பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்கால
வேலை வாய்ப்புக்கு தகுதியான பாடங்களை பெற்றோர்களும், மாணவர்களும் தொலை
நோக்கு பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோர் மாணவர்களை
வற்புறுத்தியும், மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்தும், படித்தால்
எதிர்கால வாழ்வு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும், என கல்வியாளர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள், கடந்த 9ம் தேதி வெளியான நிலையில்,
கோவை, பொள்ளாச்சி இணைந்த வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 36,070 பேர்
எழுதினர்; 33,527 பேர் தேர்ச்சிபெற்றனர். மேல் படிப்புக்கான விண்ணப்பங்கள்,
அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல், மருத்துவம்
உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன.
இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்வி மீதான அதீத மோகம்
ஒருபுறம் இருக்க, தற்போது கலை, அறிவியல் பாடங்களின் மீதும் ஆர்வம்
அதிகரித்து வருகிறது. மாணவர்கள் விரும்பி படிக்கும் பாடம் ஒருபுறமிருக்க,
பல மாணவர்கள் பெற்றோர்களின் கட்டாயத்துக்கு உட்பட்டு பிடிக்காத படிப்புகளை
தேர்வு செய்கின்றனர்.
கட்டாயத்தின் பேரில் படிக்கும் மாணவர்கள், படிப்பில் ஆர்வம்
செலுத்துவதில்லை; முழு கவனம் செலுத்தாமல் படிப்பை முடிக்கின்றனர். அரை
குறையாய் படித்து முடிப்பதால், வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகிறது.
மாணவர்கள் தங்கள் தகுதி குறித்து தாங்களே கேள்வி எழுப்ப
வேண்டும். கணிதத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் ஒருவன், இன்ஜி.,
படிக்க முடியுமா என சிந்திக்க வேண்டும். அதிக பணம் செலுத்தியாவது
பிள்ளைகளுக்கு பிடிக்காத பாடப்பிரிவை தேர்வு செய்வதை பெற்றோர் தவிர்க்க
வேண்டும்.
உயர் கல்விக்கு பின், எதிர்கால வேலை வாய்ப்புக்கான
பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் பக்குவம் மாணவர்களிடம் குறைவு. பிறரின்
ஆலோசனையின் பேரில் பாடங்களை தேர்வு செய்யும் பெற்றோர்களும், மாணவர்களுமே
அதிகம். இருவரும் தொலைநோக்கு சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே வாழ்க்கை
பிரகாசமாக அமையும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
"பல பெற்றோர்கள் பக்கத்து வீட்டார் மற்றும் உறவினரின் ஆலோசனைப்படி பாடங்களை
வற்புறுத்தி படிக்க வைக்கின்றனர். மாணவர்களும் நண்பர்களின் வேத வாக்குக்கு
ஏற்பவும், அவர்களுடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் பாடங்களை தேர்வு
செய்கின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு, இப்போது
தெரிவதில்லை. கல்லூரி படிப்பை முடிக்கும் போது, எந்த பாடத்தில் எந்தெந்த
நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை
இருவருக்கும் தேவை. ஆர்வமுடன் தகுதியற்ற பாடங்களை படித்தால் எவ்விதத்திலும்
அது பயனில்லை.
எதிர்கால வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆராய்ந்து, அதன்படி
செயல்படுவதே நல்லது. இல்லையேல் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி
விடும்." இவ்வாறு, அவர் கூறினார்.
பல பெற்றோர்கள் பக்கத்து வீட்டார் மற்றும் உறவினரின்
ஆலோசனைப்படி பாடங்களை வற்புறுத்தி படிக்க வைக்கின்றனர். மாணவர்களும்
நண்பர்களின் வேதவாக்குக்கு ஏற்பவும், அவர்களுடன் படிக்க வேண்டும் என்ற
ஆர்வத்திலும் பாடங்களை தேர்வு செய்கின்றனர். இதனால் எதிர்காலத்தில்
ஏற்படும் பாதிப்பு, இப்போது தெரிவதில்லை.
Published in Dinamalar on may 16 2013
No comments:
Post a Comment