புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் 
கல்லூரியில் தமிழ்த்துறை துணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் 
மு. இளங்கோவன். ‘ இணையம் கற்போம்’ இவரது சமீபத்திய நூல். இவருடைய தமிழ்ப் 
பணியைப் பாராட்டி இந்திய அரசு, செம்மொழி இளம் அறிஞர் என்ற விருதையும் 
ரூபாய் ஒரு லட்சம் பண முடிப்பும் கொடுத்து கௌரவித்தது. இணையம் வழி தமிழ் 
வளர்ச்சிக்காகப் பல கல்லூரிகளில் பயிலரங்கங்கள் நடத்தி வருவதுடன், தமிழ் 
சார்ந்த பல வெளிநாட்டு கருத்தரங்கங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.  ஆழம் 
இதழுக்காக எஸ்.சம்பத் மேற்கொண்ட நேர்காணல்.
இணையத்தில் வலைப்பூக்கள், 
வலைத்தளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்திருக்கிறது. ஒருவர், 
தாம் நினைத்ததை சுலபமாக எழுதிவிடமுடிகிறது. அதைப் பல்லாயிரம் பேர் 
படிப்பதும் இப்போது சாத்தியம். இந்த சுதந்தரம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
இணையத்தில் வலைப்பூக்களை உருவாக்கிப் 
பயனுள்ள செய்திகளைப் பலர் எழுதி வருகின்றனர். இது வரவேற்கப்படவேண்டிய 
ஒன்றாகும். அவரவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் 
எழுதி வைப்பதால் இணையத்தில் ஒரு துறை சார்ந்த செய்திகளைத் தேடும்பொழுது 
உபயோகமாக இருக்கும். இன்றைய உலகமயச் சூழலில் கருத்துகளும் உலகமயமாகி 
வருகின்றன. இந்த நிலையில் இதனை எழுத வேண்டும், இதனை எழுதக்கூடாது என்று 
யாரும் தடைபோடக்கூடாது. மிகப்பெரும் ஊடகங்கள் உண்மைச் செய்திகளை 
இருட்டடிப்புச் செய்யும் சூழலில் வலைப்பூக்களின் தேவை இன்று 
அவசியமானதாகின்றது.
புகழ்பெற்ற ஊடகங்கள் ஒவ்வொன்றும் அரசியல் 
சார்புடைய செய்திகளையே வெளியிடுகின்றன. ஈழப்போரின் போதும் கூடங்குளம் 
போராட்டத்தின் போதும் உண்மைச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்த போது 
வலைப்பூக்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்தான் செய்திகளை 
மக்களுக்குக் கொண்டுசேர்த்தன.
புகழ்பெற்ற ஊடகங்களைச் சார்ந்திராமல் 
இணையதளங்களின் வழியாகச் செய்திகளை வெளியிடுவதால் செய்திகள் கட்டற்றுப் 
பரவுகின்றன. இணையத்தில் வெளிவரும் செய்தி கிராமம் நகரம் வேறுபாடு இல்லாமல்,
 படித்தவன் படிக்காதவன் வேறுபாடு இல்லாமல், உள்நாடு வெளிநாடு என்று 
வேறுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் பரவிவிடுகின்றது. இணையத்தைப் பொறுத்தவரை
 தூரம் என்பது 0 கி.மீ. உலகம் முழுவதும் இருக்கும் மக்களிடம் ஒரு செய்தியை 
மிக எளிதாகச் சேர்க்க இணைய சுதந்தரம் பயன்படுகின்றது. அதே சமயம்,பலர் இணைய 
சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது.
ஆனால், கேளிக்கைகள்தான் இணையத்தில் அதிகரித்திருப்பதுபோல் தோன்றுகிறதே?
பேஸ்புக், ட்விட்டர் போன்றவை தொழில்நுட்ப 
வடிவங்கள். அவற்றை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் 
பயன்படுத்தலாம். பேஸ்புக்கில் நல்ல செய்திகளை எழுதியும், நல்லவர்களுடன், 
அறிவாளிகளுடன் பழகியும் உலகத்தை உங்கள் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட 
முடியும். ஒரு தகவலை உலகில் உள்ள நண்பர்களுக்கு ட்விட்டரில் இலவசமாகப் 
பரப்பிவிடமுடியும். இதனைத் தனி மனிதத் தாக்குதலுக்கும், அரட்டைகளுக்கும், 
வசைபாடலுக்கும் பயன்படுத்தினால் அதற்குத் தொழில்நுட்பத்தைக் குறை 
சொல்லமுடியாது. பேஸ்புக்கில் சிங்கப்பூரின் சிம் பல்கலைக்கழகத்தின் 
நாட்டுப்புறவியல் பாடம் படிக்கும் மாணவர்கள் குழுவாக இணைந்து கல்வி 
வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதைக் கண்டு பாராட்டித்தானே ஆகவேண்டியுள்ளது.
அரசுத் தலையீடு இணையத்தில் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? தணிக்கை அவசியமா?
இணையத்தில் எழுதுபவர்களுக்கு 
சுயகட்டுப்பாடு அவசியமே தவிர அரசின் கட்டுப்பாடு தேவையில்லை. 
இணையத்துக்குக் கட்டுப்பாடு வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவர்கள் யார் 
என்று பார்த்தால் தவறு செய்பவர்களும் ஆட்சி அதிகாரத்தில் 
இருப்பவர்களும்தான். தாங்கள் செய்யும் தவறுகள் உடனுக்குடன் மக்கள் 
மன்றத்துக்கு வந்துவிடுகின்றதே என்று தவறு செய்பவர்கள் அஞ்சுகின்றனர். 
அண்மையில் பேஸ்புக்கில் ஒரு செய்தி படித்தேன். காவல் நிலையத்திலிருந்து 
தோசை வாங்கிவரும்படி ஒருதுண்டுச்சீட்டில் அரசாங்க முத்திரை போட்டு 
அனுப்பப்பட்டது. அதனை பேஸ்புக் நண்பர் ஒருவர் பார்த்து, படி எடுத்து 
இணையத்தில் பதிந்துவிட்டார். உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவிவிட்டது. 
இதுபோன்ற செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடத் தயங்கும்.
சைபர் குற்றங்கள்  பெருகிவருவதை எப்படித் தடுப்பது?
இணைய வழியாகக் காதலித்து ஏமாறுதல், போலி 
விளம்பரங்களைக் கண்டு ஏமாறுதல் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. 
இவற்றுக்கெல்லாம் சுயக்கட்டுப்பாடு வேண்டும்.பல குற்றச்செயல்கள் 
நடப்பதற்குரிய வழிகள் சமூகத்தில் திறந்தே உள்ளன. காவல்துறை, அரசியல், 
அதிகாரிகள், நீதித்துறை ஆகியவை தவறானவர்களுக்கு உடந்தையாக இருப்பதால் 
சமூகத்தில் பல தவறுகள் நடக்கின்றன. தண்டணைகளைக் கடுமையாக 
அமுல்படுத்தும்போது தவறுகள் நடக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும். வளர்ந்த 
நாடுகளிலும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் 
அரிய நூல்கள் மின்மயப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன.  அது போன்ற 
முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்படுகின்றனவா?
தமிழ் நூல்களை யாரும் காசுகொடுத்து 
வாங்கவேண்டிய தேவை இன்று இல்லை. தேவையான பல நூல்கள் இணையத்தில் இலவசமாக 
உள்ளன. மதுரைத்திட்டம், நூலகம்.ஆர்க், தமிழம்.நெட், தமிழ் மரபு அறக்கட்டளை,
 தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளம் ஆகியவற்றிலும் இன்னும் சில தனியார் 
இணையத்தளங்களிலும் தமிழ் நூல்கள் மின்மயப்படுத்தப்பட்டுப் 
பாதுகாக்கப்படுகின்றன. நாமும் நம் நூல்களை அச்சில் வெளியிட்டு அழகு 
பார்ப்பதுபோல் மின்னூல்களாக வெளியிட்டு விற்பனைக்கு வைக்கலாம். புகழ்பெற்ற 
பதிப்பகங்கள் இந்தப் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளன.
புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா?
பொதுவாக புத்தகம் படிக்கும் பழக்கம் 
குறைந்துவருகின்றது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடநூல்களைத்
 தவிரப் பிற நூல்களைப் படிப்பதில்லை. பலர் நூலகம் பக்கமே செல்வதில்லை. 
செய்தித்தாள்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 
முன்பெல்லாம் பெண்கள் வீடுகளில் ஆனந்த விகடன், குமுதம், ராணி போன்ற 
பொழுதுபோக்கு இதழ்களைப் படிப்பார்கள். இன்று தொலைக்காட்சித் தொடர்களால் 
இந்த இதழ்களைப் படிப்பதும் குறைவாகவே உள்ளது. புத்தகக் கண்காட்சியில் 
விற்பனையை வைத்துப் படிக்கும் பழக்கத்தை முடிவு செய்தால் அது சரியான 
முடிவாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.
நீங்கள் எழுதிய பிற புத்தகங்கள் பற்றிச் சொல்லுங்கள்.
மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், 
அயலகத் தமிழறிஞர்கள், நாட்டுப்புறவியல், பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி 
பாரதிதாசன் பரம்பரை, விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் உள்ளிட்ட
 19 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளேன். படைப்பு நூல்கள், 
ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள் என்று பல வகையில் என் நூல்கள் அடங்கும்.  
அயலகத் தமிழறிஞர்கள் என்ற நூலில் 31 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை 
எழுதி வெளியிட்டேன். அடுத்தடுத்த தொகுதிகளையும் எழுத நினைத்தேன். முதல் 
தொகுதியின் ஆயிரம் படிகளும் வாங்குவார் இல்லாமல் வீட்டில் தேங்கியது. அரசு 
நூலகத்துறையோ, தனியார் நூலகங்களோ ஆதரிக்காததால் என் நூல் எழுதும் முயற்சியை
 நிறுத்திக்கொண்டேன். இருந்தாலும் எழுத வேண்டியவற்றை இணையத்தில் எழுதி 
வெளியிட்டு வருகின்றேன்.
இணையப் பயன்பாட்டின்மீது எப்படி உங்களுக்கு இவ்வளவு  ஆர்வம்  ஏற்பட்டது?
என் பிறந்த ஊர் கங்கைகொண்டசோழபுரத்துக்கு 
அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர். தொடக்கக்கல்வியை என் பிறந்த 
ஊரையடுத்துள்ள உள்கோட்டையிலும், மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசு 
மேனிலைப் பள்ளியிலும் பயின்றேன். மூன்றாண்டுகள் விவசாயத்தில் 
ஈடுபட்டிருந்தேன். பிறகு அருகில் இருந்த திருப்பனந்தாள் 
செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றேன். முதுகலையும் அங்குதான் 
பயின்றேன். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படிப்பும், 
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வும் 
முடித்துள்ளேன்.
நான் இதழியல் துறையிலும், 
நாட்டுப்புறவியல் துறையிலும் ஈடுபாடுகொண்டவன். எனக்குப் பலதுறை அறிவு 
இருந்தாலும் என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தமிழகத்தின் கல்வி 
நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் கருத்துகளை உலகம் முழுவதும் 
உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ள இணையம்தான் ஏற்ற கருவி என்று உணர்ந்ததால் 
இத்துறையில் நுழைந்தேன். இணையத்தில் நுழைந்து பார்த்தபோது (2007 அளவில்) 
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கருத்துடையவர்களே இணையத்தில் 
கோலோச்சிக்கொண்டிருந்தனர். தமிழ் சார்ந்த செய்திகள் எதுவும் இணையத்தில் 
இல்லை.
குறிப்பாக உ.வே.சா, பாவாணர், 
பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் பணிகள் இணையத்தில் 
பதியப்பெறாமல் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் பற்றிய 
உரையாடல்களும் தகவல்களும் மட்டுமே இணையத்தை ஆட்கொண்டிருந்தன. இந்த நிலையில்
 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்கில் பல 
அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இணையத்தில் எழுதினேன்.
நான் ஒருவனே தமிழ் அறிஞர்களின் 
வாழ்க்கையையும் தமிழகத்தின் அரிய செய்திகளையும் எழுதிச் 
சேர்த்துவிடமுடியாது. எனவே பலரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ் 
இணையப் பயிலரங்குகளைத் தமிழகம், அந்தமான், மலேஷியா, சிங்கப்பூர் என்று பல 
இடங்களில் நேரடியாக நடத்தியும், தொலைபேசி வழியாகச்சொல்லியும் பலரை 
இணையத்தில் எழுதப் பழக்கினேன்.
என் முயற்சியால் பலர் தமிழ் சார்ந்த 
செய்திகளை இணையத்தில் எழுதிவருகின்றனர். இதுவரை தமிழகத்தின் பள்ளிகள், 
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிலரங்குகளை 
நடத்திப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம்
 செய்துள்ளேன்.
கணினி, இணையம் சார்ந்த பாடநூல்கள் 
தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு
 அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடநூல்கள் கணினிப்பொறியாளர்களுக்கே 
விளங்கிக்கொள்ளமுடியாதபடி கடுமையான நடையில் உள்ளன. வன்பொருள் தயாரிப்பு, 
கணினியின் இயக்கம், பழுது பார்ப்புக்கு உரிய அளவில்தான் பாடநூல்கள் உள்ளன. 
கணினி, இணையத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை  கல்வியை எளிமைப்படுத்தும் 
வகையில் பாடநூல்கள் இல்லை என்பதை உணர்ந்தேன். இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள 
பாடநூல்களைக் கண்டு மாணவர்களும் அதனை நடத்தும் ஆசிரியர்களும் அஞ்சி 
நடுங்குகின்றனர்.
கணினி, இணையம் என்றால் வேண்டாம் என்று 
தமிழ் படிக்கும் மாணவர்கள் மருண்டு ஓடுவதால் எளிமையாக இணையத்தை அறிமுகம் 
செய்து கணினி முன்னால் அமர்வதற்குரிய எளிய நடையில் இணையம் கற்போம் என்ற 
நூலை எழுதினேன். ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களே இந்த நூலின் உதவியுடன் 
இணையப் பயன்பாட்டை அறிந்துகொள்ள முடியும். பொதுமக்களும் இந்த நூலைப் 
பயன்படுத்தி இணையத்தை அறியலாம். இந்த நூல் கோவை பாரதியார் 
பல்கலைக்கழகத்திலும், தமிழகத்தின் பிற கல்லூரிகளிலும் பாடநூலாக 
வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்கால இலக்கு?
தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமான 
இலக்கியம், இலக்கணம், இசை, பண்பாடு சார்ந்த செய்திகளை இணையத்தில் பதிந்து 
தமிழர்களுக்கான உண்மைத் தகவல்கள் உலகில் அனைவருக்கும் கிடைக்கும்படி 
செய்வது என் இலக்காகும். அதுபோல் தமிழர்கள் அனைவரும் இணையப் பயன்பாட்டை 
அறிந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் இணைவதற்குரிய முயற்சிகளை
 முன்னெடுப்பதும் என் இலக்காகும்.
தமிழகத்தில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை. 
அறிவு வளத்துக்குப் பஞ்சமில்லை. பண்பாடும், பழக்க வழக்கங்களும், கலைகளும், 
நாகரிமுகம் தமிழகத்தில் நிறைந்துள்ளன. அதுபோல் அரிய நூல்களும் தமிழகத்தில் 
எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு வழங்கவேண்டும் என்றால்
 இணையத்தில் பதிந்துவைக்கவேண்டும்.
கிழக்குப் பதிப்பகம் இலவசமாக வழங்கும் என்
 எச் எம் ரைட்டர் என்ற மென்பொருளைப் பயிலரங்குக்கு வருபவர்களுக்கு இலவசமாக 
வழங்கி அனைவரையும் தமிழில் தட்டச்சுப் பயிற்சிக்குத் 
தயாராக்கிவிடுகின்றோம். அடிப்படையான தமிழ்மென்பொருள்கள் பல இலவசமாகவே 
கிடைக்கின்றன. ஆனால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பல மென்பொருள் 
நிறுவனங்கள் அடிப்படை மென்பொருள்களைக் கூடக் காசுக்கு விற்பனை செய்கின்றன. 
இணையப் பயன்பாட்டைப் பெற யாரும் செலவு செய்யத் தேவையில்லை என்பதுதான் 
கருத்தாகும்.
இந்த தகவல் ஆழம் எனும் இணையத்தளத்தில் இருந்து  பலரும் அறிய பகிரப்படுகிறது. 
 
No comments:
Post a Comment