Blogger Widgets

Total Page visits

Tuesday, October 29, 2013

ஆடம்பரம் வேண்டாம்; அன்பு வேண்டும்!

உறவினர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் நலம் விசாரிக்கும் போது மனதில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை.

உறவினர் வீட்டில் வயது வந்த மகனோ, மகளோ இருந்தால் நம்ம வீட்டு விருந்து சாப்பாடு எப்போது? என உரிமையோடு நாம் கேட்பதுண்டு. உங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறதா? என்பதை அறிவதற்காக இப்படிக் கேட்பதுண்டு.

சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை கிராமங்களில்தான் பெரும்பான்மை திருமண நிகழ்வுகள் நடைபெறும். அவரவர் வீடுகளே திருமண மண்டபமாக அழகு பெறும்.

இங்கே நடைபெறும் திருமணங்களின் அழகு அதன் எளிமையில்தான் இருந்தது. வாசல்களில், தெருவின் முன்பகுதியில், வீட்டின் தோட்டப்புறத்தில் பசுந்தழைகளால் பந்தல் போட்டு அலங்கரிப்பர். அந்த அழகு தனியழகு. உற்றார் உறவினர் அனைவரும் உள்ளன்போடு வந்திருந்து திருமண நிகழ்வை நடத்தி முடிப்பார்கள். அதிலொரு சுகமுண்டு.

சமையல் வேலையிலிருந்து உணவுப் பரிமாறும் பணிகளையும், திருமணம் சார்ந்த பிற வேலைகளையும், அவரவர் பொறுப்பேற்றுக் கொண்டு முன்னின்று செய்வார்கள். திருமண நாளுக்கு இரண்டு நாள் முன்னதாகவே உறவினர்கள் வந்திருந்து பணிகளைத் தொடங்கி விடுவார்கள். திருமண வீடு மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்கும்.

திருமணத்தில் நடைபெறும் விருந்தில் அன்பு, மரியாதை, உறவு, உரிமை, சுவை அத்துணையும் சேர்ந்திருக்கும். திருமண வீட்டில் சாப்பிடச் செல்வதும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

காலம் மெல்ல, மெல்ல கடந்து திருமணங்கள் கிராமத்தைப் புறக்கணித்து விட்டன. அனைத்து வசதிகள், வாய்ப்புகள் இருந்தாலும் நகரத்தில் திருமணம் நடைபெறுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

இன்றைய திருமணங்களில் ஆடம்பரத்திற்கு மட்டுமே முதலிடம் தரப்படுகிறது. விருந்துக்கு மிகப் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. பரிமாறப்படும் உணவின் தன்மையில் தன் செல்வாக்கு, புகழ், பெருமை, செல்வச் செழிப்பு வெளிப்படும் என்னும் தவறான சிந்தனை வலம் வருகிறது.

திருமணத்திற்கு வந்தவர்களும் வந்தோம், பார்த்தோம், அன்பளிப்பு தந்தோம், சாப்பிட்டோம், தாம்பூலம் பெற்றோம் இதற்கு மேல் வேலை ஏது? என வந்த நோக்கத்தை மறந்து சிட்டாய்ப் பறக்கிறார்கள், நின்ற இடத்திலிருந்தே வாழ்த்தினை வீசி எறிந்துவிட்ட கடமை உணர்வும் முடிந்த நிலையில் பயணித்து விடுகிறார்கள்.

விருந்துகளில் பரிமாறப்படும் உணவு தற்காலங்களில் செயற்கை சுவை ஊட்டப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலை நிரம்ப பரப்பியுள்ள உணவில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொட்டுவிட்டுப் பெரும் பகுதி உணவை வீணாக்கும் அவலநிலையை எல்லாரும் அறிவர்.

பட்டினிக் கிடக்கும் பல வயிறுகளின் தஞ்சம் புகா உணவுகள் குப்பைமேட்டிற்குச் சென்று விடுகிறது. இலட்சக் கணக்கில் உணவுக்காக செலவிட்டு அதில் பாதியளவு வீணாக்கிச் சீரழைக்கும் அறியாமையிலிருந்து சமுதாயம் இன்னமும் விடுபடவில்லை.

புகழின் ஏக்கம், மரியாதை மயக்கம், பெருமித தள்ளாடல், ஆடம்பர அறியாமை இவைகளிலிருந்து திருமணங்கள் விடுபட வேண்டும். எளிமை, உரிமை, உறவு, நட்பு என்னும் அடிப்படை பண்புகள் வேரூன்ற வேண்டும்.

இயல்பான பண்புகள் மீண்டும் மலர வேண்டும். அந்த மலர்ச்சியில் நம் வீட்டுத் திருமணங்கள் மங்கலமாய் அமைய வேண்டும். இல்லையேல் மங்கலம் மங்கியதாய் ஆகும் சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம்.

No comments: