன ஸ்போர்ட்ஸ் கார்கள், ஸ்வாரஸ்யம் குறையாத ஆக்ஷன் சரவெடி.

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள படமிது.  கடத்தலுக்கு முட்டுக்கட்டை போட்டு மறுவாழ்வு வாழப் பார்க்கும் விண்டீசல் அண்ட் கோவினர்.  தங்கை குடும்பத்துடன் வாழும் விண்டீசலை பார்க்க வரும் யூ.எஸ்.டிப்ளமாடிக் செக்யூரிட்டி சர்வீஸ் ஏஜென்ட் டுவைன் ஜான்ஸன். ரஷ்யாவில் உள்ள மிலிட்டரி படைகளை அழிக்கும் ல்யூக் ஈவான்ஸ் குழுவினர்.  ‘பாம்பின் கால் பாம்பறியும்‘  ல்யூக் ஈவான்ஸ் குழுவை, விண்டீசலால் தான் பிடிக்க முடியும் என்ற நோக்கத்தில் விண்டீசலின் துணையை நாடுகிறார் டுவைன் ஜான்ஸன்.

முதலில் இந்த வேலையில் நாட்டம் காட்டாத விண்டீசல் தன் காதலி வில்லன் படையில் சேர்ந்த உண்மையை அறிய களத்தில் இறங்குகிறார்.  மின்சாரத்தை அழிக்கும் சாதனம் ஒன்றை கண்டறியும் நோக்கத்தில் பல உபரிபாகங்களை ஒவ்வொரு நாடாக சென்று திருடுகிறார் வில்லன் ல்யூக் ஈவான்ஸ்.  இவரைப் பிடித்துத் தரும் பட்சத்தில் விண்டீசல் அண்ட் கோ மீதுள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாக ஜான்சன் வாக்களிக்கிறார். விண்டீசல், பால் வாக்கர் என அனைத்துக் குழுவும் கூடுகின்றனர்.  இதற்குப் பிறகென்ன?  சூடான சடுகுடு ஆட்டம்தான்.

பெண்கள் மென்மையானவர்கள் என்று உரைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.  ப்பா!! படத்துல வர ஒவ்வொரு பெண்ணும் என்ன அடி அடிக்கிறாங்க!! முடியைப் பிய்த்துக்கொண்டு கடித்து அடித்து அமர்க்களப்படுத்தும் இவர்களின் அட்டகாசம் ரசிகர்களை ஓ போட வைக்கிறது.  அடடே படத்தில் தான் எத்தனை விஜய்சாந்திகள்!!

மொட்டையடித்து மலை மலையாக ஆட்கள். நாயகன் யார் வில்லன் யார் என்று வித்தியாசம் கண்டுபிடிப்பது அறிது. கதை பெரிதாக ஒன்றும் இல்லை, ஒன்றரை மணிநேரத்திலே கூறியிருக்கலாம்.  இந்த பிரியாணிக்கு மேலும் மசாலா சேர்க்க பல சண்டைக் காட்சிகள் வைத்து இரண்டரை மணிநேரம் நீடிக்க வைத்துள்ளனர்.

லண்டன், மாஸ்கோ, ஸ்பெயின் என்று நாடு நாடாக பயணிக்கும் க்ரிஸ் மார்கனின் திரைக்கதை ஒருபுறம், குறுகிய சந்து, நெரிசலான சாலைகள், மலை வளைவுகளில மலைக்க வைக்கும் ஒளிப்பதிவு மறுபுறம்.  இவ்விரண்டுடன் லூகாஸ்விடலின் பின்னணியும் சேர்ந்து வேகத்தின் சிகரத்தைத் தொட்டுள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் டிரான்ஸ்போர்டர் வீரர் ஜேசன் ஸ்டேதம் வருவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இந்தப் பட்டியல் தொடர்வதற்கான பிள்ளையார் சுழியை க்ளைமாக்ஸ் போட்டுள்ளது.

நம்மவூர் கதாநாயகர்கள் படத்திற்குப் போனது போல் திரையரங்கு முழுவதும் கைத்தட்டல், விசில் என ஒரே ஆரவாரம். சொல்ல முடியாது...நம்ம ஊர்ல விண்டீசலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல.  கார்லே பறந்து போய் காத்துல நாயகியைக் கவ்விப் பிடிக்கும் இவரது ஆக்ஷன் சீக்வன்ஸ் ரொம்பவே டூ..மச். லாஜிக்கிற்கும் இப்படத்திற்கும் ரொம்பவே தூரம். 

படம் பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியேறும் நபர்களின் வாகன சீற்றம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மொத்தத்தில், "பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்" யதார்த்தத்தை புதைத்தாலும் கதாபாத்திரங்களின் தோரணையால் பாக்ஸ் ஆபிஸை நெத்தியடி அடிக்கிறது.  

நன்றி தினமலர் 

No comments: