Blogger Widgets

Total Page visits

Monday, May 27, 2013

கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் நடப்பாண்டில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர, மாணவர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பர்.

பி.காம்., படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகள், பி.காம்., படிப்பை, பல புதிய பெயர்களில் உருவாக்கி, சுயநிதி பாடப்பிரிவுகளாக வழங்குகின்றன.

உதாரணமாக, முன், பி.காம்., (ஜெனரல்) படிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஹானர்ஸ் என, பல பெயரில் சுயநிதி பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதனால், பி.காம்., படிப்பிற்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரதியார் பல்கலையில் மட்டும், 13 வகையான பி.காம்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளங்கலை அறிவியல் பாடப்பிரிவிலும், உயர் இயற்பியல், உயிர் வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், மருத்துவ உயிர் வேதியியல், கரிம வேதியியல், கொள்கை இயற்பியல் துறை என, அடிப்படை அறிவியல் படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகள் எனக் கூறி, பல சுயநிதி பாடப்பிரிவுகளையும், புதிதாக பல கல்லூரிகள் துவங்குகின்றன. இதனால், கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், அனைத்து பாடங்களுக்கும் ஒரே விண்ணப்பமே வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், கடந்த வாரத்தில் துவங்கியது.

ஜூன், 7ம் தேதி வரை, விண்ணப்ப வினியோகம் இருக்கும் நிலையில், இதுவரையில் மட்டுமே, கடந்த ஆண்டை விட அதிக அளவு விண்ணப்பங்கள் விற்பனையாகிவிட்டது. சேலம் அரசு மகளிர் கல்லூரியில், கடந்த ஆண்டு, 3,000 விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டுக்கு இதுவரை, 3,500 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

சென்னை மாநில கல்லூரியில், 7,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அனைத்து விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன. புது கல்லூரியில், 2,000 விண்ணப்பங்களும், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.

கடந்த ஆண்டை விட, விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, இன்ஜினியரிங் படிப்புகளுக்கும், நடப்பாண்டில் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டு, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீட்கள், இன்ஜினியரிங் கவுன்சலிங் முடிவில் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும், வங்கிகள் அளிக்க வேண்டிய கல்வி கட்டணம் குறித்து, மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி, பட்டியலை வெளியிடுள்ளது.

கட்டணம் செலுத்த முடியாமல், எந்தவொரு மாணவரும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. பள்ளி படிப்பை முடித்த பின், மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புக்கான செலவை, வங்கிகளில் கடனாக பெற்று படிப்பை தொடரவும், வேலைக்கு சென்ற பின் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என, எந்த உயர் கல்வியை பயிலவும், கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலையில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும். பல்வேறு படிப்புகளுக்கு, எவ்வளவு தொகையை கல்வி கடனாக வழங்க வேண்டும் என்ற சிக்கல் இருந்து வந்தது. 

இதனால், கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசு சார்பில், சிறப்புக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி முக்கிய அம்சங்களை ஆய்வு செய்து, கடந்தாண்டு, பல்வேறு படிப்புக்கு உரிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, வெளியிட்டது.

அதன்படி, பி.இ., மற்றும் பி.ஆர்கிடெக்சர் படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 40 ஆயிரம் ரூபாயும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதைபோல, எம்.இ., மற்றும் எம்.ஆர்கிடெக்சர் கவுன்சிலிங், நிர்வாக ஒதுக்கீடு மூலம் செமஸ்டருக்கு கட்டணம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு அரசு, நிர்வாக ஒதுக்கீடுக்கு செமஸ்டர், 15 ஆயிரம் ரூபாய், கல்வி கடன் அளிக்கப்படும்.

இதுமட்டுமல்லாது, எம்.பி.எஸ்., படிப்புகளுக்கு கல்லூரிகளை பொறுத்து இரண்டு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் தினமலர் வலை பக்கத்தில் இருந்து பக்கிரப்படுகிறது. 

No comments: