Blogger Widgets

Total Page visits

Monday, October 28, 2013

கடுமையான தண்டனை வேண்டும்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?' - இது ஒரு திரைப்படப் பாடல்.

குற்றம் புரிந்தவன் நிம்மதியாக இருக்க மாட்டான்; இருக்கவும் முடியாது. இருக்க நினைத்தாலும் மனம் இருக்கவிடாது. சதா அவனை பிறாண்டிக் கொண்டேயிருக்கும். அதனால்தான் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது' என்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்!

இப்போது அப்படியல்ல. குற்றம் செய்வதென்பது இனிப்பு சாப்பிடுவது போலாகி விட்டது. குற்றத்தை கண்டுபிடித்தால் பார்த்துக் கொள்ளலாமென்ற அலட்சியப் போக்கு மனதுள் படிந்துவிட்டது. சிறைச்சாலை என்பதை யார், எப்போது "மாமியார் வீடு' என்றார்களோ தெரியாது. இப்போது சிறைவாசம் அப்படித்தான் ஆகிவிட்டது. அது வீட்டை விட பாதுகாப்பான இடமாகவும், மூன்று வேளை நல்ல உணவும், இன்னும் பல வசதிகளும் கிடைக்கக் கூடிய இடமாக இருப்பதால், குற்றங்கள் மலிந்துவிட்டன!

சமீப காலமாக வீடு புகுந்து திருடுவது, கொலை செய்வது, நகைக் கடை கொள்ளை, பாலியல் வன்முறை என தினசரியைப் பிரித்தாலும், தொலைக்காட்சியைப் பார்த்தாலும் இதே செய்திதான்! இதற்கெல்லாம் என்ன காரணம்? கடுமையான தண்டனை இல்லாததும் தண்டனையை விரைவாக வழங்காததுமே காரணம்.

காவியுடை கதாநாயகர்கள் வலம் வந்து காமக் களியாட்டம் போட்டுக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது என எண்ணிக் கொண்டிருக்கும்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வரும் 72 வயது சாமியார், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இளைத்திருத்தல் துறவிக்கு அழகு. கொழு கொழு வென்றிருத்தல் குழந்தைக்குதான் அழகு. இப்போது நிலைமை தலைகீழ். ஊட்ட குறைபாடு காரணமாக குழந்தைகள் வலுவிழந்திருப்பதும் எல்லா வசதியும் கொண்ட சாமியார்கள் கொழுத்திருப்பதும் கண்கூடாக பார்க்கின்றோம்! எத்தனை சாமியார்களின் வேடத்தைக் கலைத்து சிறையில் அடைத்தாலும், இந்த மக்கள் திருந்துவதாகத் தெரியவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. பண பலம், அரசியல் பலம் மட்டுமின்றி நான்தான் கடவுள் என்று அருள்வாக்கு சொல்பவராகயிருந்தாலும் அவர் குற்றவாளியெனில் அவருக்கு விரைவாகவும் அதிகபட்சமாகவும் தண்டனை வழங்க வேண்டும்.

இப்போது நிதி நிறுவனங்களில் கோடி கோடியாய் மோசடி நடக்கின்றன. படித்தவர்கள் கூட ஏமாந்து போய், தான் இவ்வளவு கட்டியிருக்கிறோம் என்று ரசீது காட்டி காவல் துறையும் முறையிடுவதைப் பார்க்கிறோம். காவல் துறையும் தனிப்படையமைத்து குற்றவாளியைப் பிடித்து விடுகிறார்கள். பிடித்து வரும்போது குற்றவாளிகள் தங்கள் முகத்தை மறைத்து கொள்கிறார்கள். ஏழை பாழைகளிடமிருந்து சீட்டுப் பிடித்தல் என்றும் வைப்பு நிதி என்றும் பணம் பறிக்கும்போது வராத குற்ற உணர்ச்சி கைது செய்ததும் வந்து விடுகிறது போலும்! பொதுமக்கள் பார்த்துவிட்டால் தனக்கு அவமானம் எனக் கருதி குற்றவாளிகள் முகத்தை மூடிக் கொள்வதை காவல் துறை அனுமதிக்கக் கூடாது. தப்பு செய்தவர் யாரென்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏதோ ஒரு வழி (?!)யில் அவர்கள் வெளியே வந்தாலும், வேறெங்கும் போய் அதே மோசடியை செய்யாமலிருக்க மக்கள் முன் அடையாளம் காட்டப்படுவார்ககள். ஆகவே, குற்றவாளியை முகத்தை மூடி அழைத்து வரும் வழக்கத்தை காவல் துறை அனுமதிக்காமல் இருப்பதே, அவர்கள் அவமானத்தால் மனம் கூசி குறுகி திருந்துவதற்கான ஆரம்ப நிலை என கொள்ளலாம்!

நம் நாட்டில் நீதிக்கும் நேர்மைக்கும் பஞ்சமில்லை. நீதி வழுவாது ஆட்சி செய்தவர்கள் நம் மன்னர்கள். தண்டனை என்ற பெயரில் ஐந்து வருடமோ ஏழு வருடமோ சிறையிலடைத்தால் குற்றவாளி திருந்தி வருவான் என்பது நிச்சயமல்ல. ஏனெனில் சிறைவாசம் இப்போது சொகுசாக இருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் இருக்கிறோம் என்ற கஷ்டத்தைத் தவிர வேறெந்த வேதனையோ குறையோ அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள், "போதுமடா சாமி, இனிமே இந்தப பக்கமே வரக்கூடாது என்று உணரும் வண்ணம் சிறைவாசம் அமைய வேண்டும்; அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

No comments: