தொலைபேசி என்றாலே எட்டாக்கனியாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு
குடும்பத்தின் கௌரவத்தை நிர்ணயிக்கும் அளவு கோலாகவும் தொலைபேசி இணைப்புகள்
இருந்தன. அந்தக் காலங்களில், நகரப் பகுதிகளிலேயே தொலைபேசி இணைப்பு
பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
கிராமப் பகுதி என்றால் சொல்லவே வேண்டாம். அங்கு பிரமுகர்கள் ஒன்றிரண்டு
பேர் வீட்டில் தொலைபேசி இணைப்பு காணப்படும். அதிலும், உள்ளூருக்கு பேசும்
வசதி மட்டுமே கொடுக்கப்படும். வெளியூருக்கு பேசுவதற்கு தொலைபேசி
இணைப்பகத்தை தொடர்பு கொண்டு காலையில் பதிவு செய்தால், இரவுக்குள்
சம்மந்தப்பட்ட எண்ணுக்கு பேசுவதற்கான இணைப்பு கொடுக்கப்படும். அந்த
அளவுக்கு தொலைபேசியில் பேசுவது என்பது அரிதாக இருந்தது.
இன்றைக்கு கூலி வேலை செய்வோர் முதல் உலகில் முதல் நிலை பணக்காரர் வரை
கைபேசிகள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் கைபேசியின்
பயன்பாடு பல்கிப் பெருகியுள்ளது.
இந்த அளவுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் பெருகிவருவது ஆரோக்கியமான விஷயமாக
இருந்தாலும், சில அலைபேசி நிறுவன அலுவலர்களின் முறைகேடான செயல்களால்
பல்வேறு தரப்பினரும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நண்பர் ஒருவர் 3ஜி இணைப்பு போஸ்ட்பெய்ட் சிம் அட்டை ஒன்றை 2012-இல்
வாங்கினார். மாதந்தோறும் கட்டணம் 4 ஆயிரம் ரூபாயை கடந்து சென்றதால், சில
மாதங்களிலேயே அந்த சிம் அட்டையை அருகிலுள்ள தனியார் கைபேசி நிறுவனத்தின்
அங்கீகரிக்கப்பட்ட அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டார். அடுத்த சில நாள்களில்
நண்பரின் மற்றொரு இணைப்பில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பெங்களூர்
மையத்திலிருந்து ஓர் இளம்பெண் பேசியுள்ளார். நீங்கள் மீண்டும் அதே எண்ணில்
பிரீபெய்ட் சிம் அட்டையாக மாற்றிக் கொள்ளுங்களேன் என வலியுறுத்தியுள்ளார்.
ஐயோ ஆளை விட்டால் போதும் என நண்பர் கூறியும், அருகிலுள்ள மையத்துக்குச்
சென்று 2 ரூபாய் மட்டும் செலுத்தி, பிரீபெய்ட் சிம் அட்டையை அதே எண்ணில்
பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். நண்பரும், அத்தோடு அந்த பேச்சை மறந்து
விட்டார்.
இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மீண்டும் அதே நிறுவனத்தின்
சார்பில் பெங்களூரிலிருந்து பேசுவதாக ஓர் இளம்பெண் நண்பரின் கைபேசி எண்ணில்
பேசியுள்ளார். மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறோம். இன்னும் 2 தினங்களில்
அருகிலுள்ள மையத்துக்குச் சென்று பிரீபெய்டு சிம் அட்டை பெற்றுக்
கொள்ளுங்கள் எனக்கூற, நண்பர்..அம்மா ஆளை விடுங்க என மறுத்துள்ளார். மறுநாள்
திடீரென நண்பரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஏற்கெனவே ஒப்படைத்த(சரண்டர்) சிம்
அட்டைக்கான கட்டணம் என சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கு ரசீதை அனுப்பியுள்ளனர்.
உடனடியாக நண்பரும், நிறுவனத்தில் ஒப்படைத்த சிம் அட்டைக்கு கட்டணம்
செலுத்தக் கூறுவது முறைகேடான செயல், மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல்
ஏற்படும் என எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதை ஏற்றுக்கொள்வது
போன்று, அந் நிறுவன பொறுப்பு அதிகாரி ஒருவர் மன்னிப்பு கேட்பது போன்று
பதில் மின்னஞ்சலை முதலில் அனுப்பியுள்ளனர். அடுத்தடுத்த சில நாள்களில்
நண்பரின் உபயோகத்திலுள்ள அலைபேசி எண்ணில் பேசிய அந் நிறுவனத்தில்
பிரதிநிதிகள், மேற்கண்ட தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை
எடுப்போம் என மிரட்டியுள்ளனர். அடுத்த நாளிலேயே வழக்குரைஞர் மூலம்
எச்சரிக்கை அறிவிக்கையும் அனுப்பியுள்ளனர். நண்பரும் பதிலுக்கு வழக்குரைஞர்
ஒருவர் மூலம் நியாயத்தை சுட்டிக்காட்டி, மானநஷ்ட தொகை கேட்டு
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளார்.
அந்த அறிவிப்பாணைக்கு பதில் அனுப்பாத நிறுவனத்தினர், மீண்டும்
அலைபேசியில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என
பழைய பல்லவியை பாடி வருகின்றனர். முடிவு என்ன ஆகுமென்று தெரியவில்லை. இதே
போன்று பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
முறைகேடான செயல்களில் தங்களது ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபடுவதைக்
கட்டுப்படுத்த தனியார் அலைபேசி நிறுவனத்தினர் தக்க நடவடிக்கை எடுப்பதே
ஆரோக்கியமான தொலைத் தொடர்பு சேவைக்கு வழிவகுப்பதாக அமையும்
No comments:
Post a Comment